மாணவர்கள் யு.பி.எஸ்.சி. நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல்.

இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்... என பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தபிறகு அந்தந்த மாநிலங்களில் அந்தந்தத் துறைகளில் நியமிக்கப்படு கிறார்கள். அதாவது, தேர்வு எழுதிப் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் கிடைத்த உரிமையின் அடிப்படையில் அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகிறார்கள்.

இந்த வழிமுறையின்படி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்வு முடிந்த பிறகு அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகலாம். இதன் மூலம்தான் அட்டவணை சாதியினரும், (மிக அரிதாக) பழங்குடியினரும் இந்த உயர் பதவிகளை எட்ட முடிகிறது.

மோடி அரசு இப்போது இதில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டு, அதை செயல்படுத்தவும் துவங்கி விட்டது. அது என்ன?

இனிமேல் யு.பி.எஸ்.சி. தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அய்.ஏ.எஸ். / அய்.பி.எஸ். என ஒதுக்கப்பட மாட்டார்கள். தேர்வு செய்யப்பட்ட பிறகு, அடிப்படைப் பயிற்சியில் எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் பதவி ஒதுக்கீடு செய்யப்படும். (இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது.) இந்தத் திட்டத்தை செயல் படுத்துவதற்காக, இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அய்.ஏ.எஸ். / அய்.பி.எஸ். ஒதுக்கீடுகள் இன்னும் தரப்படவில்லை என்கிறார்கள்.

பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனையின்படி இந்த நடவடிக்கை எடுத்திருப்பது மைய அரசுப் பணியாளர்கள் அமைச்சகம் - Department of Personnel and Training (DOPT) யு.பி.எஸ்.சி. என்பது அரசமைப்புச்சட்ட ரீதியான அமைப்பு. அது தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்து தருகிறது.

மேலே சொன்ன டி.ஓ.பி.டி. என்பது மைய அரசின் ஓர் அங்கம். ஆக, அரசமைப்புச்சட்ட ரீதியான அமைப்புக்கும் மேலே உச்ச அதிகாரம் பெறப் பார்க்கிறது டிஓபிடி. பயிற்சியில் பெறும் மதிப் பெண்களின் அடிப்படையில் பதவி ஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு என்று கேட்கலாம்.

பயிற்சி மையத்தை நிர்வாகம் செய்பவர்கள் யார், அவர்கள் நேர்மையாக செயல்படுவார்களா, சாதி உணர்வு மத உணர்வு இல்லாமல் நடுநிலையாக செயல்படுவார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நற்சான்றிதழும் நல்ல மதிப்பெண்களும் கொடுத்து விட்டு, தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வஞ்சகம் புரியும் சாத்தியங்கள் அதிகம்.

அத்துடன், பயிற்சியின்போது இந்தியிலும் ஒரு தேர்வு உண்டு. இந்தியல்லாத பிறமொழிப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நிச்சயமாக இந்திப் பகுதியைச் சேர்ந்தவர்களின் அளவுக்கு அதில் தேர்ச்சி பெற முடியாது. அப்போது அவர்களுடைய மதிப்பெண்கள் குறையும். இந்தச் சுற்றறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாசகங்கள் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

Based on the combined score obtained in the Civil Services Examination and the Foundation Course ஆக, யுபிஎஸ்சி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன், அடிப்படைப் பயிற்சியில் பெற்ற மதிப்பெண்களை யும் சேர்த்து அதன் அடிப்படையில் பதவி ஒதுக்கீடு செய்யப்படும். நிச்சயமாக இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராகவே முடியும். தகுதியின் அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் ஐஏஎஸ் ஆகக்கூடிய வாய்ப்பு இருப்பவர்களை கீழான வேறு நிலை பதவிகளுக்குத் தள்ள முடியும்.

அது மட்டுமல்ல. சுற்றறிக்கையின் துவக்கத்தில் இருக்கிற வாசகமும் கவனத்துக்கு உரியது. to examine if service allocation/cadre allocation — service allocation - ஒருவரை எந்தப் பதவிக்கு ஒதுக்கீடு செய்வது என்பது; - cadre Allocation - ஒருவரை எந்த மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்வது என்பது.

அண்மைக்காலம் வரை இதில் என்ன நடைமுறை இருந்தது?

ஒரு மாநிலத்துக்கு 3 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள் என்றால், ஒருவர் அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார், இருவர் வேறு மாநிலத்தவராக இருப்பார்கள். 2017 முதல் இதிலும் ஒரு மாற்றம் வந்தது. அவரவர் விருப்ப முன்னுரிமை தரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இதிலும் மாற்றம் செய்யப்படுகிறது. அடிப்படைப் பயிற்சியில் கிடைத்த மதிப்பெண் களின் அடிப்படையில்தான் பதவியும் ஒதுக்கப்படும், பணியிடமும் ஒதுக்கப்படும். மாநிலங்களின் உரிமை களையும், அரசமைப்புச்சட்ட அமைப்புகளின் அதிகாரங்களையும் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டே வரும் பாஜக அரசு இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ என்று பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோமா; இல்லை விரட்டப் போகிறோமா?

பிரதமர் அலுவலக அடிப்படையில் இப்போது வந்துள்ள சுற்றறிக்கையைத் தொடர்ந்து பரிந்துரையில் இப்போது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. பயிற்சிக்குப் பிறகு முசோலினியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் மத்திய அரசின் குழு ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்பெண் போடுவது இடஒதுக்கீடு கொள்கை மீதான தாக்குதல் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை வி.பி.சிங் பிறப்பித்தப் பிறகு அகில இந்திய தேர்வுகளில் அதை நடைமுறைப் படுத்த பார்ப்பன அதிகார வர்க்கம் மறுத்தே வந்தது. நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகே இந்த இடஒதுக்கீட்டைப் பெற முடிந்தது.

தமிழ் மொழியில் தேர்வு எழுதவும் நீண்ட காலப் போராட்டம் நடந்தது. இவ்வளவுக்குப் பிறகு இப்போது மற்றொரு தாக்குதலை நடத்தியிருக் கிறார்கள்.