இப்போது ஈழத் தமிழர் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை விளக்கி யாழ்ப்பாண கத்தோலிக்க சபையின் அருட்தந்தை எஸ்.வி. மங்கள ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையில் ‘நீதி மற்றும் அமைதிக்கான ஆணையம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

•             தமிழர்களை சிறையிலிருந்து விடுதலை செய்வதாக கூறிவரும் இலங்கை அதில் உண்மையாக இல்லை. விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ‘இராணுவ மறுவாழ்வு முகாம்’ என்ற முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள்.  அங்கே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மனநல சிகிச்சை தரப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இந்த முகாமுக்கு அனுப்பப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகள் திடீர் திடீரென்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். இப்படி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 107 பேர். இவர்களுக்கு உயிருக்கு ஆபத்துகளை உருவாக்கக்கூடிய ‘நச்சு’ மருந்துகளை ஊசி வழியாக செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் அவர்களே இந்த சந்தேகத்தை எழுப்பி சர்வதேச மருத்துவ நிபுணர் குழு ஒன்றை அமைத்து, விடுதலையான போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

•             சிறையில் உள்ள போராளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக பல்வேறு ஊர்களுக்கு அழைத்து அலைகழிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு வழக்கிலிருந்து மட்டும் விடுதலை செய்துவிட்டு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துவிட்டதாக அரசு உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

•             அனுராதாபுரம் சிறையில் இப்போது 23 தமிழர்களை விடுதலை செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தங்களை, விடுதலைக்குப் பிறகு ‘இராணுவ மறுவாழ்வு’ முகாமுக்கு அனுப்பக் கூடாது என்று சிறைக்குள் தமிழர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

•             தமிழர்களுடைய நிலங்களை சிங்கள இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. நல்ல விவசாயம் செய்யக் கூடிய நிலங்களும், கடல் ஓரப் பகுதியில் மீன் பிடித்  தொழில் செய்து வந்த தமிழர்களின் நிலங்களும் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றன. கிளிநொச்சியில் 20,000 ஏக்கர் நிலங்களை இராணுவமே ஆக்கிரமித்திருக்கிறது. வடக்கு மாகாணத்தில் இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்சேனா நாயகா வலிகாமப் பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள 4500 ஏக்கர்  நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட விடுவிக்க மாட்டோம் என்று கடந்த வாரம் அறிவித்திருக்கிறார்.

•             உலக நாடுகளை ஏமாற்ற, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ‘தனி அலுவலகம்’ ஒன்றை இலங்கை அரசு அமைத்திருக்கிறது. ஆனால், அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டிருக்கிறது.  வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், கொழும்புக்குப் போய் காணாமல் போனவர்களை எப்படி பதிவு செய்ய முடியும்? இந்த அலுவலகத்தை தமிழர் பகுதியிலேயே திறக்கப்படக்கூடாதா என்று கேட்கிறார்கள். இலங்கை மறுக்கிறது. இந்த அலுவலகத்துக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் இலங்கை அரசு வழங்கவில்லை.

•             கிளி நொச்சி மாவட்டத்தில் 104 பள்ளிகள் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 485 குழந்தைகள் போரில் தாய், தந்தை இருவரையுமே இழந்தவர்கள், பெற்றோரில் ஏதேனும் ஒருவரை இழந்தவர்கள், ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை உடலில் ‘ஷெல்வீச்சு’ துகள்களோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவது இல்லை - என்று அருட்தந்தை மங்களராஜா விடுத்த அறிக்கை கூறுகிறது.

‘தி இந்து’ நாளேட்டில் அகிலன் கதிர்காமர் எழுதிய ஒரு கட்டுரையில் தமிழர்களின் அவல நிலையை விவரிக்கிறது:

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி, ‘சிறிசேன - விக்ரமசிங்க அரசு’ கொண்டு வந்த 2016ஆவது ஆண்டு பொது வரவு-செலவு அறிக்கையை ஆதரித்தே வாக்களித்தது. அப்படியிருந்தும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட் டிருக்கிறது. மறுகுடியமர்வு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் 1,400 கோடி இலங்கை ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது இலங்கை அரசின் மொத்த வரவு-செலவில் வெறும் 0.5 சதவீதம்தான். இலங்கையின் வடக்கில் தமிழர் வாழும் பகுதியில் ஏற்பட்ட சேதங்களைக் களைந்து, மறுகட்டமைப்புகளை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருந்த நன்கொடையாளர்கள் மாநாட்டை எந்தவிதச் சந்தடியும் இல்லாமல் இலங்கை அரசு இரத்து செய்துவிட்டது.

ஓராண்டுக்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மொத்தம் 65,000 வீடுகளைக் கட்ட இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. அந்த முடிவை சீர்குலைக்கும் வகையில் வேறு ஒரு முடிவு எடுத்தது. புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பதிலாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில், ஆர்சிலர் மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து முன் கூட்டியே கோக்கப்பட்ட உருக்கு வீடுகளை வாங்குவதென்று அரசு தீர்மானித்தது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இலங்கையின் வடக்கிலேயே சிமென்ட் பயன்படுத்தி பாதிச் செலவில் நல்ல வீடு கட்ட முடியும் என்ற நிலையில், தயார் நிலையிலான உருக்கு வீடுகள் எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. சிமென்ட் பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டால், இலங்கையின் வடக்குப் பகுதியும் வளம்பெறும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கும் வேலை கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து வீடுகள் கட்டும் திட்டங்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் வடக்குப் பகுதியை ஒரு முறை சுற்றிவந்தால், பளபளவென்று பளிச்சிடும் சாலைகளும், நகர்ப்புறங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் என்றழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகள், நிதி நிறுவனங்கள் என்று கண்ணில் படுவதால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட மாயத் தோற்றம் ஏற்படுகிறது. இந்தச் சாலைகளை விட்டு இறங்கி, சில மீட்டர் தொலைவு நடந்து தெருக்கள், சந்துகளில் நுழைந்து பார்த்தால் வறுமையும் பசியும் பட்டினியுமே கண்ணில் படுகிறது. அன்றாட வயிற்றுப்பாட்டுக்குக்கூடப் பணம் கிடைக்காமல், கடனில் ஆழ்ந்து கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

மக்களுடைய வருமானமும் வருமானம் பெறுவதற்கான வழிகளும் குறைகின்றன. தமிழர் பகுதிகளில் விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நசிந்துவருகிறது. வடக்கில் போர் நடந்த ஊர்களில் மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நாட்டிலேயே குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதம் முழுக்க வேலை செய்தாலும் மொத்தமாக ரூ.2,157கூடக் கிடைப்பதில்லை. மாவட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர் அளவுக்குக்கூட ஊதியம் பெறுவதில்லை. 2012, 2013-ல் எடுத்த கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது - என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.