‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து... (கடந்த வார தொடர்ச்சி)

ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று கூறியதற்கே ஆண்டாளை அவமதித்து விட்டதாக துள்ளிக் குதிக்கும் ஜீயர் - வைணவப் பார்ப்பனர்களுக்கு அவர்களின் வேதமரபு குறித்து சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இதையெல்லாம் அவர்கள் பேச வைத்து விட்டார்கள். பெரியார் இயக்கத்தவர்களாகிய நாங்கள். அந்த ‘ஆபாசங்களை’ எல்லாம் இனியும் பேச வேண்டிய அவசியமில்லை என்று கடந்து போய்விட்டோம். ஆனால் எங்களை மீண்டும் வேத மரபின் வண்டவாளங்களைப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள்.

வேதங்கள் நான்கு. அய்ந்தாவதாக ஒரு வேதம் உண்டு. அதை ‘விவேக சாகரம்’ என்று கூறுகிறார்கள். அந்த ‘விவேக சாகரம்’ என்றால் என்ன என்பதை வைதீகத்தில் ஊறிப் போன ‘கலைமகள்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கி.வா.ஜகந்நாதன் என்ற பார்ப்பனர் விளக்கமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதியதை அப்படியே படிக்கிறேன்.

“ஒரு ‘பிராமணன்’ நான்கு வேதங்களும் கற்றுக் கொள்கிறான். இடையில் அவனுக்குக் கல்யாணம் ஆகிறது. வேதங்களை அத்தியானம் செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். மனைவியோடு வாழலாம் என்று வருகிறான். அவன் மனைவி ஒரு கள்ளப் புருஷனை வைத்துக் கொண்டிருக்கிறாள். தன் கணவனிடம் நான்கு வேதம்தானே கற்றிருக்கிறீர்கள். அய்ந்தாம் வேதம் கற்றுக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.

அந்த அப்பாவி ‘பிராமணனும்’ அதை உண்மை என்று நம்பி புறப்பட்டு விடுகிறான். சில பெண்களைச் சந்தித்தான். அய்ந்தாம் வேதம் கற்றுக் கொள்வதற்கு வந்திருப்பதாகவும், அதற்குரிய குருவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். அந்தப் பெண்கள் தாங்களே அய்ந்தாம் வேதத்தைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொருத்தியும் வெவ்வேறு வகையான தந்திரம் செய்து, தன் கணவன் இருக்கும்போதே அந்த ‘பிராமணனோடு’ இன்புறுகிறார்கள். இதுதான் அய்ந்தாம் வேதம் என்கிறார்கள். இப்படி அய்ந்து பேர் அய்ந்து வகையில் அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இடையில் வருபவை எல்லாம் பச்சையானச் செய்திகள். இந்தக் கதையைச் சொல்வதுதான் ‘விவேக சாகரம்’ - இதற்கு தமிழில் அறிவுக்கடல்” என்கிறார் கி.வா.ஜகந்நாதன். அது மட்டுமல்ல;

“அந்தப் பிராமணன் கற்றுக் கொண்ட விவேகம் முறையற்ற காமலீலையால்! இப்போது மட்டும் அந்தப் புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்குமானால் ஒரே நாளில் இலட்சம் பிரதிகள் செலவாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் கி.வா.ஜ. எழுதிய ‘புது டைரி’)

இந்த அடிப்படையிலேயே ஒரு கணவருக்கு 5 மனைவியரைக் கொண்ட கதையான மகாபாரதத்தை யும், 5ஆம் வேதம் என்று கூறுகிறார்கள்.

ஆண்டாளுக்காக ஜீயர்களும், வைணவப் பார்ப்பனர்களும்தான் வீதிக்கு வந்தார்களே தவிர, தீவிரமான சைவப் பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து போராடவில்லை. பார்ப்பனக் கோடரி காம்புகளாகி விட்ட ‘சூத்திர’ இந்து மக்கள் கட்சிகள்தான் கூப்பாடு போட்டன. சங்கராச்சாரிகள், ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள், இவர்களுக்கு வேத மரபுப்படி கோயில் சடங்குகளை செய்யவோ கோயில் கர்ப்ப கிரகத்தில் நுழையவோகூட உரிமை கிடையாது. வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்டவர்கள் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் சீனியர் சங்கராச்சாரி நுழைய முயன்றபோது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி யில் சிவன் கோயிலுக்கு திருப்பணிகளைத் தொடங்கி வைக்க காஞ்சிஜெயேந்திரன் வர இருந்த நிலையில் அதற்கு ஸ்மார்த்த பார்ப்பனருக்கு உரிமை இல்லை என்று சைவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். “ஆகம வழி நடத்தப்படும் கோயில்களை ‘இந்து’ என்ற போர்வையில் ஸ்மார்த்ர்கள் (ஸ்மிருதிகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஆகமங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனியொரு கடவுளின் இருப்பினை ஏற்றுக் கொள்ளாத பரமார்த்தில் மறைமுக நாத்திக வழியான) சங்கராச்சாரியிடம் பறி கொடுக்க மாட்டோம்” என்பதே சைவர்கள் தொடர்ந்த வழக்கு. சங்கராச்சாரி எதிர் வழக்காடாமல் அப்படியே ஒதுங்கிக் கொண்டார். சங்கராச்சாரி கர்ப்பகிரகத் துக்குள்ளே நுழைவதும் சிவன் கோயில் திருப்பணிகளை செய்வதும் ஆகமத்துக்கு எதிரானது என்று தீவிர சைவர்கள் கூறினாலும் பார்ப்பனர்கள் ஆகம மீறல்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உரிய பயிற்சிப் பெற்ற அர்ச்சகர்கள், கர்ப்பகிரகத்தில் நுழைந்து பூஜை நடத்துவது மட்டுமே ஆகமமீறல்கள் என்கிறார்கள். பார்ப்பன வேத மரபு சைவ-வைணவ மரபுகளை எல்லாம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ‘இந்து’ என்று பெயர் சூட்டிக் கொண்டு விட்டார்கள்.

சங்கராச்சாரி ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு எதிராக வைணவப் பார்ப்பனர்களும் போர்க்கொடி உயர்த்தி வந்திருக்கிறார்கள். வைணவர்களுக்காகவே ‘ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம்’ என்ற பத்திரிகையை திருச்சி புத்தூர் அக்கிரகாரத்தைச் சார்ந்த எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் என்ற பார்ப்பனர் நடத்தி வந்தார். அவர் ஒரு வழக்கறிஞர். ‘ஸ்ரீ ராமானுஜ மிஷன் ஸ்ரீ வைஷ்ணவ சபை’ என்ற அமைப்பின் தலைவர். இந்தப் பத்திரிகை ஸ்மார்த்த பார்ப்பனரான மூத்த சங்கராச்சாரி வைதீக மரபுகளை மீறி செயல் பட்டு வருவதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. காமகோடி சந்திரசேகரேந்திர சரசுவதி பத்திரிகை யாளர்களையும், திரைப்படக்காரர்களையும் வளைத்துப் போடும் இராஜதந்திரி என்று அவர் சீனியர் சங்கராச்சாரி பற்றி எழுதியிருக்கிறார்.

“காமகோடி பெரிய பீடாதிபதி பெரிய இராஜ தந்திரி. பொது ஜன பத்திரிகை நிர்வாகிகளையும், சினிமாக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் நீண்ட நாளாகவே தம் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு பிரபல வாரப் பத்திரிகையின் பிராமண நிர்வாகி, ஒரு பிரபல பாடகியை அநுலோப விவாஹம் செய்து கொண்டவராகையால், சிருங்கேரி பீடாதிபதி அவர்களுடைய பாத பூஜையை ஏற்க மறுத்துவிட்டார். காஞ்சி காமகோடிப் பெரியவர் அவர்களுடைய பாத பூஜையை ஏற்றுக் கொண்டு இன்றும் அப்பத்திரிகையின் பேராதரவைப் பெற்று நிற்கிறார்” என்று எழுதினார்.

