இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்:

பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற - அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ திலும், மனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் பகுத்தறிவு செயற்பாட் டாளர்களை ஒருங்கிணைப்பதிலும் எங்களோடு உடன்பட்டிருந்த அன்புத் தோழர் கோவை பாரூக்கின் படு கொலை, நாட்டின் ஒட்டு மொத்த ஜன நாயக ஆர்வலர்களுக்கும் செயற்பாட் டாளர்களுக்கும் நேர்ந்துள்ள மிகப் பெரிய இழப்பாகும்.

இஸ்லாமுக்குள் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிப்பதற்காகவே கருத்தை கருத்தால் வெல்ல இயலாத கோழை களால் கோவை பாரூக்கின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. கோவை தோழர் பாரூக் படுகொலை தொடர்பான செய்திகளை கடுமையாகக் கண்டிக்கும் ஜனநாயக சக்திகளை, இஸ்லாமிய மக்களுக்கு எதிரானதாக மடைமாற்றி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத் தும் சில அமைப்புகளின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.