kolathoor mani uma and viduthalai rajendranஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள். கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக இருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்கக்கூட தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்கள் கருத்து தவறு என்று சொன்னால் நீங்கள் மன்னிப்பு கூட கேட்க வேண்டாம் நீங்கள் அம்பலப்பட்டு நிற்பதே போதும். தாராளமாக வந்து கேள்விகளை கேட்கலாம்.

நாங்கள் இக்கருத்தரங்கில் அப்படி ஒன்றும் பெரிதாக கடுமையான விமர்சனத்தைக்கூட வைக்கவில்லை. ‘இஸ்லாமும் பெண்களும்’ என்று தலைப்பு மட்டும்தான் வைத்தோம் வேறு ஒன்றும் அதில் இல்லை; இஸ்லாமியர்களைப் பற்றி எல்லாம் எதுவுமே இல்லை. தலைப்புகள், 'இந்து மதமும் பெண்களும்' 'இஸ்லாமும் பெண்களும்' இதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை அவர்களால். இது என்ன விதமான மதநம்பிக்கை என்றும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொல்வார்கள், நபிகள் சொல்லி இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் நபி, “இஸ்லாத்தில் நம்பிக்கையற்றவர்களை வெட்டுங்கள்” என்று சொன்னதை எல்லாம் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

அதற்காக சில ஆதாரங்களை முன் வைக்க விரும்புகிறேன். 47ஆவது அத்தியாயத்தில் 1 முதல் 4 வரை “நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின் அவர்களது கழுத்துகளை வெட்டுங்கள்”. இவை எல்லாம் இறை வசனங்கள். இரண்டாவது அத்தியாயத்தில் 191 “அவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்”. எட்டாவது அத்தியாயத்தில் “நீங்கள் அவர்களது பிடரியில் மேலிருந்து வெட்டுங்கள் அவர்களைக் கணுக்கணுவாக துண்டித்து விடுங்கள்". எட்டில் நாற்பத்தி ஒன்பதாவது வசனம் “அல்லாஹ்வினுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் புரியுங்கள்”. “கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள் அவர்களை சிறை பிடியுங்கள், முற்றுகையிடுங்கள், பதுங்கியிருந்து பாயுங்கள்.” “நபியே நீர் இஸ்லாமியர்களை யுத்தத்திற்கு தூண்டுவீராக” என கடவுள் நபிக்கு ஆணையிடுகிறார். “விரோதிகள் ரத்தத்தை பூமியில் ஓட்டாத வரை சிறை பிடிப்பது எந்த ஒரு நபிக்கும் பகுமானம் அல்ல” என யாராக இருந்தாலும் முதலில் ரத்தம் பூமியில் விழ வேண்டும் என்று கூறுகிறது. இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் எடுத்துக் காட்டுகள் மட்டுமே.

இதைத் தான் நாங்கள் தவறு என்று கூறுகிறோம். இதுதான் ஃபாருக்கை கொலை செய்தவர்களைத் தூண்டியது என்று நாங்கள் சொல்கிறோம். அவர்கள் இல்லை என்று சொல்லட்டும். நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். மேலும் சில செய்திகளைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதில் ஒன்று பெண்களுக்கான சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி பெரியார் இஸ்லாமியர்களின் கூட்டத்தில் பேசிய ஒரு செய்தியை கூறுகிறேன். 1931இல் சாத்தான்குளத்தில் பெரிய பள்ளிவாசலில் நபிகள் பிறந்த நாள் கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், அப்போது இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று பேசுகிறார். அதாவது அவர் அங்கிருந்த பல தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