அய்யங்கார் குறிப்பிடும் பிரபல வாரப் பத்திரிகையின் நிர்வாகி கல்கி சதாசிவம் அய்யர்தான். அவர் திருமணம் செய்து கொண்ட பெண் பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமிதான், வேறு யாரும் அல்ல. உயர்ஜாதி பார்ப்பனர்கள், ‘கீழ் ஜாதி’ சுப்புலட்சுமியை திருமணம் செய்து கொண்டதால் இதற்கு வேத மரபு ‘அநுலோப விவாஹம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. வேத மரபுப்படி இந்தத் திருமணம் முறைகேடானது. எனவே, இந்த தம்பதிகளுக்கு பூரி சங்கராச்சாரி ஆசீர்வாதம் வழங்க மறுத்து விட்டார். ஆனால் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி, கல்கி பத்திரிகையின் ஆதரவு வேண்டும் என்பதற்காக இந்தத் தம்பதியினரை ஆசீர்வதித்தார். சங்கராச்சாரி பார்ப்பனர்களுக்கு சாஸ்திரத்தைவிட பத்திரிகையின் செல்வாக்கு முக்கியம் என்கிறார் கிருஷ்ணசாமி அய்யங்கார். எம்.எஸ். சுப்புலட்சுமி, தன்னை தீவிரப் பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கலைஞர் முதல்வராக இருந்தபோது எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் பாடித் தருமாறு கேட்டபோது பாட மறுத்தவர்தான் எம்.எஸ். சுப்புலட்சுமி. சுப்புலட்சுமி தேவதாசி மரபில் வந்தவர்.

அதே போன்று சங்கராச்சாரியால் தனது ஆதரவு வலைக்குள் இழுத்துப் போடப்பட்டவர்தான் திரைப்படப் பாடல்களில் நட்சத்திரமாக விளங்கிய கண்ணதாசன். கண்ணதாசன், கவிஞர், திரைப்படப் பாடல் எழுதக் கூடிய திறமைப் பெற்றவர். ஆனால், நாவல் எழுத்தாளர் என்று கூற முடியாது. அவரது நாவல் ஒன்றுக்கு டெல்லி அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது எப்படி கிடைத்தது? அதற்குரிய தகுதி அந்த நாவலுக்கு உண்டா? இதை கிருஷ்ணசாமி அய்யங்கார் தனது பத்திரிகையில் அம்பலப்படுத்தினார். சங்கராச்சாரியின் ஆலோசனைப்படி குலசேகர ஆழ்வார் என்ற வைணவரை அவர் வைணவர் அல்ல; சைவர் என்று போலியான வரலாறுகளைத் திணித்து கண்ணதாசனால் எழுதப்பட்டது இந்த நாவல். இப்படி எழுதுவதற்கு கண்ணதாசனைத் தூண்டியவரே சீனியர் சங்கராச்சாரிதான். அந்த நாவலுக்கு ‘சாகித்ய அகாடமி’ பரிசையும் சங்கராச்சாரியே சிபாரிசு செய்து பெற்றுத் தந்தார் என்று எழுதினார், கிருஷ்ணசாமி அய்யங்கார்.

பார்த்தசாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ‘தீபம்’ என்ற இலக்கிய பத்திரிகையை நடத்தி வந்தார். 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின்போது கருப்புக் கொடி காட்டிய பார்ப்பனர் இவர். கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’யை சங்கராச்சாரி தொடர்ந்து விரும்பி படித்ததாகவும் அதை கண்ணதாசனிடமே அவர் கூறி மகிழ்ந்ததாகவும், ‘தீபம்’ பார்த்தசாரதி தனது பத்திரிகையில் எழுதினார். காஞ்சி மூத்த சங்கராச்சாரி வாரம்தோறும் தொடர்ந்து படித்த அந்த நாவல், காம உணர்வுகளை விரிவாக ‘காமரசம்’ சொட்ட எழுதப்பட்ட நாவல். உதாரணத்துக்கு அந்த நாவலின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டுகிறேன்.

