dvk feminists meeting

பெண் போராளிகள் அறைகூவல்

“இளைஞர்களே; ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்; சுய ஜாதி எதிர்ப் பாளர்களாக மாறுங்கள்; ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி வாருங்கள்; நமது தலைமுறையிலேயே ஜாதி அமைப்பை முடித்து வைப்போம்!” என்று பெண் போராளிகள் அறைகூவல் விடுத்தார்கள்.

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி பெண் போராளிகள் அறைகூவல் விடுக்கும் பொது மேடை ஒன்றை உருவாக்கித் தந்தது. பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த எழுச்சி நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நெடிய வீதி முழுதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. 6 மணி யளவில் மக்கள் மன்றத்தின் பறை இசை; புரட்சிகரப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுக் கொண்டே இருந்தன. இருக்கைகளுக்குப் பின்னாலும் வீதியின் ஓரங்களிலும் அடர்த்தியாக இளைஞர்களும் பொது மக்களும் திரண்டு இளம் பெண் போராளிகளின் ஜாதி ஒழிப்புப் போர் முரசைக் கேட்டு உணர்ச்சி மயமானார்கள்.

வடசென்னை மாவட்ட கழகத்தின் பெண் செயல்பாட்டாளரும், நிகழ்வை முன்னின்று நடத்தியோரில் ஒருவருமான சா. ராஜி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மற்றொருசெயல் போராளி வ. சங்கீதா வரவேற்புரையாற்றினார். மக்கள் மன்ற கலை நிகழ்வுகளுக்கிடையே ஆசிரியர் வீ. சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), மகேசு (மக்கள் மன்றம்), உடுமலை கவுசல்யா, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி, எழுத்தாளர் ஜெயராணி, சுற்றுச் சூழல் உரிமைகளை விளக்கி துண்டறிக்கை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செயப்பட்ட வளர்மதி ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.

இளம் பெண் போராளிகள் அனைவரும் மேடையில் ஜாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று உறுதி ஏற்றனர். சிறப்பு விருந்தினர்களுக்கு கேடயம் மற்றும் நீடாமங்கலம் ஜாதிக் கொடுமையை விளக்கும் வரலாற்று ஆய்வு நூலை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் வழங்கினர். களப்பணிகளில் பங்கேற்க முன் கூட்டியே வந்திருந்த திருப்பூர் கழகப் பெண் தோழர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக இந்த நிகழ்வின் நோக்கத்தை விளக்கி சுருக்கமாக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார்.

ர. சங்கவி நன்றி கூறினார்.

மாநாட்டு மேடையில் அனிதா நீதி கேட்பது போன்ற படமும்; பெரியார், அம்பேத்கர் மற்றும் அண்மையில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் படமும் வைக்கப்பட் டிருந்தன. ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ என்ற மூன்று தத்துவங்களில் பணியாற்றும் பெண் போராளிளை ஒரே மேடையில் பேச வைத்து ஜாதி எதிர்ப்புக்கு புதிய களத்தை உருவாக்கித் தந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம் என்று பலரும் பாராட்டினார்கள்.

வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார், செயலாளர் செந்தில்-எப்.டி.எல்., ராஜி, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் நிகழ்ச்சிக்கு கடுமையாக உழைத்து சிறப்பாக்கினர்.

- நமது செய்தியாளர்

நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

பெரம்பூர் கூட்ட மேடையில் பெண் போராளிகள் கீழ்க்கண்ட உறுதி மொழியை எடுத்தனர். கூட்டத் தினரும் எழுந்து நின்று உறுதி எடுத்தனர்.

“மனிதர்கள் - மனிதர்களாகவே பிறக்கிறார்கள்.

ஜாதி - அடை யாளம் பின்னர் திணிக்கப்படுகிறது.

ஆணுக்குப் பெண் அடிமை என்பதும், சூழ்ச்சியால் கட்டமைக்கப்பட்டது.

பெண்களாகிய நாங்கள், இளைய தலைமைக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான்.

ஜாதி - பெண்ணடிமை ஒழிப்பை நமது தலைமுறையில் முடித்து வைப்போம்.

இளைஞர்களே! ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்!

சுய ஜாதி மறுப்பாளர்களாக சுய பாலின உணர்வை விட்டவர்களாக மாறுங்கள்!

ஜாதி ஒழிப்பு களம் நோக்கி வாருங்கள்!

வெற்றி நமதே!”