இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் (1967, தமிழ்நாடு அரசு) கொண்டு வரப்பட்டு, கிட்டத் தட்ட 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், தான் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்காமல், சென்னை உயர் நீதிமன்றம் அதை ஒரு குற்றச்செயலாகக் கருதும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

பழைய வழக்குகள்: 1953இல் ‘சிதம்பரம் செட்டியார் எதிர் தெய்வானை ஆச்சி’ வழக்கில் இந்து மதச் சடங்குகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி, அவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்த அதே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் செயலை இதனோடு ஒப்புநோக்க வேண்டும். 1953இல் இருந்த அதே நிலை இப்போது இல்லை என உறுதியாகக் கூறலாம். சமயச் சடங்கில்லாத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்ட விதிகள் அப்போது மதராஸ் மாநில வரம்புக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

மேற்சொன்ன சிதம்பரம் செட்டியார் திருமண வழக்கில் (1953ஆகஸ்ட் 28), இந்து மத வழக்கப்படி ‘சப்தபதி’ எனும் சடங்குமுறை பின்பற்றப்படவில்லை என்றும், திருமணத்தின் போது புனிதத்தன்மை வாய்ந்த புரோகிதர் பங்கேற்கவில்லை என்றும் மனுஸ்மிருதியில் இருந்து நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். எனவே, இந்து மதத் திருமணச் சட்டத்தின்படி சடங்கு விதிகளைப் பின்பற்றாத சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இவ்வகைத் திருமண பந்தங்களில் பிறக்கும் குழந்தைகளை ‘முறைதவறிப் பிறந்தவர்’கள் என அக்குறிப்பில் பதிவுசெய்தனர்.

1958இல் மற்றொரு வழக்கு. ராஜாத்தி-செல்லையா இணையருக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், ’தாம்பத்ய உரிமைக் கோரி’ ராஜாத்தி என்பவர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ராஜாத்தி-செல்லையா இணையருக்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தையே கேள்விக்குள்ளாக்கி, இந்து திருமணச் சட்டத்தின்படி (1955) அதை அங்கீகரிக்க மறுத்தது.

ஓர் இளம் பெண்ணின் தாம்பத்ய உரிமைக் கோரும் மனுவை ஏற்றுக்கொள்ள இயலாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை இயக்கத்துக்குக் கண்டனம் தெரிவித்தது. இவ்விவாதக் கருத்துகள் எல்லாம் சீர்திருத்தத் திருமணங்கள் மீது தவறான அபிப்பிராயத்தைத் தோற்றுவித்தன.

திருமண அமைப்பில் பெண்கள் கீழாக மதிக்கப்படுவதைச் சுயமரியாதை இயக்கம் உரக்கச் சொன்னது. இதைச் சமாளிக்க, ஓர் ஆணும் பெண்ணும் திருமணப் பந்தத்துக்குள் நுழையும் முன்பு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக்கொள்ளலாம். முரண்பாடு தோன்றும்பட்சத்தில் அவ்வுறவை முறித்துக்கொள்ளலாம் என்று அவ்வியக்கம் வாதிட்டது. ஆண்களிடையே பலதார முறை பின்பற்றப்படுவதைக் கண்டு, ஒவ்வொரு திருமணத்தையும் பதிவுசெய்ய வேண்டும் என சுயமரியாதை இயக்கத்தினர் குரல் கொடுத்தனர்.

ஆனால், ராஜாத்தியின் சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், கணவனின் சொத்தில் அவருக்குப் பங்கு இல்லை என்று கைவிரித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக 1967இல், இந்து திருமணச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டுவந்து, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. இதன் பலனாக, 1969இல் மேல்முறையீடு செய்த ராஜாத்தியின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு மணவாழ்வு மீட்பளிப்பு உரிமை வழங்கப்பட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட திராவிட இயக்கம் காரணமாக இருந்தது.

சுயமரியாதை இயக்கத்தினரின் கோரிக்கை: மதராஸ் மாநிலத்தில் மட்டுமின்றி, இந்தியா நெடுகிலும் அக்கால கட்டத்தில் இந்து சட்ட மசோதாவால் பெரும் சிக்கல் தீவிரமடைந்திருந்தது. 1944இல் பி.என்.ராவ் தலைமையிலான இந்து சட்ட அமைப்புக் குழுவினர், இந்தியாவின் பலதரப்பட்ட பகுதிகளுக்கும் சென்று மசோதா தாக்கல் செய்வதற்கான அடிப்படைத் தரவுகளைத் திரட்டினர். அப்போது சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளர்கள், “பெண்களுக்குச் சரிசமமான சட்ட உரிமை வழங்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்கள்.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த குஞ்சிதம் குருசாமி, ‘இந்து’ என்கிற பதம் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று, அச்சட்ட வரைவின் போதாமையை எடுத்துச் சொன்னார். அவரது கோரிக்கைகளை ராவ் குழுவினர் நிராகரித்தனர். 1947இல் வெளியான அக்குழுவின் அறிக்கையில் இச்செய்திகள் இருட்டடிக்கப்பட்டன.