“குளிக்கும் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள் பத்மாவதி. அது ஒரு அழகான சலவைக் கல் மண்டபம். சுவர்கள் சலவைக் கல்லாலும் தரை கடப்பைக் கற்களா லும் கட்டப்பட்டிருந்தன. நடுவிலிருந்த தொட்டி முட்டை கலந்து சாந்து பூசி பளபளவென்று இருந்தது. எதிரே ஒரு பெரிய நிலைக் கண்ணாடி மாட்டப்பட்டிருந்தது.

அவள் தன் ஆடையைக் களைந்து கொண் டிருக்கும்போது மெதுவாகத் தட்டினான் ரவிவர்மன். மெதுவாக “யாரது?” என்றாள் பத்மாவதி. “வேறு யார்?” என்றான் ரவிவர்மன்.

“நான் குளிக்கிறேன்” என்றாள் அவள்.

“நானும் குளிக்க வேண்டும்” என்றான் அவன்.

“அய்யய்யோ! வேண்டாம்” என்றாள் அவள்.

“நான் சத்தம் போட்டால் சகோதரி களுக்குக் கேட்கும்; கதவைத் திற” என்றான் அவன்.

மஞ்சள் ஆடையால் உடம்பைப் போர்த்தியபடி மெதுவாகக் கதவைத் திறந்துவிட்டு, சுவரில் மார்பைச் சாத்தியபடி நின்றாள் பத்மாவதி.

உள்ளே நுழைந்த ரவிவர்மன் கதவைத் தாழிட்டான். அவள் தலைகுனிந்தபடி நாணத்துடன், ‘என்ன இது’ என்றாள்.

“அல்லி மலர்கள் தண்ணீருக்குள் ஆடை யில்லாமல் தான் நிற்கின்றன. ஆடை வாடையைத் தடுக்கவே, கணவனின் ஜாடையைத் தடுக்க அல்ல” என்றான் ரவிவர்மன்.

“தயவுசெய்து போய்விடுங்கள்” எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றாள் அவள்.

“தண்ணீருக்குள் விழும்போது குளிரத்தான் செய்யும், கொஞ்ச நேரம் போனால் அது சுகமாகவே ஆகிவிடும்” என்று அவள் ஆடையைப் பறித்தான் ரவிவர்மன்.

தடுப்பவள் போல் தடுத்தாள்; ஆனால் தடுக்க முடியாதவள்போல் நடித்தாள்.

ஓடிப்போய் அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தாள். இப்போது தண்ணீரே அவளது ஆடையாக ஆகிவிட்டது.

“தண்ணீரைத் தொட்டுப் பார்த்த ரவிவர்மன், அய்யோ! கொதிக்கிறதே!” என்றான்.

“உங்கள் கை குளிர்ந்திருக்கிறது” என்று அவள் சொன்னாள். அப்போது பெண்மை பலம் மிக்கதாகவும், ஆண்மை பலகீனமான தாகவும் காட்சியளித்தன.”

துறவி சங்கராச்சாரியை அதாவது பற்றற்ற சங்கராச்சாரியை கவர்ந்த சாகித்ய அகாடமி பரிசுக்குப் பரிந்துரை செய்ய வைத்த நாவல் இது. இது வைதிக வேத மரபுப்படி அமைந்திருக்கிறது என்று சங்கராச்சாரி பெருமைப்படும்போது ‘ஆண்டாளை’ தேவதாசி மரபு வழியில் வந்தவர் என்ற வரலாற்றைக் கூறினால் மட்டும் இவர்கள் ஏன் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்?                                

(தொடரும்)