தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்து கொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக். காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவமில்லை’

கோடியில் புரளும் பங்கு சந்தை வணிகம் ‘மனுதர்ம’ கும்பலிடம் சிக்கி அவர்களின் கொள்ளைக் கூடாரமாக மாறி இருக்கிறது. இப்போது சி.பி.அய். விசாரணை வளையத் துக்குள் அது வந்திருக்கிறது. கடந்த இதழில் வெளி வந்த தகவல்களை சுருக்கமாகத் தொடர்வோம்.

          இனி தொடரைப் படியுங்கள்.

புலனாய்வுத் தணிக்கையை மேற்கொள்ள, செபி ‘டெலாய்ட்’ என்னும் புகழ்பெற்ற தணிக்கை நிறுவனத்தை நியமித்தது. 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தணிக்கைச் செயல்பாடுகளைச் செய்து, ‘கோ லொக்கேஷன்’ வணிக முறையில், பல முறைகேடுகள் நடந்ததை ‘டெலாய்ட்’ தன் அறிக்கையில் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, செபி தேசியப் பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவை மாற்றியமைத்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ரா ராமகிருஷ்ணா பதவி விலகினார்.

இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆனந்த் சுப்ரமணியத்தைக் குழுமச் செயல் தலைவராக நியமித்த முறைகேடு தொடர்பாக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு அனாமதேய கடிதம் வர, அதையும் விசாரிக்குமாறு செபி உத்தரவிட்டது. தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் ஊழியர்களை நியமிக்க இருந்த ஒரு விதியும் இவர் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. விதிகளை மீறி, நிறுவனத்தில் இவர் ஓர் உயர் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதை செபியின் விசாரணை அறிக்கை உறுதிசெய்தது.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடிய தேசியப் பங்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு, ஆனந்த் சுப்ரமணியத்தை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது. ஒரே நாளில், ஆனந்த் சுப்ரமணியம் வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ‘கோ லொக்கேஷன்’ வணிக முறைகேடுகள் தொடர்பாக செபி நடத்திய விசாரணைகளின் முடிவில், 2019ஆம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்துக்கு, ரூ.625 கோடி அபராதமும், முறைகேடு நடந்த காலத்திலிருந்து 2019 வரையான காலத்துக்கு, வருடம் 12ரூ வட்டியும் விதித்தது. இந்தக் காலத்தில், தேசியப் பங்குச் சந்தை யில் பணிபுரிந்த ரவி நாரயண் மற்றும் சித்ரா ராம கிருஷ்ணாவின் ஊதியத்திலிருந்து 25ரூ தொகையைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இது தவிரவும், சித்ரா, தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்து கொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப் பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக். காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவ மில்லை’ என்றெல்லாம் அபத்தமான பதில்களைச் சொல்லியிருக்கிறார். இது ஏனையவர்களைப் பைத்தியமாக்கும் முயற்சிதானே தவிர, அவர் தேர்ந்த சித்தத்துடன்தான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையே நாம் நம்ப வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், அந்த ‘யோகி’யுடன் இந்தப் பரிவர்த்தனையோடு, சித்ரா ராமகிருஷ்ணாவின் சிகை அலங்காரம் தொடங்கி சீஷெல்ஸ் தீவுகளில் உல்லாசப் பயணம் போவது பற்றிய திட்டங்கள் வரையிலான மின்னஞ்சல்களும்கூட பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. உருவமில்லா யோகிக்கு எப்படி மின்னஞ்சல் ஐடி வந்தது? ஆனால், சீஷெல்ஸ் தீவுகளில் உல்லாசப் பயணம் போகும் திட்ட மெல்லாம் யோகி செய்யும் காரியமா என செபி கேட்டதுபோலத் தெரியவில்லை. மிக முக்கியமாக, இந்தக் குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணையை செபி ஏன் எதோ ஒரு சாதாரண டிபார்ட்மெண்ட் என்கொயரி போல மென்மையாகவும் மெதுவாகவும் பல ஆண்டுகள் இழுத்தடித்து நடத்துகிறது என்பதும் சந்தேகம் எழுப்பும் செயல்பாடே ஆகும்.

இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை விளக்கும் சுசேதா தலால், இதை, ‘காவலனைச் சிறைபிடித்தல்’ (Regulatory Capture), என்னும் பதத்தை உபயோகித்து விளக்குகிறார்.

இந்த வேறுபாட்டை ரவி நாரயணனும், சித்ராவும் மிகச் சாமர்த்தியமாக உபயோகித்துக் கொண்டார்கள். நிதி அமைச்சகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு, தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் ஆலோசகர் பதவிகளை அள்ளி வழங்கினார்கள். தனியார் நிறுவனம் என்பதால் இதை அவர்களால் எளிதாகச் செய்ய முடிந்தது. அதேபோல, செபியில் உள்ளவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. திரைமறைவில், அரசியலர்களின் ஆசியும் கிடைத்தது. எல்லாம் அவாள்கள்தான்; பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை.

தேசிய பங்குச் சந்தை, உலகின் மிகப் பெரும் பங்குச் சந்தைகளுள் ஒன்றாக உருவெடுத்தவுடன், தேசியப் பங்குச் சந்தையும், அதன் நிர்வாக அதிகாரிகளும் மிக ஆணவத்துடன் நடந்து கொள்ளத் தொடங்கினார்கள். விதிமீறல்களைக் கேள்வி கேட்கும் செபியை அலட்சியப்படுத் தினார்கள். அவர்கள் அனுப்பும் தணிக்கை அதிகாரிகளை மோசமாக நடத்தினார்கள்.

கடந்த சில பத்தாண்டுகளாக, இந்திய அரசு, அரசு வணிக நிறுவனங்களிலும், பொருளாதாரச் செயல்பாடுகளிலும் இருக்கக் கூடாது என்னும் ஒரு குறுகிய பார்வையில், பெரும் செல்வங்களை வைத்திருக்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் வசம் அளித்து வருகிறது. இதில் தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் துறையில் இயங்கும் பெட்ரோலிய நிறுவனங்கள், ரயில்வே துறை, விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்பு முதலிய துறைகள் முக்கியமானவை. இவையனைத்தும் தனியார் வசம் செல்வது, நாளை, இந்திய அரசு என்னும் இயந்திரத்தை, நிதி ஆதாரமற்ற ஒன்றாக மாற்றிவிடும்.

தனியார் வசம் செல்வது என்பது இன்று, இந்தத் துறைகள், ஒன்றிரண்டு ஒட்டுண்ணி முதலாளிகள் வசம் செல்வதாக உள்ளது. இந்தப் போக்கு இந்தியாவில் மிகப் பெரும் நிதி ஆதாரங்கள் கொண்ட, அசுர பலம் வாய்ந்த சில முதலாளிகளை உருவாக்கும்.

- விடுதலை இராசேந்திரன்