• கதவுகள் இல்லாத குளியல் அறைக்கு குளிக்கப் போகிறாள் பார்வதி. புராண காலத்திலேயே குளியலறை இருந்திருக்கிறது. ஆனால் கதவு மட்டும் இல்லை. ‘சோப்பு’ தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தக் கதை தெரிந்தால் ‘இதுதான் பார்வதி குளித்த’ சோப் என்று தொலைக்காட்சி விளம்பரம் வந்திருக்கும். இனி அப்படி ஒரு விளம்பரம் வந்தாலும் வியப்பதற்கு இல்லை.

• குளியலறைக்குள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கு ‘வாட்ச்மேன்’ ஒருவனை பார்வதி தயார் செய்திருக்கிறார். அந்த ‘வாட்ச்மேன்’தான் ‘விநாயகன்’. பார்வதி எனும் பெண் குளிக்கும் இடத்துக்குள் ஒரு ஆண் நுழைந்து விடாமல் தடுக்க ‘வாட்ச் வுமன்’ (Watch Woman) ஒருவரை தயார் செய்யாமல், ஏன் ‘வாட்ச்மேன்’ என்ற ஆண் நபரை தயார் செய்தார் என்று பெரியார் கேட்கிறார். அற்புதமான கேள்வி!

            நட்சத்திர ஓட்டல் குளியலறைக்குள்ளும் சில ‘பெண்கள் விடுதி குளியலறைகளிலும் ‘சி.சி. டி.வி.’ கேமிராக்கள் திருட்டுத்தனமாக பொருத்தப்படுகிறது என்ற செய்திகள் அவ்வப்போது வருகின்றன. பரமசிவன் என்று ஒரு கடவுள் இப்போது இருந்திருந்தால் ‘இரகசிய சி.சி.டி.வி காமிரா’வுக்கு ஏற்பாடு செய்திருப்பான். விநாயகன் கதைக்கே வேலை இல்லாமல் போயிருக்கும். விநாயகன் சிலை ஊர்வலமும் இருந்திருக்காது.

• பார்வதி உற்பத்தி செய்த ‘விநாயகனின்’ மூலப் பொருள் அழுக்கு. அழுக்கு கடவுள் உற்பத்திக்கான கச்சாப் பொருளாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பம் நமது புராண காலத்திலேயே இருந்தது என்ற தகவலை, நமது ‘பாரதப் பிரதமர்’ மோடியின் கவனத்துக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம். அடுத்து அவர் பங்கேற்கவிருக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்த புராண காலத்து அறிவியல் பெருமையை மார்தட்டிக் கூறுவார் அல்லவா?

• பார்வதியால் இவ்வளவு தடைகள் போடப்பட்டிருந்தாலும்கூட பரமசிவன் ‘என்ட்ரி’யை தடுக்க முடியவில்லை. குளியலறைக்குள் தன்னை உள்ளே போகக் கூடாது என்று மிரட்டிய ‘விநாயகனை’, ‘என்கவுன்டரில்’ போட்டுத் தள்ளிவிட்டு பரமசிவன் குளியலறைக்குள் நுழைந்து விட்டான். அங்கே தான் சிவன் நிற்கிறான் போங்க!

• ‘என் கவுன்டரில்’ தலையை இழந்து நின்ற விநாயகனைப் பார்த்து பார்வதி பதறிப் போனாள். ‘நான் உருவாக்கிய விநாயகனின் தலை போய்விட்டதே’ என்று அழுது புரண்டாள். மனித உரிமை ஆணையம் அன்று இல்லை. இருந்திருந்தால் புகார் தந்திருப்பாள்!

விநாயகன் ‘கொடுத்து வைத்தவன்’ அப்போது தலையை மட்டும்தான் இழந்தான். இப்போது கதையே வேறு! இந்த இந்து முன்னணிகள் அதையும் தாண்டிய சித்திரவதைகளை ஈவிரக்கமின்றி செய்கிறார்கள்.

கடலில் கரைக்கப்படும் பரிதாபத்துக்குரிய அந்த விநாயகனைப் பார்த்தால் கண்ணீர் தான் வரும். கால்களை தலைகளை வயிற்றை அடித்து உடைத்து நசுக்கித்தான் விநாயகனை கடலுக்குள் தள்ளுகிறார்கள். விநாயகனுக்கு நடக்கும் இந்த சித்திரவதைகளைக் கண்டு கைதட்டி, விசில் அடித்து, ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று தொண்டை கிழிய முழங்குகிறார்கள். “இதுவா கடவுள் பக்தி? இதுவா, தேசபக்தி?” என்று கேட்டால் ‘மத விரோதி; தேச விரோதி’ என்று எகிறி குதிக்கிறார்கள்.

புராண காலங்களிலேயே வனவிலங்குகள் சட்டம் மீறப்பட்டிருக் கிறது. யானையின் தந்தம் இப்போது வெட்டப்படுகிறது என்றால் பரமசிவன் தலையையே வெட்டி ‘விநாயகனுக்கு’ பொருத்தியிருக் கிறான், பாருங்கள். இதற்கும் நமது மோடி பெருமை பேசுவார்தான்!

மனிதனுக்கு யானை தலையைப் பொருத்திய ‘உறுப்பு மாற்று’ மருத்துவம் புராண காலத்திலேயே வந்து விட்டது என்று பூரித்துப் பேசியிருக்கிறார், இருக்காதா?

சொல்லப் போனால் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் ஒரு கார்ட்டூன் படத்துக்கான கதை, திரைக்கதைகளின் அம்சம் கொண்டவன் விநாயகன். அந்த விநாயகனுக்குத்தான் இந்த பக்தி இவ்வளவு பதட்டம்!

- கோடங்குடி மாரிமுத்து