ஈரோடு மாவட்டம், பெருந்துறை கூதாம்பி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நமது கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பொறுப்பாளராக உள்ளார். இவர் ஊருக்கு அருகில் உள்ள கூதாம்பி என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிக்க சாதியினைச் சார்ந்த மக்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால்சொசைட்டி உள்ளது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பால் ஊற்றுவது இல்லை. அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதுமில்லை.

பால் கொள்முதல் செய்யும் போது தாழ்த்தப்பட்டோரிடம் உங்களது பாலில் புரத அளவு குறைவாக உள்ளது. டெஸ்ட் சரியாக வருவதில்லை என்று ஏதேனும் காரணம் சொல்லி அவர்களது பாலை வாங்குவதில்லை. அதே சமயம் அவர்களிடம் பாலை வாங்க செல்லும் பொழுது உங்களுக்கு பால் ஊற்ற முடியாது; அப்படியே பால் வாங்க வேண்டுமென்றால் வெளியிலிருந்துதான் வாங்க வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அதனைப் பற்றி அரசு அதிகாரியிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. கூதாம்பி பால் சொசைட்டியில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைக்கு தீர்வுகாண வேண்டி கடந்த 11.11.2014 அன்று மாணவர் கழகத் தோழர்கள் மூர்த்தி சொசைட்டியில் பால் வாங்க காலையில் சென்றார்.

அப்பொழுது பால்சொசைட்டிக்குள்ளே செல்லும் பொழுது அங்கிருந்த ஆதிக்க சக்திகளான செகரட்டரி கோவிந்தராஜ், உதவியாளர் வீரக்குமார் மற்றும் செல்வன் ஆகியோர் மூர்த்தியை சாதியை சொல்லி, ‘வெளியே போடா என்ன தைரியம் இருந்தா உள்ளே வருவே’ என்று தகாத வார்த்தை களில் பேசிக் கொண்டு அவரை அடித்து உதைத்தனர். தாக்குதலுக்கு உள்ளான மூர்த்தி, நமது தோழர்களால் அருகில் உள்ள கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் திங்களுர் காவல் துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டு வலுக் கட்டாயமாக ஆம்னிவேனில் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு காவல் ஆய்வாளர் முன்னிலையில் (கோவிந்தராஜ், வீரக்குமார் செல்வன்) அவர்கள் மீது நீ வழக்கு கொடுக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டார்.

அங்கிருந்த தோழர்களின் எதிர்ப்புகளால் இரவு 10.00 மணிக்கு மூர்த்தியின் புகார் மனுவை நிராகரித்து காவல் ஆய்வாளரின் ஆலோசனை படி மூர்த்தி எழுதியதாக புகார் மனு தயார் செய்யப்பட்டு அதில் மூர்த்தியை மிரட்டி கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்று பதில் கூறினார்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற முன்பிணை கிடைத்தது. நீதிமன்ற பிணை கிடைத்த மகிழ்ச்சியில் ஆதிக்க சாதி வெறியர்கள் மூர்த்தி குடியிருக்கும் கூதாம்பி காலனிக்க உள்ள சாலையில் இரவு பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு மட்டுமில்லாமல் அங்கு இருந்த மக்களை சாதியை சொல்லி மிகக் கடுமையாகவும் மிரட்டும் தொனியுடன் சத்தம் போட்டுவிட்டு சென்றனர்.

உடனே அங்கு இருந்த தோழர்கள் காவல் நிலையத்திற்கு (திங்களுர்) போனில் தகவல் அளித்தனர். ஆனால் காவல் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இது குறித்து அடுத்த நாள் காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் காவல் துறை ஆய்வாளரிடம் புகார் மனு கொடுத்த போது தொடர்ந்து வழக்கு கொடுக்க வேண்டாம். அவர்களை (ஆதிக்க சாதி) அழைத்து, ‘இதற்கு மேல் இது போல் செய்ய மாட்டேன்’ என்று எழுதி வாங்கி தருகிறேன் என்று கூறினார். அடுத்த நாள் அவர்களை வரவழைத்து எழுதி வாங்கப்பட்டது.

இந்நிலையில் நமது தோழர் மூர்த்தி கல்லூரி முடித்து வீடு திரும்பும் பொழுது ஆதிக்க சாதி வெறியர்களான செல்வம் மற்றும் வீரக்குமார் ஆகியோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகு 03.03.2015 அன்று மூர்த்தி மீண்டும் பால் சொசைட்டிக்கு பால் வாங்க சென்றார்.

அப்பொழுது அங்கு இருந்த கோவிந்தராஜ், மோகன்ராஜ், மகேஷ், தமிழரசு உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் உனக்கு பால் ஊத்த முடியாது என்று கூறி அவரை மிரட்டி உள்ளார்கள். இது குறித்து மூர்த்தி கழகத் தோழர் அர்ச்சுனனிடம் தொலைபேசியில் கூறி உள்ளார். இதை கேட்டு அங்கு சென்ற அர்ச்சுனன் மற்றும் மூர்த்தி ஆகியோர் மீது அங்கு இருந்த ஆதிக்க சாதியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதை அர்ச்சுனன் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அருகில் இருந்த கழகத் தோழர்கள் துரை மற்றும் சாக்கியர் பேரவை சார்ந்த கார்த்தி ஆகியோர்க்கு தகவல் கொடுத்தார். தோழர்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு மூர்த்தி இல்லை காவல்துறை அதிகாரிகள் வந்த பின்பு பால் சொசைட்டியை திறந்து பார்த்தபொழுது அதனுள் மூர்த்தி மயங்கி நிலையில் கிடந்தார்.

(ஆதிக்க சாதி வெறியர்கள் மூர்த்தியை மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி பால்சொசைட்டிக்கு உள்ளே வைத்து பூட்டி விட்டார்கள்) உடனே நம் தோழர்கள் பதறிபோய் 108க்கு தகவல் கொடுத்தார்கள். அங்கு வந்த 108-ல் மூர்த்தியை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் அங்கு இருந்த காவல் துறை உதவி ஆய்வாளராலும் ஆதிக்க சாதி வெறியர்களாலும் 108 ஆம்புலன்சை தடுத்து, ஆய்வாளர் வந்தால் தான் வண்டியை விடுவோம் என்று மறுத்து விட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கழகத் தோழர்கள் மீது காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்த முனைந்தனர். உடனே கழகத் தோழர்கள் அங்கு இருந்து தப்பி அர்ச்சுனன் தோழரை மட்டும் கொண்டு வந்து கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பால் சொசைட்டியில் மயக்க நிலையில் இருந்த மூர்த்தியை அங்கு இருந்த காவல் நிலையம் கொண்டு சென்று அங்கு வைத்து சாதி வெறியர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தாக்குதலுக்கு உள்ளான மூர்த்தியின் மீது ஆதிக்க சாதி வெறியர்களோடு கை கோர்த்த காவல்துறை பொய் வழக்கு போட்டு மூர்த்தியையும் கைது செய்தனர். தோழர் மூர்த்தி இப்பொழுது பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ஈரோடு இரத்தினசாமி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முழு செய்திகளையும் கூறி கோபி காவல்துறைத் துணைக் கண்காணிப் பாளர் உள்ளிட்ட காவல் துறையினரும் ஆதிக்கசாதி யினருக்குத் துணைபோகும் போக்குகளை எடுத்துக் கூறி விளக்கியதன் காரணமாக காவல் கண்காணிப் பாளர் வழக்கை கோபி துணைக் கண்காணிப் பாளருக்குப் பதிலாக சத்திய மங்கலம் துணைக் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக மாற்றி நியமித்துள்ளார்.