நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் தொடங்கியுள்ளன.

அதில் 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் பிரிவுக்கான வினாத்தாளில், பிஞ்சு உள்ளங்களில் ‘வர்ணாஸ்ரமத்தை’த் திணிக்கும் வினா ஒன்று கேட்கப்பட்டுள்ளது.

“இந்து மத வர்ணாஸ்ரமத்தின்படி மிகக் கீழான ஜாதி எது? 1. பிராமணன், 2. சூத்திரர்கள், 3. சத்திரியர்கள், 4. வனப்பிரஸ்தர்கள் என 4 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. இதில் எது சரி என்பதை 6ஆம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து ‘டிக்’ செய்ய வேண்டும். ‘சூத்திரன்’ தான் கீழான ஜாதி என்று கூறினால்தான் மதிப்பெண்.

வரலாற்று புத்தகத்தில் வர்ணாஸ்ரம ஜாதி அமைப்புப் பற்றி விரிவாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பின் பற்றக்கூடாது என்று கடைசியில் ஒரு வரியை மட்டும் பாதுகாப்பாக சேர்த்துள்ளனர்.

இளம் மாணவர்கள் பின்பற்றவே கூடாத ஒரு கருத்தை ஏன் பாடத் திட்டத்தில் சேர்த்து ‘சூத்திரன்’ தான் இழிவான ஜாதி என்று அவர்களின் மண்டையில் ஏற்ற வேண்டும்? கீழ்க்கண்ட கேள்வியை வினாத்தாளில் கேட்பார்களா?

‘வர்ணாஸ்ரம தர்மம்’ எனும் ஏற்றத் தாழ்வுகளை சமூகத்தில் திணித்தது யார்? (1) பிராமணர்,

(2) சூத்திரர், (3) வைசியர், (4) வனப் பிரஸ்தர்கள்.

- நிச்சயம் கேட்க மாட்டார்கள். ‘பிராமணர்’கள் முகத்திரை கிழிந்துவிடும். ஆனால் இழிவான ஜாதி எது என்று மட்டும் கேள்வி கேட்பார்களாம்?

‘இந்துத்துவம்’, ‘இராமராஜ்யம்’ என்ற பெயரில் இவர்கள் கூறுவது எல்லாமே பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!