famers victory 405விவசாயிகளின் சக்தி, அரசு அதிகாரத்தைப் பணிய வைத்துவிட்டது. ஓராண்டு காலமாக கொட்டும் பனியில் இரவு பகலாக அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கை மூன்று வேளாண் சட்டங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான். விவசாயம் - மனு சாஸ்திரத்தால் பிராமணர்களுக்கு தடை செய்யப்பட்ட சூத்திரர்களுக்கான தொழில். எனவே விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கத் துடிக்கிறது ‘இந்துத்துவா’ ஆட்சி. டெல்லியில் தொடங்கிய போராட்டம், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்திர பிரதேசம் என்று விரிவடைந்து நாடு தழுவிய போராட் டமாகி உலக அளவில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ஆணவத்தை வெளிச்சப்படுத்தியது என்றே கூறலாம்.

இந்த சட்டம் நல்ல சட்டம் என்றும், இதன் பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு புரிய வைக்க முடியாத நிலையில் திரும்பப் பெறுவதாகவும் மோடி அறிவித்திருப்பது, விவசாயிகளை புரியும் திறனற்றவர்கள் என்று அவமதிப்பதாகும். ஆனாலும் விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதிப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டு, விவசாயத்தோடு தொடர்புடைய மின்சார சட்டம் விலக்கப்பட்டு விவசாயிகளோடு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தை வழி நடத்திய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ்      திக்காயத் அறிவித்துள்ளார்.

சீக்கியர்களின் மத குரு குருநானக் பிறந்த நாளைத் தேர்வு செய்து, மோடி இந்தப் ‘பின்வாங்கும்’ அறிவிப்புக்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

உ.பி. சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. மேற்கு உ.பி.யில் முசாபர் பகுதியில் இந்து-முஸ்லிம் மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி, ‘இந்து’ வாக்கு வங்கியை கட்டமைத்த பா.ஜ.க.வுக்கு விவசாயப் போராட்டம் நெருக்கடியை உருவாக்கியது. ‘விவசாயிகள்’ என்ற அடிப்படையில் மதப் பகைமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரு பிரிவினரும் போராட்டக் களத்துக்கு வந்து விட்டனர்.

லக்கிப்பூர் பகுதியில் நடந்த விவசாயப் பேரணியின்போது, உ.பி. மாநிலத்தைச் சார்ந்த உள்துறை இணை அமைச்சர் அஜித் மிஸ்ராவின் மகன் அஜய் மிஸ்ராவும் அவரது ஆட்களும் தனது தந்தையான ஒன்றிய அமைச்சரின் பாதுகாப்புக்கான வாகனத்தை விவசாயிகள் மீது பின்னாலிருந்து மோதியதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அமைச்சர் மகனுடன் வந்த மூன்று பா.ஜ.க.வினரும் பலியானார்கள். ராமன் காஷ்யாப் என்ற பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமைச்சரின் மகனைக் காப்பாற்ற முயன்றது உ.பி. பா.ஜ.க. ஆட்சி. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த போது நீதிமன்றம் இதில் மிகவும் கடுமை காட்டி, ஒரு குறிப்பிட்ட குற்றவாளியை குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் நோக்கத்துடனேயே சாட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியதோடு ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உ.பி. மாநில ஆட்சிக்கு உத்தரவிட்டது.

பத்திரிகையாளர் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அஜிஸ் மிஸ்ரா துப்பாக்கியிலிருந்து வெடித்தது தான் என்று தடயவியல் சோதனை உறுதிப்படுத்தியது. அவரது நண்பர் அன்கிட் தாஸ் என்பவரும், சுட்டிருப்பதை சோதனை உறுதி செய்தது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை உ.பி.யில் பா.ஜ.க. மீது மக்களின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்து விட்டது.

ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி என்ற மோடியின் பிம்பமும் சரியத் தொடங்கிவிட்டது. ரஃபேல் ஜெட் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் ‘தாசல்ட் ஏவியேஷன்’ என்று தனியார் நிறுவனத்திடமிருந்து ஜெட் விமானம் வாங்கியதில் இந்தியாவைச் சார்ந்த இடைத் தரகர் சுஷேன் குப்தா வழியாக கமிஷன் கை மாறியதாக பிரான்ஸ் நாட்டு ஏடான ‘போர்ட்டல் மீடியா பார்ட்’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. 2018 அக்டோபரில் ஒப்பந்தம் இறுதியான நிலையில் ‘கமிஷன்’ பணம் இரகசியமாக கைமாறியதற்கான ஆவணங்கள் இந்திய அமுலாக்கத் துறை வசம் இருப்பதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை அம்பலப் படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபரில் நடந்த மூன்று நாடாளுமன்றம் மற்றும் 30 சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.வின் செல்வாக்கு வடமாநிலங்களில் மங்கி வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மோடி விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிகார ஆணவத்தை மக்கள் சக்தி தகர்த்தெறிந்திருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்