புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (14.9.2017 இதழ் தொடர்ச்சி)

“கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி புத்தர் கவலைப்படாதவராக அது பயனற்ற வாதம் என்ற கருத்துடையவராக இருந்தாலும் அனைத்தையும் உருவாக்கி ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை புத்தரிடம் இருந்திருக்குமானால், அவர் போதித்த கருத்துகள் எல்லாம் தலைகீழாக வேறு திசையில் சென்றிருக்கும்” என்கிறார், தலைசிறந்த இந்திய தத்துவ ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா.

“அப்படி ஒரு ‘சக்தி’ இருக்கிறது என்ற நம்பிக்கையி லிருந்துதான் அந்தக் கடவுளை மகிழ்வித்தால் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது; அந்த நம்பிக்கையில்தான் கடவுளை வேண்டுதல்; காணிக்கை செலுத்துதல்; பலியிடுதல் என்ற சடங்குகள் வந்தன. இறைவனை இவற்றின் வழியாக மகிழ்வித்து கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை, புத்தர் காலத்திலும் இருந்தது. இவற்றில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் புத்தர் இந்த நம்பிக்கைகளை முற்றாக ஒதுக்கிவிட்டு மனிதனின் துயரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து சிந்தித்தார். இல்லாவிட்டால் துயரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் கடவுள் என்று கூறி கடவுளை அடையும் வழிமுறைகளைத்தான் புத்தரும் பேசியிருப்பார். ஆனால் புத்தர் அப்படி சிந்திக்காமல் துயரத்துக்குக் காரணங்களைக் கண்டறியவே முற்பட்டார்” என்கிறார் சட்டோ பாத்யாயா. புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துகள் எதுவும் பதிவாகவில்லை. புத்தர் காலத்துக்குப் பிறகு அஸ்வகோசர் தனது நினைவிலிருந்து புத்தர் கருத்துகளை ‘புத்த சரிதத்தில்’ பதிவு செய்தார். புத்தரின் கருத்துகளாக அஸ்வகோசர் முன் வைத்திருக்கும் தத்துவங்கள் - புத்தர் ஒரு முழுமையான நாத்திகர் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால், தூய்மை; தூய்மையற்ற எல்லா பொருள்களும் அவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அப்படியானால், கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட அனைத்திலும் மாற்றமோ, அழிவோ நடந்திருக்கக் கூடாது. துன்பம், இயற்கைப் பேரிடர் ஏதும் நிகழ்ந்திருக்கக் கூடாது. சரி; தவறு என்று எதுவும் இருக்க முடியாது.........

ஒரு உயிருக்கு இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு அனைத்தும் இறைவனின் கொடை என்றால், இறைவனுக்கும் அந்த உணர்வுகள் இருந்திருக்கத்தான் வேண்டும். அப்படியானால் அவனை குணங்களற்றவன் என்று எப்படி கூற முடியும்?

கடவுள் மனிதனைப் படைத்தார்; எனவே கடவுள் ஆணையை ஏற்பதைத் தவிர, உயிர்களுக்கு வேறு வழியில்லை என்றால், ஒரு மனிதனுக்கு நல்ல குணங்களே வேண்டும். அவை மட்டுமே உயர்வானது என்று ஏன் சிறப்பிக்க வேண்டும்? அனைத்தும் அவன் செயல் என்றால் நல்லது, கெட்டது என்பதற் கெல்லாம் இடம் ஏது? இந்த குணங்கள் அனைத்தும் கடவுளுக்கும் உரியதாக ஆகிவிடு மல்லவா?

துன்ப, துயரங்களுக்கு எல்லாம் கடவுள் காரணமில்லை என்று கூறினால், அதற்குக் காரணம் யார்? அதற்கெல்லாம் கடவுளைத் தவிர்த்த வேறு காரணங்கள் உண்டு என்றால், கடவுளைத் தவிர்த்து, அவன் சக்திக்கு உட்படாதவைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளுக்கே தொடர் பில்லாதவைக்கு கடவுள் காரணம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

உலகைப் படைத்தவர் கடவுள் என்றால், அவர் படைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறும்போது கடவுளுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். முழுமையான நோக்கம் நிறைவேறாதபோது கடவுள், ‘பூரணத்துவம்’ பெற்றவர் என்று எப்படி கூற முடியும்? சரி; நோக்கம் ஏதுமின்றியே கடவுள் உலகைப் படைத்தார் என்றால், அந்தக் கடவுள் பைத்தியக்காரனாகவோ அல்லது பால் உறிஞ்சும் பச்சைக் குழந்தையாகவோ தான் இருக்க முடியும்.

