1971ஆம் ஆண்டு ஜன.23, 24ஆம் தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் முன்னிலையில் திராவிடர் கழகம் ஒரு புரட்சிகர தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘ஒருவரின் மனைவி மற்றொருவருடன் உடல் உறவு கொண்டால் - அதை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது’ என்ற அத்தீர்மானம் அப்போது பொது வெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தை ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன நாளேடுகள் திரித்து, ‘ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொண்டு போவது குற்றமல்ல’ என்று செய்தி வெளியிட்டன. இதை எதிர்த்து அந்த ஏடுகள் மீது திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் (சென்னை பெருநகர 5ஆவது நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பிறகும், மீண்டும் ஒரு முறை ‘இந்து’ நாளேடு, அதே போன்று ‘திரிபு’ செய்தியை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் அந்த ஏட்டின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ‘இந்து’ ஏடு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது (16.3.1971). இந்த வரலாற்றுக் குறிப்பை இப்போது நினைவூட்டுவதற்கும் காரணம் உண்டு.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி உச்சநீதிமன்றம் 1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை தனது தீர்ப்பின் வழியாக நியாயப்படுத்தியிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவு, கணவர் சம்மதம் பெறாமல், மனைவி வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இந்தப் பிரிவு பெண்களுக்கு எதிரானது, அது நீக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பது இந்த 497ஆவது பிரிவைத் தான்.

ஒரு மனைவி உடல் உறவு கொள்ளும் உரிமை கணவனிடம் மட்டுமே உண்டு. மீறுவது பாலுறவு வன்முறை (விபச்சாரம்) என்ற சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு பெரியார் கூறிய காரணத்தை இப்போது உச்சநீதிமன்றமும் ஒப்புக் கொண்டிருக்கிறது. கணவன் சம்மதித்தால் அது குற்றமாகாது என்றால் ஒரு பெண்ணின் உடல் கணவனின் சொத்து உடைமையாக்கப்படுகிறது. பிறருடன் கொள்ளும் உறவு ‘திருட்டுத்தனமானது’ என்கிறது. மனைவிக்கு மட்டுமே பேசும் இந்தக் ‘கற்பு, பெண்ணடிமையை வலியுறுத்துவதோடு, பெண் என்பவள் கணவன் இன்பத்துக்கான நுகர் பொருளாக்கப்படுகிறார். பெண் விடுதலைக் கண்ணோட்டத்தில் பெரியார் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார். இப்போது நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தனது தீர்ப்பிலும் இதே கருத்தையே பதிவு செய்திருக்கிறார். மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டை சுமத்தும் இந்தச் சட்டம், ஆண்களின் ஆதிக்கத்துக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது என்றும், பெண் தனக்கான பாலுறவு சுதந்திரத்தை தடுத்து வந்துள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடுகிறார்.

(The history of section 497 reveals that the law on adultery was for the benefit of the husband, for him to secure ownership over the sexuality of his wife. It was aimed at preventing the women from exercising her sexual agency)

‘கற்பு’ மனைவிக்கு மட்டுமே உரியது என்ற சட்டம், காட்டுமிராண்டித்தனமானது என்பதற்கு வரலாற்றிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார் நீதிபதி.

“பாபிலோனியா நாகரிகத்தில் இந்தக் ‘குற்றத்தை’ இழைத்த ஆண்-பெண் இருவரையும் தண்ணீரில் மூழ்கடித்து சாகடிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. கிரேக்க-ரோமானிய நாகரிகங்களும் இதேபோல் பெண்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின. ஆனால் ஆண்களுக்கு இந்தக் ‘குற்றங்களுக்கு’ தண்டனை கிடையாது. 1650ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டம், கணவன்-மனைவிக்கு வெளியிலான ‘உடலுறவு’க்கு பெண்களுக்கு மரண தண்டனையை சட்டமாக வைத்திருந்தது. அந்தக் கண்ணோட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவிலும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 21ஆம் நூற்றாண்டிலும் பெண்களுக்கான உரிமைகளைப் பறித்து வைத்திருக்க முடியாது. ஆனால், சமூகத்தின் மனநிலை பெண்களை ஒடுக்கி வைப்பதாகவே இருக்கிறது என்று நீதிபதி கூறியிருப்பதோடு, “சட்டமும் சமூகத்துக்கும் இடையிலான உறவு உள்ளார்ந்தது; பிரிக்க முடியாது பிணைந்திருக்கிறது (பெண்களை அடக்கி வைக்க வேண்டும்) என்ற சமூக மதிப்பீடுகள் சட்டங்களிலும் வெளிப்படுகின்றன. இந்த நிலையில் சட்டங்களும் சட்டங்களுக்கான விளக்கங்களும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் - விடுதலைக்கு உவப்பாகவும் பரிணாமம் பெற வேண்டும்” என்று மிக ஆழமாக நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பெரியார் இதே கருத்தை தனது மொழியில் இப்படி கூறுகிறார்:

