‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பன கல்வி அமைப்பு, தமிழ்நாட்டில் சமூக நீதியால் கல்வி பெற்று உயர்ந்து மேலே வரத் துடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவி யர்களை ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு தனக்குக் கிடைத்துள்ள உரிமையைப் பயன் படுத்தி அவர்களை அவமானப்படுத்தியிருக் கிறது; சொத்தடிமைகளாக நடத்தியிருக் கிறது.

‘சி.பி.எஸ்.ஈ.’க்கு தேர்வு நடத்தும் உரிமையே கிடையாது என்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ‘நீட்’ வழக்கு வந்தபோது, அப்போது தலைமை நீதிபதி யாக இருந்த அல்டாமஸ் கபீர் தலைமை யிலான நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும். ‘சி.பி.எஸ்.ஈ.’ 10ஆம் வகுப்பு கணித வினாத்தாளும் 12ஆம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும் முன்கூட்டியே ‘அவுட்’ ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து பல இலட்சம் மாணவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட் டனர். பெற்றோர்களையும் மாணவர்களை யும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யது ‘சி.பி.எஸ்.ஈ.’. அந்த அமைப்புக்குள்ளே ஊடுருவியுள்ள ஊழல் பெருச்சாளிகள் தான், இந்த வினாத்தாள் வெளியாவதற்குக் காரணம். இது குறித்து ‘எக்னாமிக்அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ எழுதிய தலையங்கத்தில் (ஏப். 2018) இவ்வாறு கூறியிருந்தது:

“இப்படி வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது ‘சி.பி.எஸ்.ஈ.’ அமைப்பில் நிலவும் ஊழல் முறைகேடுகளின் வெளிப் பாடாகும். தனது கட்டுப்பாட்டிலுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர் களுக்கு, அவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்து சான்றிதழ்களை வழங்கக் கூடிய ஓர் உயர் நிறுவனம் என்ற மதிப்புக்குரிய அமைப்பே இப்போது ஊழல் கண்காணிப்பு வளையத்துக்கு உள்ளாகி நிற்கிறது. தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்கள் கரங்களில் சென்றடையும் நேரம் வரை பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியத்தைக் காப்பாற்றத் தவறி, அதன் நம்பகத் தன்மையையும் அடிப்படையான கடமையையும் இழந்து நிற்கிறது சி.பி.எஸ்.ஈ. ” என்று எழுதியது.

அதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.ஈ. இயக்குனர்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். மத்திய மனித வளத்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுதும் எதிர்ப்புகள் வந்தன. உச்சநீதி மன்றத்தில் பொது நலன் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் உச்சநீதிமன்றம் ‘மறு தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பதை சி.பி.எஸ்.ஈ. தான் முடிவு செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றம் தலையிடாது” என்று கூறிவிட்டது. சி.பி.எஸ்.ஈ., இந்திய மருத்துவ வாரியம் என்பவை யெல்லாம் உச்சநீதிமன்றத்தின் செல்லப் பிள்ளைகள். எந்த முறைகேடு களுக்கும் அவைகளுக்கு அனுமதி கிடைத்து விடும்.

இப்படி வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யின் ஜார்கண்ட் மாநில சத்ரா மாவட்டச் செயலாளரும், பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவருமான சத்தீஸ்குமார் பாண்டே எனும் பார்ப்பனரும், ஏ.பி.வி.பி.யின் மற்றொரு நிர்வாகியான பங்கத் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

சி.பி.எஸ்.ஈ. உயர் மட்ட பார்ப்பன அதிகாரிகளுக்கும் பயிற்சி மய்யம் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும் இடையே நிலவும் கள்ள உறவு - இதன் மூலம் அம்பலமானது.

கடந்த ஆண்டு மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு வினாத்தாள்களை தயாரித்து, கடும் எதிர்ப்புக்குப் பின் இனி இந்தத் தவறுகள் நடக்காது என்று கூறியது சி.பி.எஸ்.ஈ.  இந்த ஆண்டு 5000 தமிழக மாணவர்களை வெளி மாநிலத்தில் தேர்வு எழுத துரத்தி அடித்துவிட்டு, கணினியில் நடந்த கோளாறு என்று அலட்சியமாகக் கூறியதோடு உச்சநீதிமன்றம் வரைப் போய் தனது ‘தவறு’க்கு ஆதரவாக உத்தரவையும் பெற்று, தனது அதிகார செல் வாக்கை திமிருடன் வெளிப்படுத்தியது.

2017ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தையும் நிiனைவுபடுத்துகிறோம். 2017ஆம் ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.ஈ.  நடத்திய 12ஆம் வகுப்புக்கான தேர்வில், 2000 மாணவர்களுக்கான விடைத் தாள் களில் மதிப்பெண் வழங்குவதில் மிகப் பெரும் ஊழலை திட்டமிட்டு நடத்தி னார்கள். 2000 மாணவர்களுக்குக் 26க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கூட்டலில் கூடுதலாக வாரி போடப்பட்டன.

மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 2.47 சதவீதம் பேருக்கு இப்படி கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மதிப்பெண் கூட்டலில் நடந்த இந்த மோசடியை ‘மூடி மறைக்க’ சி.பி.எஸ்.ஈ. பார்ப்பன அமைப்பு 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அத்துடன் தனது மூத்த அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு விசாரணைக்கும் உத்தரவிட்டது. டெல்லியில் சி.பி.எஸ்.ஈ. மண்டல அதிகாரியாக இருந்த எஸ்.எஸ். ராவர்ட் தலைமையில் விசாரணை நடந்தது.  அவர் பல தேர்வு மய்யங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி மதிப்பெண் கூடுதலாக போடப்பட்டதை உறுதி செய்தார்.

அதுவும்கூட மத்திய மனித வளத்துறை அமைச்சகம், கல்வித் துறை செயலாளர் அனில் சுவரூப், சி.பி.எஸ்.ஈ. தலைவர் ஆர்.கே. சதுர்வேதி (பார்ப்பனர்) ஆகியோரை அவசரமாக அழைத்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பிறகு தான் இந்த நடவடிக்கைகளை சி.பி.எஸ்.ஈ. எடுத்தது.

மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று விசாரணைக் குழுக்கள் உறுதிப்படுத்தின. அவ்வளவுதான். சி.பி.எஸ்.ஈ.யில் ‘தற்காலிகப் பணி நீக்கம்’ என்ற சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு பிரச்சினையை மூடி மறைத்துவிட்டனர். இப்படி சி.பி.எஸ்.ஈ. முறைகேடுகளை ஏராளமாக பட்டியலிட லாம். ‘இவாள்கள்’ ஒன்றும் ‘புனிதப் பசுக்கள்’ அல்ல; ஊழல் பெருச்சாளிகள்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழர்களின் அடிப்படை யான கோரிக்கை. ‘நீட்’ தேர்வை தமிழகத் திலிருந்து விரட்டும் வரை தமிழர்கள் ஓய மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நீட் தேர்வுகள் இந்த உணர்வை மேலும் மேலும் தீவிரமாக்கியே வருகின்றன.

நீட் தேர்விலிருந்து தமிழகத்தை விலக்க வேண்டும்; இல்லையேல் தமிழகம் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளும். அந்த நிலையை உருவாக்கிட வேண்டாம்!