அப்படியே படைத்திருந்தாலும் அது ஒரே கடவுளாகத்தானே இருக்க முடியும்? ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் எப்படி வந்தன?”

- என்று கடவுள் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் புத்தர்.

‘வர்ணாஸ்ரமத்தை’யும் பிறப்பின் அடிப்படையில் ‘பிராமணன்’ உயர்ந்தவன் என்பதையும் புத்தர் ஏற்க மறுத்தார். அவருடைய சங்கத்தில் துப்புரவு தொழிலாளி, சவரத் தொழிலாளிகள், உயர் பொறுப்பில் இருந்ததை ஏற்கனவே கூறினேன்.

அநாதபிண்டிகர் என்பவர் ஆசிரமத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலாயனன் என்ற பார்ப்பன இளைஞன், புத்தருடன் வாதம் செய்கிறான். அந்த விவாதம் மிகவும் சுவையானது:

“ஆசுவலாயனன் : கவுதமரே! பிராமண வருணமே உயர்ந்தது. மற்ற வருணங்கள் தாழ்ந்தவை. பிராமண வருணம் வெண்மை யானது. மற்றவை கருப்பானவை. பிராமணர் களுக்கே முக்தி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அல்ல. பிராமணர்கள் பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து உண்டானவர்கள். அவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள். எனவே, அவர்கள்தாம் அவனுடைய செல்வத்துக்கு உரிமையானவர்கள் என்று அந்தணர்கள் கூறுகிறார்களே, இதைப் பற்றி உங்கள் கருத்து யாது?

புத்தர் : ஆசுவலாயனா! அந்தணர்களின் மனைவியர் பூப்படைகிறார்கள், கருத்தரிக் கிறார்கள், மகவை ஈனுகிறார்கள், குழந்தை களுக்குப் பாலூட்டுகிறார்கள். இப்படியாக அந்தணரின் சந்ததியர் பிற வருணத்தவரைப் போலவே தாய் வயிற்றிலிருந்து பிறந்திருக்க, பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து தோன்றி யதாகக் கூறிக் கொள்வது வியப்பாக இல்லையா?

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், அந்தணர்கள் தாங்கள் பிரம்ம தேவனுடைய செல்வத்துக்கு உரியவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்.

புத்தர்: ஆசுவலாயனா! யவனம், காம் போஜம் முதலிய எல்லை நாடுகளில் ஆரியர், தாசர் என்ற இரண்டே வருணங்கள் உண்டு. சில சமயம் ஆரியன் தாசனாவான், தாசன் ஆரியனாவான். இதை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

ஆசுவலாயனன்: ஆம், கவுதமரே! கேள்விப் பட்டிருக்கிறேன்.

புத்தர் : அப்படியிருக்கையில், பிரம்மதேவன் அந்தணர்களை முகத்திலிருந்து உண்டாக் கினான், அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?” 

அக்கினியில் வேறுபாடு உண்டோ?

தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொண்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை ஆதாரமாகக் கொண்டே பிராமணர்கள் பிரம்மனின் முகத்திலிருந்து உதித்தவர்கள் எனும் நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது. இதற்கு எதிராக வாழ்வின் யதார்த்தங்களை ஆதாரமாக வைத்தார் புத்தர். பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள் என்றால் அந்த நம்பிக்கை இந்த தேசத்தில் மட்டும் நிலவுவது ஏன்? பக்கத்து நாடுகளில் அது இல்லாதது ஏன்? இதிலிருந்தே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முறையற்றது என்பது தெளிவாகிறது என்பதே புத்தரின் வாதம். அப்படியும் இதை ஏற்கவில்லை. ஆசுவலாயனன் அவன் சொன்னதையே சொன்னான்.

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அந்தணர்கள் தங்களை உயர்வாகவும் மற்ற வருணத்தவரைத் தாழ்வாகவும் கருதுகிறார்கள் என்பது உண்மை.

