தமிழர்களை இனி ‘தமிழ் இந்து’ என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிவித்திருக்கிறார். சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் இந்த அடையாளங்களுக்குள் அடங்கும் என்று அவர் ‘தமிழ் இந்து’வுக்கு அடையாளங்களை வகைப்படுத்தி யிருக்கிறார். ஆரிய இந்துத்துவாவை எதிர்க்க இதுவே சரியான நிலைப்பாடு என்றும் விளக்கம் தருகிறார். ஆனால், அதற்கான விளக்கங்கள் எதையும் அவர் முன் வைக்கவில்லை.

‘ஆரிய இந்துத்துவா’வுக்கு மாற்று ‘தமிழ் இந்துத்துவா’ என்ற அடிப்படையில் தானே இருக்க வேண்டும்? அப்படிக் கூறாமல் மறைப்பது ஏன்? இவரைத் தடுப்பது எது என்று நமக்குத் தெரியவில்லை. பெரியாரையும் அவர் உருவாக்கிய பார்ப்பனிய எதிர்ப்புக் குறியீடான ‘திராவிடர்’ அடையாளத்தையும் தமிழ்நாட்டில் அப்புறப் படுத்துவதையே இலட்சியமாக்கிவிட்ட பிறகு முரண்பாடுகளும் குழப்பங்கள் தானே இந்த அமைப்புகளை வழி நடத்தும்.

‘திராவிடம்’ என்பதே ஆரியச் சொல்; திராவிடம் என்றாலே பார்ப்பனியம் என்று பேசியும் எழுதியும் வந்தது இவர்கள்தான். இப்போது தமிழ் மொழியோடு இணைத்திருக்கும் ‘இந்து’ என்பது மட்டும் தமிழ்ச் சொல்லா? ‘திராவிடமும் தமிழும்’ என்று பேசுவது ‘கருவாட்டுச் சாம்பார்’ என்று கிண்டலடித்தவர்கள் இப்போது ‘தமிழ் இந்து’வை முன்மொழிவதற்குப் பெயர் என்ன? ‘மாட்டுக்கறி சாம்பாரா?’

‘தமிழ் இந்து’ என்று தமிழர்கள் மீது பெ. மணியரசன் சுமத்தும் அடையாளத் துக்குப் பின்னால் பதுங்கி நிற்பது இரண்டு கோட்பாடுகள். ஒன்று - மதம் சார்ந்தது; மற்றொன்று - மண் சார்ந்தது; மதம் சார்ந்து பேசியவர், இறந்து போன காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி. மண் சார்ந்து பேசியவர் சாவர்க்கர். சங்கராச்சாரி கூறியது என்ன? சைவம், சமணம், வைணவம், எல்லை அம்மன் பக்தர்கள் என்ற தனித் தனிப் பிரிவினராக ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டிருந்த நிலையில், வெள்ளைக்காரன், ‘இந்து’ என்ற பொது அடையாளம் சூட்டி, நம்மையும் நமது வர்ணாஸ்ரமத்தையும் காப்பாற்றினான். நாம் அவனால் உயிர் பிழைத்தோம் என்றார். இப்போது பெ. மணியரசன், சைவம், வைணவம், நாட்டுப்புற தெய்வங்களை ஒன்றாக்கி, ‘தமிழ் இந்து’ என்ற பொது மத அடையாளத்தை வழங்க முன் வந்திருக்கிறார். இருவரின் நோக்கும் ஒரே நேர்க் கோட்டில் பயணிக்கிறது. இந்து அடையாளத்துக்குள் வந்து விட்ட பிறகு, அதன் உள்ளடக்கமான பார்ப்பனியத்தை - ஜாதியமைப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ‘தமிழ் இந்து’ - ஜாதியை - பெண்ணடிமையை ஒழித்து விடுமா?

இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்புப் பட்டியல் என்றார், அம்பேத்கர். இவர்கள் உயர்த்திப் பேசும் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகளும், நாவலர் சோம சுந்தர பாரதியாரும், திரு.வி.க.வும்கூட ‘இந்து’ என்ற சொல்லை ஏற்க மறுத்தார்கள். இப்போது காலத்தின் தேவையால் ‘இந்து’ அடையாளம் தேவைப்படுகிறது என்று வாதிடுகிறார் பெ. மணியரசன். பெரியாரையும் அவரது ஜாதிய பார்ப்பனிய எதிர்ப்புக்கான திராவிடர் அடையாளத்தை பலவீனப்படுத்திடும் நோக்கத்துக்காக - தேவைப்படுகிறது என்கிறாரா என்பது நமக்குப் புரியவில்லை. பா.ஜ.க.வே ‘இந்து’ அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாமல், படுதோல்வி கண்ட பிறகு, திராவிட எதிர்ப்பு காவிரி உரிமை - ஜாதிய அடையாளங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறது.