பலர் பெரியாரிடம் கேள்வி கேட்கிறார்கள், "நீங்கள் ஒரு சுயமரியாதைக்காரர். ஒரு மதத்தினை எப்படி அடையாளம் காட்டலாம்" என கேள்வி கேட்கின்றனர். அதற்கு பெரியாரின் பதில் “நான் சுயமரியாதைக்காரன் தான்; நம்பிக்கை இல்லாதவன் தான். ஆனால் ஒருவன் ஜாதியின் காரணமாக கேவலப்படுத்தப் படுகிறான், அவமானப்படுத்தப்படுகிறான், இழிவுபடுத்தப்படுகிறான். அவன் என்னிடம் வந்து கோரிக்கை வைக்கிறான். அய்யா என் மீது உள்ள தீண்டாமைக் கொடுமை நீங்க வேண்டும். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று. அப்போது நான் சொல்லுவேன், உன் மதத்தை நீ விட்டுவிடு என்று. அதற்கு அவன் என்னால் விட முடியாது, எனக்கு இறந்ததற்குப் பின் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது, இந்த மதத்தில் இருந்தால்தான் சொர்க்கத்திற்கு செல்ல முடியும், எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்கிறான். நான் சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்பதை விவாதிக்க விரும்பவில்லை. அவனுக்கு வழிகாட்ட வேண்டிய அவசியம் இருக்கிறதா, இல்லையா? சொல்லலாமா வேண்டாமா? அவனுக்குச் சொல்லுகிறேன், நான் சுயமரியாதைக்காரருக்கு இதைச் சொல்லவில்லை. பெண்ணுரிமையைப் பேசுபவர்களுக்கு எப்போதுமே சொல்ல மாட்டேன். ஆனால் தன் மீது உள்ள தீண்டாமை மட்டும் போகாதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிற ஒரு தீண்டப்படாத தோழனுக்கு நான் சொல்லுகிற அறிவுரை தான் இஸ்லாமியராக மாறிவிடு என்பதாகும்”.

கூடவே இதையும் சொல்கிறார் “நீ உண்மை இஸ்லாமியனாக இருந்தால் என்ன? பொய் இஸ்லாமியனாக இருந்தால் என்ன? நீ இஸ்லாமியனாக வேஷம் போட்டு விடு, போதும். உன் மீது உள்ள தீண்டாமை போய்விடும்” என்று கூறுகிறார் பெரியார். இது இஸ்லாமிய கூட்டத்தில் பள்ளிவாசலில் பெரியார் பேசிய பேச்சு. குடிஅரசில் இந்த செய்தி இருக்கிறது.

சுயமரியாதைக்காரருக்கு ஆகவே ஆகாதது மதம் தான். ஆனால், ஒருவர் மீதுள்ள தீண்டாமை போகாதா என்பதற்குத் தான் இஸ்லாம் பரிந்துரைக்கப் பட்டது. பெரியார் இயக்கம் இரண்டு பணிகளைச் செய்தது. அடிப்படையில் அது இன இழிவு ஒழிப்பு இயக்கம். நம் பெரும்பான்மை மக்கள் மீது சூத்திர, பஞ்சம இழிவு சுமத்தப்பட்டிருக்கிறது அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். அதே நேரத்தில் இது பகுத்தறிவு இயக்கமும் தான். ஆனால், அதைவிட இன இழிவு ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்ததால் தான் இப்படியான (இஸ்லாம் பரிந்துரை) செய்திகளைப் பேச வேண்டிய தேவை வந்தது. கண்டிப்பாக பகுத்தறிவு பேசியிருந்தால் மதங்களைப் புறக்கணித்திருந்தால் போதும். ஆனால், ஜாதியும் ஒழிய வேண்டும் என்று பேசியதால் தான் இஸ்லாமாகலாம் என்ற பரிந்துரைகள் பேசப்பட்டன.

எந்தளவிற்கு அவர்கள் பெண்களை அடக்கி வைத்தார்கள் என்று பெரியாருக்கு தெரிந்திருக்கிறது, அவர் மேடையிலும் குறிப்பிடுகிறார். அதே கூட்டத்தில், “அனைத்து மதங்களும் அழியும் போது இஸ்லாமும் அழியும்” என்று நபிகள் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசினார். பெரியாரை அழைத்தவர்களும் இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாதா இது பகுத்தறிவுக்கு ஒவ்வாது, பெண்ணுரிமையைப் பேணாது என்று. புதிதாக இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? வஹாபிசம், தூய்மையான இஸ்லாத்தைப் பேண வேண்டும் என்று புதியதாக ஒன்றை உருவாக்கி விட்டார்கள்.

பெண்கள் வெளியே போகக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால், போர்க்களத்திற்கு பெண்களே போன செய்திகள் ‘ஹதீஸில்’ உள்ளன. ‘உஸ்மான் கொலைக்குத் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அலி மீது ஆயிஷாவிற்கு கோபம். ஆயிஷா தலைமையில் போர் நடக்கிறது. அது இஸ்லாமியர்களுக்கு உள்ளான போர். இஸ்லாமியர் வெட்டி ஏராளமான இஸ்லாமியர்களே சாகிறார்கள். தலைமை தாங்கியது யார்? ஆயிஷா, நபியின் அன்பு மனைவி. கடவுளின் கடைசி தூதர்.

