உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் உரிமை தமிழுக்கும் வேண்டும் என்று போராடும் வழக்கறிஞர்களின் போராட்ட நியாயங்களை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் தங்களுக்காக வழக்கறிஞர் என்ன வாதங்களை முன் வைக்கிறார் என்பதோ, நீதிபதி என்ன கூறுகிறார் என்பதோ அறியாத ‘தற்குறிகளாக்கப் படுவது’ அவமானகரமானதாகும்.

இராஜஸ்தான், உ.பி., மத்திய பிரதேசம், பீகார், மாநில உயர்நீதிமன்றங் களில் வழக்காடு மொழியாக இந்திக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 348(2) பிரிவு மாநில மொழிகளை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இதற்கு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும்.

2002ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டார். ஆனால் நீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக்க மறுத்துவிட்டது. மீண்டும் 2006இல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வழக்காடு மொழியாக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. (அப்போது இந்தக் கோரிக்கையை எதிர்த்த தமிழ்நாடு நீதிபதிகளுக்கு எதிராக தமிழ் வழக்காடு மொழியை உறுதியாக ஆதரித்தவர் பீகாரைச் சேர்ந்த நீதிபதி முகோபாத்யாயா.) இதனடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், டில்லி அரசு இத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டவிதிகளை புறந்தள்ளி உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பியது. உச்சநீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் மறுத்ததோடு, “இந்தி வளரும் வரை ஆங்கிலம் இருக்கும்; அதற்குப் பிறகு, அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் இந்தியே வழக்காடும் மொழியாக இருக்கும்” என்று கூறிவிட்டார். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதினார். அப்படியே கடிதம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இத்தகவல்களை இந்தக் கோரிக்கைக்காக போராடிவரும் வழக்கறிஞர் பகத்சிங் ஒரு பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.

வெளி மாநிலத்திலிருந்து நீதிபதிகளாக வருவோருக்கு மாநில மொழி தெரியாது என்ற ஒரே காரணத்துக்காக மக்கள் மொழியைப் புறந்தள்ளுவதை ஏற்க முடியாது. அந்த நீதிபதிகளுக்கு மொழி பெயர்ப்பு வசதிகள் செய்யலாம். குழப்பம் இருக்குமிடங்களில் ஆங்கிலத்திலேகூட விளக்கங்கள் கேட்டுப் பெறலாம். மார்க்கண்டேய கட்ஜு, தமிழகத்தில் நீதிபதியாக வந்து தமிழ் கற்றதுபோல் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் அவ்வளவுதான்!

உயர்நீதிமன்றம் இந்தக் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தை நீதிமன்ற அவமதிப்பாக பார்க்கிறது. நம்மைப் பொறுத்தவரை இந்தக் கோரிக்கையைப் புறக்கணிப்பது தமிழக மக்களை அவமதிப்பதாகவே கருதுகிறோம்.