புத்தர் : ஆசுவலாயனா! அரசன் ஒருவன் அந்தணர்களையும் க்ஷத்திரியர்களையும் பார்த்து ‘சால மரம் அல்லது சந்தன மரம் போன்ற உயர்ந்த மரங்களைக் கடைக் கோலாகக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றார். புலையர், வேடர் உள்ளிட்டவர்களைப் பார்த்து, ‘நாய்க்கும் பன்றிக்கும் தீனி வைக்கும் பாண்டத்திலும், சாயம் தோய்க்கும் பாண்டத் திலும் ஆமணக்கைத் தீக்கடைக் கோலாகக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றார். ஆசுவலாயனா! அப்போது அந்தணர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி மட்டுமே ஒளிரும், புலையர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி ஒளிராது என்று உனக்குத் தோன்றுகிறதா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அக்கினி ஒரே மாதிரிதான் ஒளிரும். எங்கும் ஒரே மாதிரியாகவே அக்கினி காரியம் நடக்கும்.”

புத்தர் மகத்தான தத்துவஞானி மட்டுமல்ல, ஓர் அருமையான இலக்கியவாதியும்கூட. எளிமையான, அழகான, கச்சிதமான உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் பல இடங்களில். ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இவர் பரிணமித்ததற்கு அவருக்குள்ளிருந்த கவித்துவ ஆற்றலும் ஒரு முக்கிய காரணமாகும்.

எந்தக் கடைக்கோலில் உருவாக்கப்பட்டிருந் தாலும் தீ, தீதான். எத்தகைய மனிதர்களுக்குப் பிறந்தாலும், மனிதன், மனிதன்தான். அதில் வேறுபாடு இருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. இதை இன்னும் பட்டவர்த்தனமாகச் சொன்னார் புத்தர்.

“புத்தர் : ஒரு க்ஷத்திரியப் பிள்ளை பிராமணப் பெண்ணை மணந்து கொண்டால், அந்தத் தொடர்பினால் அவனுக்குப் பிறக்கும் மகன் தாய் தந்தையைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா? அந்தணப் பிள்ளை ஒருவன் க்ஷத்திரியப் பெண்ணை மணந்தால், அந்தத் தொடர்பினால் பிறக்கும் மகன், தாய் தந்தையரைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா?

ஆசுவலாயனன் : இத்தகையக் கலப்பு மணத்தினால் பிறக்கும் மகன் தாய் தந்தையரைப்போல மனிதனாகவே இருப்பான். கவுதமரே! அவனை அந்தணன் என்றும் சொல்லலாம், க்ஷத்திரியன் என்றும் சொல்லலாம்.

புத்தர்: ஆனால் ஆசுவலாயனா! ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் தொடர்பு ஏற்பட்டு ஒரு குட்டி பிறந்தால் அது தாயைப்போல இருக்குமா? தகப்பனைப் போல் இருக்குமா? அதைக் குதிரை என்று சொல்ல முடியுமா? கழுதை என்று சொல்ல முடியுமா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அதைக் குதிரை என்றோ, கழுதை என்றோ சொல்ல முடியாது. அது மூன்றாவது இனம் ஒன்றைச் சேர்ந்த பிராணி. அதைக் கோவேறுக் கழுதை என்கிறோம். ஆனால், அந்தணருக்கும் க்ஷத்திரியருக்கும் உண்டான கலப்பினால் பிறந்த குழந்தையிடம் இத்தகைய மாறுதல் இருப்பதில்லை.”

வருண வேறுபாடு செயற்கையானது. அது இருவகை உயிரினங்களுக்கும் இடையிலான இயற்கையான வேறுபாடு அல்ல. அதனால் தான் வருணக் கலப்பால் பிறக்கும் பிள்ளை மனிதனாக இருக்கிறது. யதார்த்த உண்மை இப்படியிருக்கும்போது வருணத்தின் பேரில் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாது என்று ஆணித்தரமாக வாதிட்டார் புத்தர். இன்றைக்குக்கூட இப்படி வாதாடப் பலரும் தயங்குவார்கள். அந்த ஞானியோ 2500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அஞ்சாமல் வாதாடினார்.

ஆக, பெரியாருக்கு முன் பார்ப்பனியத்தை எதிர்த்த புரட்சியாளர் புத்தர். ஆனாலும் அவரது புரட்சியை பார்ப்பனியம் ஊடுருவலால் வீழ்த்தியது. பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி அத்தகைய ஊடுருவலைத் தடுத்தது. பவுத்தத்தை - பார்ப்பனியம் எவ்வாறு வீழ்த்தியது என்ற சுருக்கமான வரலாற்றை மட்டும் விளக்கி எனது உரையை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்.     

 (தொடரும்)