அந்த ஒரே கூட்டத்தில் பெரியார் பல செய்திகளைப் பேசுகிறார். நபிகளை பெரியார் கடைசி தூதர் என்றார் என்று அப்துல்லா (பெரியார் தாசன்) பேசிக் கொண்டிருந்தார், அந்த ஒரு வரியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு. அதற்கு கீழே இருப்பதை அவர் குறிப்பிடவில்லை. “ஒரு காலத்தில் இந்து மதத்தில் கடவுள்கள் நேராக இங்கே வந்தார்கள் என்றார்கள். அது மக்களுக்கு அறிவே இல்லாத காலம். கொஞ்சம் அறிவு வந்த போது கேள்வி கேட்கிறார்களே என்று ‘கடவுளின் மகன் இங்கே இருக்கிறார்' என்றார்கள். இன்னமும் அறிவு தெளிவு மக்கள் பெற்று, கேள்வி கேட்டவுடன், 'கடவுளின் தூதன் வந்து விட்டேன்' என்று கூறி விட்டார்கள். அதிலும், தன்னைப் போன்று வேறொருவர் வந்துவிட்டால் என்ன செய்வதென்று எச்சரிக்கையாக நான் தான் கடைசி தூதர் என்றும் கூறி விட்டார்கள்” என்று இஸ்லாமிய கூட்டத்தில் தான் பெரியார் பேசுகிறார்.

“இவர் மட்டும் கடைசி தூதர் அல்ல. சைவ மதத்தில் 63 நாயன்மார்களுக்குப் பிறகு 64 ஆவதாகவும் யாரும் வரவில்லை. 12 ஆழ்வார்களுக்குப் பிறகு 13 ஆவது ஆழ்வாரும் வரவில்லை. ஏனென்றால் மக்களுக்கு அறிவு வந்துவிட்டது” நபி கடைசி தூதர் என்பதற்குத்தான் இந்த விளக்கத்தைப் பெரியார் கூறுகிறார். இதை அப்துல்லா பேசாமல், இருட்டடித்தார்.

இப்படிப் பேசித் தான் உறவு பேணப்பட்ட இந்த தமிழ்ச் சமுதாயத்தில், உறவாய் இருந்த தமிழ்ச் சமுதாயத்தில் ஒன்றுபட்டு அரசியல் கோரிக்கைகளில் துணை நிற்கிறோம். அவர்களும் நமது கோரிக்கைகளில் உடன் இருந்தார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்த கொண்டுதான் நம்மை மத சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்று கூறுகிறார்கள். யாருக்கு சகிப்புத் தன்மை இல்லை என்றுதான் நாம் இப்போது பேச வேண்டியுள்ளது. இந்துத்துவவாதிகள், மாட்டுக்கறி யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தவர்கள், இப்போது மாட்டுக்கறி சாப்பிடாதே என்கிறார்கள். அம்பேத்கர் கூறுவார், "அனைத்து விழாக்களிலும் மாடு கட்டாயம் வெட்டப்படும். எதற்காக என்றால் மாடு புனிதமானது. அதை வெட்டினால் தான் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்று வெட்டினார்கள். வெட்டுகிற விவசாயிக்கு ஒருமுறை கூட கிடைக்காது. ஆனால் பூசாரி தினமும் பூசையில் இருப்பான், அவன் தினமும் மாட்டுக்கறி சாப்பிடுவான். எனவே பார்ப்பனர்கள் நாள் தவறாமல் மாட்டிக்கறியை சாப்பிட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.

அவனை மட்டும் குறை கூறிவிட்டு நீங்களும் அதே போன்று நடந்து கொள்வது சரியாகாது. இஸ்லாமும் பெண்களும் என்று தலைப்புகூட வைக்கக் கூடாது என்று சகிப்புத்தன்மை துளியும் அற்று இருப்பது யார் என்று இஸ்லாமியத் தலைவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். வாருங்கள், விவாதிக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் கூறுவது, இந்து மத அடிப்படை வாதம் வளர்ந்து வருகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதமும் வளர்ந்து வருகிறது. களையெடுக்காமல் விட்டுவிட்டால் சமூக அமைதி சீர்குலைந்து விடும் என்பதை நாம் பேச விரும்புகிறோம். இதைக் கூட பேச விடக்கூடாது என்றளவிற்கு அடிப்படைவாதம் வளர்ந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்கிறோம்.

- கொளத்தூர் மணி