கடந்த சூன் மாதம் 24 தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள தொட்டிபாளையம் இரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்நிலையில் கோகுல்ராஜுடன் கல்லூரியில் படித்த சுவாதி என்ற இளம்பெண்ணும், கோகுல்ராஜின் தாயாரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலையில் இருவரும் திருச் செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென் றுள்ளனர்.

அவர்கள் வழி பாடெல்லாம் முடித்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேறும் போது தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அவர்கள் இருவரையும் அழைத்து மிரட்டி சுவாதியை கீழே அனுப்பிவிட்டு கோகுல்ராஜை மட்டும் காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இவையனைத்தும் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் சுவாதி கொடுத்த வாக்குமூலமும் காவல்துறையால் பதிவு செய்யப்பட் டுள்ளது. இருந்தும் காவல்துறை இவ்வழக்கில் மெத்தனம் காட்டுவதை உணர்ந்த கழகத் தலைவர் கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தின்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆகஸ்டு 17ஆம் தேதி கொலைக் குற்றவாளி யுவராஜை கைதுசெய்ய வலியுறுத்தி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏற்கெனவே பிடிபட்ட 11 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியது மாவட்ட நிர்வாகம். இதைத் தொடர்ந்து 17ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு திருச்செங்கோடு காவல் நிலையம் முன்பு யுவராஜை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நமது போராட்டத்தின் விளைவாக வழக்கில் மெத்தன போக்கை கடைபிடித்த காவல் ஆய்வாளர் சக்கரபாணி மதுவிலக்கு பிரிவுக்கு இலாக்கா மாற்றமும், நாமக்கல்லுக்கு இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நாம் தொடர்ந்து பிரசாரங்களிலும், தீர்மானங்களிலும் பேசியும், எழுதியும் வந்த ஆதிக்க ஜாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தலித் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நடைமுறைபடுத்தப்பட்டு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை புதிய ஆய்வாளராக நியமித்தது காவல் துறை. 17ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட் டத்தில் கழகத் தலைவர் பேசிய போது, கொலைகுற்ற விசாரணை பிரிவு-82இன்படி யுவராஜை தேடப் படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டு மென்றும், பிரிவு-83இன் படி அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவேண்டு மென்றும் வலியுறுத்தி பேசினார்.

அதன்படி காவல்துறை கடந்த வாரத்தில் யுவராஜின் வீட்டிலும், அலுவலகத் திலும் அவரை தேடப்படும் குற்றவாளிஎன்றும், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் காவல்துறையால் ஒட்டப்பட் டுள்ளது. கழகத்தின் தொடர் போராட்டத்தால் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.