ஆனால் வீர சைவம், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்தன சமாஜம் போன்ற அமைப்புகளின் திருமண முறைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 1955இல் இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் மேற்சொன்ன இயக்கங்களின் சீர்திருத்தத் திருமணங்கள் மட்டுமே முறையான திருமணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1955 இந்து திருமணச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்படி, இந்து மதச் சம்பிரதாயங்களில் குறிப்பிடப்படும் ‘சப்தபதி’ வலம் வருதல், ‘தாலி’ கட்டுதல் போன்ற சடங்குகளை முறையாகப் பின்பற்றும் திருமணங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அதை மீறி மந்திரங்கள் இல்லாத, புரோகிதர்கள் கலந்துகொள்ளாத திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

சுயமரியாதைத் திருமணத்தை 1954ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தில் பதிவுசெய்யுமாறு நாடாளுமன்றமும் நீதிமன்றமும் ஒருமித்துக் குரல் கொடுத்தன. அச்சமயத்தில், குடும்பச் சொத்துப் பங்கீட்டு விவகாரம் பற்றி அதிகம் சிந்திக்காமல், அவசரகதியில் இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், திருமணமான தம்பதிகளுக்கு மூதாதையரின் சொத்து கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு என்பதே அப்போதைய நிலை.

1953இல் ‘தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம்’ வழக்கு ’மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்’ பதிவுசெய்யப்பட்டது. நீதிமன்றத்தால் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், மாகாணத்தின் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைத்தது. சமயச் சார்பற்ற திருமண முறையைப் பின்பற்றுவோரைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும், அவர்களது சொத்துரிமையைப் பாதுகாக்கவும் சிறப்பு விதிகள் கொண்டு வர வேண்டும் என்று ஆளும் அரசுக்குப் பரிந்துரைத்தது.

ஆகவே 1953இல், மெட்ராஸில் காங்கிரஸ் அரசாங்கம் ‘இணக்கமற்ற இந்து திருமணப் பதிவு மசோதா 1954-ஐ அறிமுகப்படுத்தத் தீர்மானித்தது. அந்த மசோதா மீதான விவாதங்கள் எழுந்த நிலையிலும், கடைசி நேரத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தன் முடிவை மாற்றிக்கொண்டு மசோதாவை ரத்து செய்தது.

1954ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தில் சுயமரியாதைத் திருமணத்தை இணைக்க வேண்டியிருப்பதால், தாம் அதைத் தவிர்த்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. 1959இல் திமுகவைச் சேர்ந்த எஸ்.எம்.அண்ணாமலை, ‘மெட்ராஸ் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி மசோதா’வைப் பின்னோக்கு விளைவுடன் சட்டபூர்வ அங்கீகாரத்துக்காகக் கொண்டுவந்தார்.

ஆனால், காங்கிரஸார் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நடுநிலையாக மௌனம் காத்ததால், மசோதா தோல்வியடைந்தது. 1965இல் திமுக மீண்டும் முயன்றது. இம்முறை எஸ்.மாதவன் (பிறகு திமுக அமைச்சர்) என்பவர் மசோதாவைத் தாக்கல் செய்தார். சுயமரியாதைத் திருமணத்தை இந்து சட்டத்துக்குள் கொண்டுவந்து, அதனைச் செல்லுபடியாக வைப்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.

இத்திருமணங்களை அங்கீகரிக்க மறுத்தால், இதன்படி திருமணம் செய்த பெண்களின் எதிர்கால வாழ்க்கை மோசமாகிவிடும் என திமுக வாதாடியது. இந்து சட்டத்தின்கீழ் ஒப்புதல் கிடைத்துவிட்டால், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விவாகரத்து பெறவும், பலதார மணம்புரிந்த கணவர்களிடமிருந்து விடுதலை பெறவும் வழி கிடைத்துவிடும் என்று எண்ணினார்கள். ஆனால், பலகட்ட முயற்சிக்குப் பிறகும்கூட மசோதா துளியும் நகரவில்லை.

செய்துகாட்டிய திமுக அரசு: 1967 தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக உருவெடுத்த பிறகுதான், அந்த மசோதா புத்துயிர் பெற்றது. 7ஏ என்கிற பிரிவின் கீழ், இந்து திருமணச் சட்டம் 1967 (தமிழ்நாடு அரசால் திருத்தம் செய்யப்பட்டது) அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சடங்கில்லாத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன், பாரம்பரியப் பார்ப்பனிய வழித் திருமணங்கள் கேள்விக்குள்ளாகின. இச்சட்டத்திருத்தத்தால் ஒன்றிய அரசும் நீதித் துறையும் பெருத்த கலக்கம் அடைந்தன.

சீர்திருத்தத் திருமணங்களை அங்கீகரிக்க மறுப்பதோடு அவை சம்பிரதாயத்துக்கு எதிரானவை என்றும் தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் மகளிர் சார்ந்த சீர்திருத்தச் சட்டங்களில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்றெந்த இந்திய நீதிமன்றங்களைக் காட்டிலும், பாலின உரிமை சார்ந்து பல முற்போக்கான தீர்ப்புகளை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. திருநர்களின் திருமண அங்கீகாரத்தை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தது, அதன் அசாத்திய பணிக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு.

(இந்து ஆங்கில நாளேட்டில் செப் 29, 2023ல் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் எஸ்.ஆனந்தி மற்றும் உதவிப் பேராசிரியர் எஸ்.சூர்யா இணைந்து எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)