kolathoor mani senkodi memorial

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மரணதண்டனையை எதிர்த்து, தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்ட ‘தழல் ஈகி’ செங்கொடியின் நினைவு நாள் செப். 28. செங்கொடியின் பொது வாழ்வகமாகிய காஞ்சி மக்கள் மன்றம், அன்று செங்கொடியின் நினைவுநாளை செங்கொடியின் இலட்சியத் திருநாளாக பின்பற்றியது. வெகு மக்களும் இயக்கங்களும் சாரை சாரையாக அணி வகுத்து, செங்கொடி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஈழத் தமிழர் விடுதலைக்கும், மரணதண்டனை ஒழிப்புக்கும் சூளுரைத்தனர்.

பிற்பகல் 4 மணியிலிருந்து மக்கள் மன்றத்தின் கலைக் குழுவினர், ஜாதி, மத எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு ஈழப் போராளிகளின் வீரங்களைப் பறை சாற்றும் எழுச்சி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ‘ஜாதி-பெண்ணடிமை’ ஒழித்த சமத்துவபுரியாக விளங்கும் காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அன்பைப் பரிமாறினர். 

காஞ்சி மக்கள் மன்றத்தின் அடுத்த இளைய தலைமுறை பறைகளை கையில் எடுத்தது; குழுக்களாக நடனமாடியது; பாடியது. மக்கள் தொண்டினை வாழ்க்கையாக்கிக் கொண்ட மன்றத்தின் செங்கொடி நினைவு நிகழ்வுகளில் அரசியல், சமுதாய இயக்கத் தலைவர்களும் பங்கேற்று, செங்கொடியின் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் உரையாற்றினர். இயக்கத் தலைவர்களின் வரிசையில் நிறைவுரையாற்றினார், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்கள் களப்போராளிகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பதை அவர் பட்டியலிட்டார்.

மரண தண்டனை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஈழ விடுதலை என்று இலட்சிய முழக்கங்கள் இசையாகவும் உரையாகவும் ஒலித்து செங்கொடியின் நினைவுகளை சுமந்து நின்றன. இதுவே செங்கொடிக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

மன்னையில் செங்கொடி நினைவு நாள்

திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு  அனுசரிக்கப்பட்டது.  திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மதிமுக நகர செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி ஆதவன், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் மருத செல்வராஜ், பாமக மாவட்ட தலைவர் சீனி தனபாலன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பௌத்தன், திக நிர்வாகிகள் சந்திரபோஸ், இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர். திவிக நிர்வாகிகள் சசிகுமார், கவிஞர் கலைபாரதி, நெடுவை வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர்தூவியும்,  மெழுகுவர்த்தி ஏந்தியும்  அஞ்சலி செலுத்தினார்கள்.

 கூட்டத்தில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி செங்கொடி  உயிர்நீத்தார். உலகத்திலேயே மரண தண்டனையை இரத்துசெய்ய வலியுறுத்தி தீக்குளித்த முதல் பெண்மணி செங்கொடியாவார்.  உலகம் முழுவதும் 160 நாடுகளில் மரணதண்டனை வழங்க வழி செய்கின்ற சட்டப்பிரிவு முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.  ஐ.நா, மன்றமும் இக்கோரிக்கையை வலியுறுத்துகின்றது காந்தியடிகள் முதல் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வரை மரணதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலந்தாழ்த்தாமல்  மத்திய அரசு இவர்களின்  கோரிக்கையை ஏற்று இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம்

23.8.2015 அன்று மாலை சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ‘சமகால வாழ்வியலும் ஜாதிய வன்கொடுமை களும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்சென்னை திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செல்வேந்திரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் இளையராஜா, தமிழ் இளைஞா மாணவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே. பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் ஜோ. பிரிட்டோ, மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.  நிகழ்ச்சி மாலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிதம்பரம் மதன்குமார் வரவேற்புரை வழங்கினார். செயப்பிரகாசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை கழகத் தோழர்களுக்கும் பாரி சிவா நன்றி தெரிவித்தார்.

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் அமைப்பாளர் பாரி. சிவா தலைமையில் 4.9.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவர் பணியில் அமர்த்தவும், இடை நீக்கம் செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக பல்கலையில் அனுமதிக்கவும வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள்  பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி நேப்பியர் பாலத்திலிருந்து முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 30 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாணவர் கழகம் பிரகாசு, ஆனந்த்ராஜ், செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு, பிரதிப், அருண், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாரிமுத்து, பிரகாசு, விழுப்புரம் அய்யனார், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, fdl செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கைதானார்கள்.