சரி; ‘தமிழ் இந்து’ அடையாளத்தோடு உருவாகும் தமிழ்த் தேசியத்தின் குடிமக்கள் யார்? இந்து அடையாளம் வேண்டாம்; சுயமரியாதை - சமத்துவம் - பெண்ணுரிமை என்ற அடையாளமே வேண்டும் என்ற கருத்துடைய பெரியாரிஸ்டுகள் பொதுவுடைமையாளர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்துக்குள் வர முடியாதா? பல தலைமுறைக்கு முன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு வெளியேறிய இஸ்லாமியர், கிறிஸ்தவர், பவுத்தர், ‘இந்து’ அடையாளத்தை ஏற்க வேண்டுமா? தமிழ்த் தேசிய குடிமக்களுக்கான ‘புதிய குடியுரிமைப் பதிவேடு’ ஒன்றை உருவாக்கப் போகிறார்களா? இப்படி பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன!

இந்து மதம் என்றாலும் இந்தியா என்றாலும் ஒன்று தான் என்றும் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்றும் அவர்கள் தாய் மதம் இந்து மதமே - என்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூறுகிறது. தமிழ்த் தேசியமும் தமிழ் ‘இந்து’வும் ஒன்று தான் என்று பெ. மணியரசன் கூறுகிறார். ஒற்றை ‘இந்தியா’வின் அடையாளம், ‘இந்து’ என்றாலும், ‘ஒற்றைத் தமிழ்த் தேசியத்தின்’ அடையாளம் ‘இந்து’ என்றாலும் இந்தத் தேசியங்கள் மக்களுக்கோ மக்கள் ஒற்றுமைக்கானதோ அல்ல என்பதே நமது உறுதியான கருத்து. சொல்லப் போனால் இது பாசிசத்தை நோக்கிய தேசியம்.

நிலப்பரப்புக்கு மொழி அடையாளம் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆனால், மத அடையாளம் மிக ஆபத்தானது. தமிழ்நாடு மற்றொரு ஆப்கானிஸ்தான் ஆக முடியாது. நிலத்தையும் மதத்தையும் இணைப்பது ‘இந்துத்துவம்’. மொழியை இந்த இணைப்புக்கான தடை ஆயுதமாக்க வேண்டுமே தவிர இணைப்புப் பாலமாக்கி விடக் கூடாது. அது நிலத்துக்கு பூசப்படும் மதச்சாயம் தான்; அதையே பெ.மணியரசன் இப்போது பேசுகிறார்.

கடவுள் - மதங்களில் நம்பிக்கை இல்லாத சாவர்க்கர், பல்வேறு மதக் குழுக்களை ஒன்றாக்கி இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, எதிர்க்க மிக தந்திரமாக ‘இந்துத்துவா’ என்ற அரசியல் கோட்பாட்டை நிலத்தின் அடிப்படையில்தான் உருவாக்கினார்.

திராவிடம் பொய்; ஆரியம் தான் உண்மை என்கிறது தமிழ்த் தேசிய பேரியக்கம். அதேபோல் இந்துத்துவா பொய். ஆனால் தமிழ் ‘இந்து’ மெய் என்று இப்போது அதே குரலில் பேசுகிறது. ‘இந்து’ இல்லாவிட்டால் இந்துத்துவம் என்ற ஒன்றே இருக்க முடியாது. ‘தமிழ் இந்து’ என்ற “மெய்யறத்துக்கு” வகுத்துள்ள வரையறை என்ன? தேவாரம், திருவாசகம் ஆதரவோடு முடிந்து விட்டதா? புரோகிதம், வேத சடங்குகள், புறக்கணிப்பு; மக்களை சிந்திக்கவிடாமல் தடுக்கும் மூடத்தன பூஜை முறைகள்; கிராமக் கோயில்களில் தலைவிரித்தாடும் ஜாதிய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு ‘தமிழ் இந்து’வுக்குள் அடங்குமா?

மொழி வழி தேசிய இனத்தை மதவாத தேசியமாக்கும் முயற்சியா? என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

ஏற்கனவே இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி; இந்து தமிழர் கட்சி என்ற பெயரில் பெரியாரையும் பார்ப்பனிய எதிர்ப்பு பேசும் திராவிடத்தை ஏசியும் பேசியும் வருகின்றன. இப்போது அந்த வரிசையில் ‘தமிழ் - இந்து’ பேரியக்கம் வந்திருக்கிறது.

பொதுவுடைமையில் தொடங்கி லெனின் பேசிய தன்னாட்சி உரிமை கோரி, பிறகு தமிழ்த் தேசியமாகி அதற்குப் பிறகு ‘பேரியக்கமாக’ தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டு - இப்போது ‘தமிழ் இந்து’ அடையாளத்துக்குள் வந்து சேர்ந்திருக்கிறது.

ஒரு நாட்டின் விடுதலைக்கான இலக்கு மக்களுக்கான விடுதலையே தவிர, மதங்களையும் பிற்போக்கு அடையாளங்களையும் சமத்துவத்தை மறுக்கும் பழம் பெருமைகளையும் போற்றிப் பாதுகாப்பது அல்ல.

தமிழ்நாடு ‘ஆர்.எஸ்.எஸ்.’ஸை எதிர்த்துப் போராடும் நிலையில் தமிழ் நாட்டிலேயே ‘தமிழ் ஆர்.எஸ்.எஸ்.’ முளைவிட முயற்சிப்பது கண்டனத்துக்குரியது; இது மக்கள் மன்றத்தில் முறியடிக்கப்படும்!

- விடுதலை இராசேந்திரன்