* அன்னை தெரசா - சமூகத் தொண்டுக்கு காரணம் மதம் மாற்றம் செய்வதுதான். - ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்

அவராவது மதம் மாற்றுவதற்காகவாவது சமூகத் தொண்டு செய்தார்; நீங்கள் செய்யும் ஒரே சமூகத் தொண்டு மதம் மாற்றுவது மட்டும்தான்!

* அஷ்டலட்சுமி கோயில் அர்ச்சகர் கராத்தேயில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கியவர். - செய்தி

அதுக்காக ‘கிராஸ்பெல்ட்டை’ கழற்றி வீசிடவாப் போறாரு?

* இந்தியாதான் எனது மதம். - மோடி

அப்படியா! இதைப்போய் ஒரு நாடுன்னு நினைச்சு நாங்க முட்டாள்தனமா நினைச்சுகிட்டே இத்தனை காலமா, ஏமாந்துட்டோங்க....

* இராஜபக்சேயின் ஆஸ்தான சோதிடர் கமனதாசா, தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். - செய்தி

குருநானக் கல்லூரியில் நடந்த மாநாட்டுக்கு வந்தாலும் வந்திருப்பார்; நல்லா தேடிப் பாருங்க!

* ராகுல் காங்கிரசிலிருந்து விடுமுறை எடுத்துள்ளார். - செய்தி

காங்கிரசே நீண்ட விடுமுறையில தானே இருக்கு? இவுருக்கு மட்டும் எப்படி விடுமுறை கிடைச்சுது?

* தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்க வில்லை. - முதல்வர் பன்னீர்செல்வம்

இப்படி எல்லாம் பேசாதீங்க சார்; அப்புறம் மிச்சமிருக்கும் உங்க கவுரவமும் குறைஞ்சுடப் போவுது!

* கரூர் கோயிலில் ஜெயலலிதா பிறந்த நாள் யாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு. - செய்தி

அரசு அதிகாரிகள் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாதுன்னு தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு என்னாச்சு? இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, அரசு சார்பில் ஒரு யாகம் நடத்துவீங்க போலிருக்கு!