“விபச்சாரம் எனும் வார்த்தையின் அனுபவ தத்துவத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் ‘விபச்சாரம்’ என்பது பெண்கள் அடிமை என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய வேறல்ல. ஏனெனில் விபச்சாரத் தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக் குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது.” (பெண் ஏன் அடிமையானாள்? நூல்)

பெண்களுக்கான இந்த உரிமைச் சட்டங்கள் பெண்ணுரிமைக்கான பாதுகாப்புக் கவசங்கள். அதே நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்து விட்டதாலேயே திருமணமான ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் எந்த ஆணுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. விவாகரத்துக்கான உரிமை சட்டப்படி உண்டு என்பதற்காக திருமணமானவர்கள் அனைவருமே ‘விவாகரத்தை’ கட்டாயமாக்கிக் கொள்வதும் இல்லை. இணைந்து வாழ்வதற்கான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கே முன்னுரிமை. ஒரு கணவனின் அல்லது மனைவியின் துன்புறுத்தலை சுமந்து கொண்டே கட்டாயமாக இணைந்து வாழ வேண்டியத் தேவையில்லை என்ற நிலையில் விவாகரத்து சட்டம் ஒரு கேடயமாகிறது. அதே போன்ற ‘கேடயம்’ தான் 497ஆவது பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கியிருப்பதாகும்.

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லும் தடை உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டிருப்பது பெண்களின் உரிமைக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி. இது 63 ஆண்டுகாலப் போராட்டம். அதற்காக எல்லா பெண்களும் அய்யப்ப பக்தையாகி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பது அதற்கான அர்த்தமல்ல. உண்மையில் பெண்களை அடக்கி உரிமைகளைத் தடுத்து வரும் மதக் கட்டமைப்பு - மத நம்பிக்கை - மதச் சடங்குகளிலிருந்து பெண்கள் தங்களை விடுவித்துச் செல்லும்போது தான் பெண்களின் விடுதலை முழுமையடைய முடியும்.

அண்மைக் காலமாக பெண்ணுரிமைக்கு வலிமை சேர்க்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, அய்யப்பன் கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுப்பதையும் மும்பையில் ‘ஹஜி அலி தர்கா’ வழிபாட்டுத் தளத்தில் இஸ்லாமிய பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதையும் ஒப்பிட்டுக் காட்டி இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த ஒரு வாரத்தில் தர்காவின் அறக்கட்டளை தாமாக முன் வந்து தர்காவில் கருவறை வரை பெண்களை அனுமதிப்போம் என்று அறிவித்தது. 2017 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேகர் தலைமையினலான அமர்வு - ‘முத்தலாக்’ கூறி இஸ்லாமிய பெண்களை விவாகரத்து செய்வது சட்ட விரோதமானது என்று அறிவித்தது. இந்த முத்தலாக் ‘புனித குரானுக்கே’ எதிரானது என்று அமர்வில் இடம் பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தீர்ப்பில் பதிவு செய்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு வேறு மதத்தவரை திருமணம் செய்த பார்சி மதத்தைச் சார்ந்த ஒரு பெண், தன்னை மத நீக்கம் செய்த பார்சி சமூகத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். தனது தந்தைக்கான இறுதி அஞ்சலியை நடத்திட பார்சிகளின் வழிபாட்டுத் தலமான ‘அமைதி கோபுரத்தில்’ அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பார்சி பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியது. இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ‘போரா’ சமூகத்துப் பெண்கள் வயதுக்கு வரும் போது அவர்கள் ‘பிறப்பு உறுப்பை’ சிதைக்கும் ‘காப்ஸ்’ (Khabz) என்ற காட்டுமிராண்டி வழக்கம், பெண்ணுரிமைக்கு எதிரானது என்று உச்சநீதி மன்ற அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

பெண்கள் உரிமைகளை மதங்களால் இனியும் தடுத்து நிறுத்த முடியாது. மதங்களும் அவை வலியுறுத்தும் பாகுபாடும் ஒடுக்குமுறையும் நிறைந்த கோட்பாடுகள் பழக்க வழக்கங்கள் காலாவதியாகி வருகின்றன என்பதற்கு இந்தத் தீர்ப்புகளே சான்றுகளாக நிற்கின்றன.