கூடங்குளம் அணுமின் திட்டம் மீண்டும் முடங்கி யிருக்கிறது. அணுமின் நிர்வாகம் இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்தாலும் இணைய தளங்கள் வழியாக உண்மைகள் வெளிவந்துவிட்டன.

அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியில் அணு உலைக்கலன்போல முக்கிய பங்காற்றுவது ‘டர்பைன்’.

டர்பைன் தான் சுழற்சியின் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலைகள் உற்பத்தியைத் தொடங்கிவிட்ட நிலையில், இப்போது முதலாவது உலையில் ‘டர்பைன்’ செயலிழந்து விட்டது, இதை சரி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விஞ்ஞானிகள் வர வேண்டும். அதற்கு குறைந்தது 4 வார காலமாகும். அதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம்.

இணை யங்களில் வந்துள்ள இந்த செய்தியை முதன்முதலாக ‘சன்’ தொலைக்காட்சி அக்.20 அன்று செய்தியில் ஒளி பரப்பியது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது: “கடந்த மாதம் 26 ஆம் தேதியிலிருந்தே ‘டர்பைன்’ பழுதடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உண்மையை நிர்வாகம் வெளியிடாமல் இரகசியம் காத்து வருகிறது.

இரண்டாம் தலைமுறை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் திட்டம் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று நிர்வாகம் கூறுகிறது. அதுகூட உண்மைதான். மின் திட்டம் செயல்படவே முடியாமல் முடங்கிக் கிடக்கும்போது நூறு சதவீதம் பாதுகாப்பு இருக்கத்தானே செய்யும்? இப்போது 2 ஆம் பிரிவில் உள்ள ‘டர்பைனை’ எடுத்து முதல் பிரிவுக்கு மாற்றப் போவதாகக் கூறுகிறார்கள். அது அவ்வளவு எளிதானது அல்ல என்று தொழில்நுட்பவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவர் இரஷ்ய சுற்றுப் பயணத்தில் இருந்த நேரத்தில் ஒரு நாள் விடியற்காலை கூடங்குளம் மின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது பிரிவு உற்பத்தியைத் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். அது ஒரு வருட காலமாகி விட்டது. இன்னும் வணிக அடிப்படையில் உற்பத்தி தொடங்கவில்லை என்று இப்போது கூறுகிறார்கள். வணிக அடிப்படையில் உற்பத்தியை அறிவிக்க வேண்டும் என்றால் உற்பத்தி தொடர்ச்சியாக தடையின்றி ஒரு மாதகாலமாவது நடக்க வேண்டும். அப்போதுதான் வணிக ரீதியாக விலை கொடுத்து வாங்க - முன் வருவார்கள். தொடர்ச்சியாக மின் உற்பத்தி நடக்கவில்லை என்பதாலேயே வணிக ரீதியாக உற்பத்தியை தொடங்க முடியவில்லை.

இந்த அணுமின் திட்டத்திற்கு இரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட எந்திரங்கள் மிகவும் தரம் குறைந்தவை. இந்த எந்திரங்களை விற்பனை செய்த நிறுவனத்தின் (ஷ்iடி-ஞடினடிடளம) தலைமை அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் குறைந்த எந்திரங்கள் உதிரிப் பாகங்களை இந்தியா, சீனா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், கூடங்குளம் நிர்வாகத்தினர் எந்திரங்கள் நன்றாகத்தான் இருப்பதாக சாதித்தனர்.

உண்மை என்னவென்றால் உற்பத்தி தொடங்கி ஓராண்டு காலத்துக்குப் பிறகும் வணிகரீதியான உற்பத்தி நடக்க வில்லை. இந்த நிலையில் மூன்று மற்றும் நான்காவது பிரிவுகளைத் தொடங்க போவதாகக் கூறுகிறார்கள்” என்றார், பொறியாளர் சுந்தர்ராஜன்.

“கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் தொழில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த ஒருவர், சக பாதுகாப்புப் படையினர் மூவரை மன அழுத்தம் காரணமாக அண்மையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். குடியிருப்பு வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு, கல்பாக்கம் உற்பத்தி நிலையத்தில் நடந்திருந்தால் மிகப் பெரும் ஆபத்தை சந்தித்திருக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ரூ.30 கோடிக்கு நிர்வாகம் டீசல் வாங்கியிருக்கிறது என்ற தகவலை மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அணுசக்தியை எரிபொருளாக்கி மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் இவ்வளவு தொகைக்கு ஏன் டீசல் வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கு, நிர்வாகம் பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது.