ஆகமங்களைத் தடை செய்யக் கோரி - இனி ஆகம எரிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறிய தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆகம விதிகள் பார்ப்பனர்களால் மீறப்பட்டதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

வயலூர் முருகன் கோயில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து விட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. ஏற்கனவே 10 ஆண்டுகளாக எவ்வித வேத ஆகம தகுதித் தேர்வுகள் இல்லாமல் குல வழி அர்ச்சகர்களாக இருக்கும் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கு, இந்த இருவரும் முறைப்படி அறநிலையத் துறை நியமனம் பெறாவிட்டாலும் அந்தக் கோயிலின் காமிகா ஆகமப்படி ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அர்ச்சகர் தகுதி உண்டு என்று நீதிபதி

ஜீ.ஆர். சாமிநாதன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அறநிலையத் துறை நியமித்த மூன்றாவது அர்ச்சகர் பார்ப்பனர் என்பதால் அவரை எதிர்த்து வழக்கு இல்லை.Madurai High Courtஅரசியல் சட்டத்தைவிட அதிக அதிகாரம் படைத்தது ‘ஆகம விதிகள்’ என்று பார்ப்பனர்கள் அதைத் தங்கள் ஆதிக்கத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகம விதிகளில் அப்படி ஜாதி, குலம் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ் ஆகமங்களில் அப்படி இல்லை என்று ஆகமப் பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதற்காக ‘பழக்க வழக்கப்படி’ (Custom and usages) என்ற சட்டத்தில் இடம் பெற்ற சொல்லை ஆகமத்தோடு இணைத்துக் கொண்டு பார்ப்பன ரல்லாத மக்கள் மீது கருவறைத் தீண்டாமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது பார்ப்பனக் கூட்டம். நீதிமன்றங்கள் இதற்குத் துணை போகின்றன.

சரி; ஆகமவிதிகள் இதுவரை மீறப்பட்டதே இல்லையா? காலத்துக்கேற்ப அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படவில்லையா?

ரிஷிகள் காலத்து ஆகமங்களை இப்போதும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிற பார்ப்பனர்கள், நீதிமன்றங்கள் கோயிலில் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்ற பிரச்சினைகளில் தங்கள் வசதிக்காக ஆகமங்களை சாஸ்திரங்களை மீறுகிறார்கள். பிராமணன், கடல் தாண்டக் கூடாது என்பது சாஸ்திரம். வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தீவிர பார்ப்பனியவாதி மாளவியா, இதற்குப் பரிகாரமாக கங்கை நீரையும் மண்ணையும் எடுத்துச் சென்று இலண்டனில் பூஜை செய்து தீட்டுக் கழித்து பரிகாரம் செய்தார். இந்துக் கடவுள்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு போய் அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் முஸ்லீம்கள் வாழும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கோயில்களைக் கட்டுகிறார்கள். அதற்கு பார்ப்பன அர்ச்சகர்கள் கடல் தாண்டி விமானத்தில் பறக்கிறார்கள். அந்த நாடுகளின் குடிமகன்களாகவே பதிவு செய்து கொள்கிறார்கள்.

கோயில்களில் மின் விளக்கு, கண்காணிப்பு கேமிரா, ஆன்லைன் தரிசன டிக்கட் என்றெல்லாம் வந்துவிட்டது. ஆகமங்களில் இவை கூறப்பட்டுள்ளனவா? சொல்லப்போனால் ‘பிராமணர்கள்’ சாஸ்திரப்படி வேதம் ஓத வேண்டும். வேதத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். சாஸ்திரங்களை மீறி நீதிபதிகளாகவே வந்து உட்கார்ந்து கொண்டு சாஸ்திரம், ஆகமங்களை மீறக்கூடாது என்கிறார்கள்.

தமிழர்கள் அதுவும் பார்ப்பனரல்லாத இந்துக்கள் இந்த இழிவை எத்தனை ஆண்டு காலம் சுமப்பது! இனி ஆகமங்களை தடை செய்! என்ற போராட்டத்தை நாம் தொடங்கியாக வேண்டும்.

கேரள கோயில்களில் பாகுபாடு காட்டும் ஆகமங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1969ஆம் ஆண்டிலிருந்து அங்கே ஆகமங்களைப் புறந்தள்ளி அனைத்து ஜாதியினரும் அர்ச்கராக இருக்கிறார்கள்; வடநாட்டுக் கோயில்களில் ஆகமங்கள் பின்பற்றப்படுவதில்லை.

இப்போது மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்? அவர் நம்பிக்கையாளராக இருக்கலாம். அதற்காக அரசின் கொள்கையை பலிகடாவாக்கினால் அதை நாம் அனுமதிக்க முடியாது. பெரியாரின் ‘நெஞ்சில் தைத்த முள்ளாக’ இருந்த இந்த இழிவை நீக்குவதற்கு தமிழக முதல்வர் பதவியேற்ற 100 நாட்களுக்குள் செயல்படுத்திக் காட்டிய ‘இந்த சமூக நீதிப் புரட்சித்’ திட்டத்தை அறநிலையத் துறையில் ஊடுறுவியுள்ள அதிகாரிகளும் அமைச்சரும் துணை போகக் கூடாது; அது முதல்வருக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்றார் விடுதலை இராசேந்திரன்.