உத்தரகாண்ட் மாநிலம் கேதார் நாத்தில், ஆதி சங்கரரின் 12 அடி உயர சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “சமுதாய நன்மைக்காக ஆதி சங்கரர், புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரைகள் வழியாக நமது கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

பல்வேறு - மொழி - இனம் - மதங்களைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர், இப்படி கலாச்சாரத்தை ‘ஓர்மைப்படுத்தி’ பார்ப்பனிய சமஸ்கிருதப் பண்பாடு தான் இந்தியாவின் பண்பாடு என்று பேசுவது, அவர் அனைத்து பிரிவினருக்குமான பிரதமர் அல்ல என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஆதி சங்கரர் யார்? அவர் உருவாக்கிய அத்வைத சித்தாந்தத்தின் நோக்கம் என்ன? இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் போராட்டம் நடத்திய திலகர், ஆதிசங்கரர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“நாட்டில் எங்கும் பரவி இருந்த சமண பவுத்த கோட்பாடுகளை (இவை ஆரிய எதிர்ப்பு மதங்கள்) எதிர்த்து வாதிடும் அறிவுத் திறன் பெற்றிருந்தார். அதற்காகவே தனது அத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார்” என்றார்.

‘உலகம் - உணர்வு - அறிவு அத்தனையும் மாயை; ஆத்மா மட்டுமே உண்மை’ என்று தத்துவம் பேசிய அவர், தனது தத்துவத்தைத் தவிர, அனைத்துமே பொய் என்றார். பவுத்தர்களையும் இறை மறுப்பாளர்களையும் எதிர் கொள்வதற்கு வைதீகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் சீர்திருத்தம் என்ற பெயரில் முன்வைத்த வேதாந்த மரபு, பவுத்த மதம் பரவலைத் தடுத்ததோடு புத்த மார்க்கம் உருவான மண்ணிலேயே பூண்டோடு அழித்தது.

உலகமே மாயை என்று சொன்ன அவர், சிருங்கேரி (மைசூர்), பூரி (ஒரிசா), துவாரகை (குஜராத்), பத்ரிநாத் (இமாச்சலப் பிரதேசம்) ஆகிய நான்கு மடங்களை இந்த ‘உலகில்’ உருவாக்கித் தான் தனது தத்துவத்தைப் பரப்பினார். காஞ்சிபுரம் மடம் தன்னை சங்கர மடம் என்று கூறிக் கொண்டாலும், அது ஆதிசங்கரர் உருவாக்கியது அல்ல. ஆதிசங்கரர் மடம் தான் என்பதை நிலைநிறுத்த போலி ஆவணங்களைத் தயாரித்தது காஞ்சி மடம். இந்த மடங்கள் அனைத்துமே அத்வைதத்தைப் பரப்பவில்லை. வர்ணாஸ்ரமத்தைத் தான் பரப்பியது; பரப்பியும் வருகிறது.

தருண் விஜய் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாட்டுக்கு வந்து திருக்குறள் பெருமை பேசி, உத்தரகாண்ட் அரித்துவாரில் கங்கை கரையில்  12 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க முயன்ற போது, அதற்கு சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு சங்கராச்சாரியார் சவுக்கம் என்ற இடத்தில் நிறுவ முயன்றபோது ஆதி சங்கரர் பூங்காவில் ‘தீண்டப்படாத’ ஜாதியைச் சார்ந்த திருவள்ளுவர் சிலையை அனுமதிக்க முடியாது என்றனர். சிலையை நிறுவ முடியவில்லை. ஆதிசங்கர் சீடர்களாகக் கூறிக் கொள்ளும் சங்கராச்சாரிகள், இப்போதும் ‘தீண்டாமை’யை ஆதிசங்கரர் நிறுவிய மடங்களில் பின்பற்றி வருகிறார்கள்.

புத்த மார்க்கத்தின் உண்மையான நோக்கத்தை சிதைத்து, மகாயாணப் பிரிவை உண்டாக்கிய நாகர்ஜூனனுக்கு ஆதி சங்கரரின் அத்வைதக் கோட்பாடுகளே கை கொடுத்தன என்று ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோபாத்யா சுட்டிக் காட்டுகிறார்.

இந்துத்துவவாதிகளும் மோடியும் போற்றும் விவேகானந்தர், ஆதிசங்கரர் பற்றி கூறியுள்ள கருத்துகளே அவர் யார் என்பதை அடையாளப்படுத்தி விடுகிறது.

“சூத்திரர்கள், வேதம் படிக்க உரிமையற்றவர்கள் என்று கூறிய ஆதிசங்கரர், அப்படி வேதத்தில் எங்கேயாவது கூறப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினாரா?” என்று கேட்கிறார். (“Adi Sankar has said that the Sudras have no right to learn Vedas, but could not quote any authority to prove it from the Vedas”) (ஆதாரம்: விவேகானந்தர் பேச்சு - எழுத்து 6ஆவது தொகுப்பு - பக். 203 - கல்கத்தா - 1958)

அது மட்டுமல்ல; ‘சூத்திரர்’ உபநிஷத்தை படிக்கக் கூடாது; யாகம் செய்யும் உரிமை கிடையாது என்றும் ஆதிசங்கரர் கூறியிருப்பதை விவேகானந்தர் எடுத்துக் காட்டி கண்டிக்கிறார்.

இப்படி ‘சூத்திர’ இழிவை நியாயப்படுத்திய ஒருவர் சிலையைத் திறந்து வைத்து அவரை சமுதாய நன்மைக்காக உழைத்தவர் என்று ஒரு நாட்டின் பிரதமர் பேசுகிறார்என்பது வெட்கக் கேடானது; கோடானு கோடி ‘சூத்திர’ மக்களை இழிவுபடுத்தும் கண்டிக்கத்தக்க பேச்சு.

- விடுதலை இராசேந்திரன்