farook 350கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது.

கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார்.

சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவரும் நிலையிலே பாரூக் உயிரிழந்து விட்டார். மதவெறி கொலைக் கூட்டமும் தப்பி ஓடியது. இது தனிப்பட்ட பிரச்சினையில் நடந்தது அல்ல. கடவுள் மறுப்பாளராக அவர் கருத்துகளை வெளியிட்டு வந்ததால் மதவெறியில் நடந்த கொலை என்று போலீசார் தெரிவித்தனர்.

பாரூக் கொலையுண்ட செய்தியறிந்து கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் பதறிப் போனார்கள். கோவை மாநகர கழகத் தோழர்கள் சம்பவம் நடந்த உடனே அந்த இடத்துக்கு விரைந்தனர். நள்ளிரவிலும் விடியற்காலையிலும் செய்திகள் அறிந்து தோழர்கள் அதிர்ச்சியடைந்து கோவைக்கு விரைந்தனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோவைக்கு விரைந்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட தோழர்கள் கோவைக்கு விரைந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வரை கழகத் தோழர்கள் உடனிருந்தனர். இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் உக்கடம் ‘ஹவுசிங் யூனிட்’ பகுதியில்தான் பாரூக் குடியிருந்தார். கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் சசிகுமார் என்ற இந்து முன்னணியைச் சார்ந்தவர் தனிப்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டபோது, கோவையில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகளை இந்து முன்னணியினர் சூறையாடி வன்முறைகளை ஏவினர். இதில் எந்த நிகழ்விலும் தொடர்பில்லாத பாரூக்கையும் இஸ்லாமியர்கள் சிலரோடு சேர்த்து காவல்துறை கைது செய்தது. பிறகு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நவம்பர் 8ஆம் தேதி சென்னையில் அறிவுரை குழுமத்தின் முன் நேர் நிறுத்தப்பட்டார். பாரூக் சார்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவுரை குழுமத்தின்முன் வாதாடினார்.

farook fb13 350பாரூக் இஸ்லாமியராக பிறந்திருந்தாலும் அவர் பெரியாரின் கடவுள்-மத மறுப்புக் கொள்கையோடு திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றியவர். இந்தக் கலவரத்தில் அவருக்கு தொடர்பில்லை. அவர் மதவெறி எதிர்ப்பாளர் என்று உரிய ஆவணங்களை முன் வைத்து கொளத்தூர் மணி வாதாடினார். வாதத்தை ஏற்று அறிவுரைக் குழுமம், பாரூக்கை மற்றும் குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தது.

தொடர்ந்து பாரூக் கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். தனது கடவுள், மத மறுப்புக் கொள்கைக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி கருத்துகளைப் பகிர்ந்தார். அவரது கருத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய இளைஞர் குழுவும் உருவாகியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசும் மதவெறியர்கள், இதை வளரவிடாமல் தடுக்க கருத்தை கருத்து ரீதியாக சந்திக்காமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இந்த வெறிச் செயலை செய்து முடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இஸ்லாமிய அடிப்படைவாதம் கொலை செய்தது இதுவே முதல் முறையாகும். இதுவரை 3 இஸ்லாமியர் சரணடைந்துள்ளனர். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசுகையில்,

“இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பாசிச சிந்தனையில் ஒரு சிலர் இந்த கொலையை செய் துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர் களையும் கழகம் எதிர்க்காது. இஸ்லாமியர்களை எங்கள் நட்பு சக்தியாகவே கருதுகிறோம். தோழர் பாரூக் வாழ்ந்த பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி.

farook fb 14 350எனவே இந்த கொலையை இந்து அடிப் படைவாதிகள் செய்துவிட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு, பெரியாரியல்வாதி களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பகைமையை உருவாக்குவதே நோக்கமாக இருக்கும் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

ஆனால், இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் வெறியூட்டப்பட்ட சிலர் இதை செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். வெளிநாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் தங்களை தீவிர இஸ்லாமியர்களாகக் காட்டிக் கொள்ளும் மதவெறி காரணமாக தமிழ்நாட்டில் சில இஸ்லாமிய இளைஞர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து, இத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவே நாம் கருதுகிறோம். தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ‘எதை சாப்பிட வேண்டும்; எப்படி உடுத்த வேண்டும்; எதை வணங்க வேண்டும்’ என்பதை மற்றவர் மீது திணிக்கிறது இந்து பாசிசம். இது எப்படி கண்டனத்துக்குரியதோ அதேபோல் இஸ்லாமியராக பிறந்துவிட்ட ஒருவர், கடவுள் மறுப்பாளராகவோ, மத மறுப்பாளராகவோ செயல்பட அனுமதிக்க முடியாது என்ற இஸ்லாமிய அடிப்படை வாதமும் ஒரு பாசிசமும் தான்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.