kovai modi agitation

கருப்புக் கொடி - கழகத்தினர் கைது

வெள்ளியங்கிரி வனப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து 4 இலட்சம் சதுர அடியில் யோகா மய்யம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் என்ற மோசடி ‘குரு’, ‘ஆதியோகி சிவன்’ என்ற ஒரு சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சட்ட மீறலுக்கும் ஆன்மீக மோசடிக்கும் ஏற்பு வழங்குவதுபோல பிரதமர் மோடி இந்த சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் 24.2.2017 அன்று கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பிற்பகல் 4.30 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கருப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டு, மோடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர். 5 மணியளவில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 15 பெண்கள் உள்பட 150 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழகத் தோழர்களை ஏற்றி வந்த காவல்துறை வாகனங்கள், மண்டபம் கிடைக்காமல், கோவை நகரையே சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது காவல்துறை வாகனங்களி லிருந்து தோழர்கள் மோடிக்கும் ஜக்கிக்கும் சங்பரிவார் களுக்கும் எதிராக எழுப்பிய முழக்கங்கள் கோவை நகரம் முழுதும் எதிரொலித்தது. காவல்துறையின் வாகனமே கழகத்தின் வாகனப் பரப்புரையாக தோழர்கள் மாற்றிக் காட்டினார்கள். ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி மற்றும் திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர், சேலம், கொளத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ஜக்கி வாசுதேவ் - ஈஷா மய்ய மோசடிகளை விளக்கி கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வந்த செய்திகளை துண்டறிக்கைகளாக அச்சிட்டு பல்லாயிரக்கணக்கில் பொது மக்களிடம் கழகத்தினர் வழங்கினர். இந்தத் துண்டறிக்கைகள் பொது மக்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள தாகவும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பல செய்திகளை தெரிந்து கொண்டதாகக் கூறி பாராட்டிய தாகவும் தோழர்கள் தெரிவித்தனர்.

மோடி வருகையொட்டி கோவை மாநகரமே எதிர்ப்பு அலைகளாக காட்சி அளித்தது. காலை முதலே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி, தொடர் நிகழ்வாக நடந்து கொண்டே இருந்தன.

விவசாயிகள் சங்கம், த.பெ.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், சமுக நீதி முன்னணி என்று, பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி கைதானார்கள். 8 திருமண மண்டபங்களில் 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்து வைக்கப்பட்டிருந்தனர். மோடி, கோவையை விட்டு சென்ற பிறகு, இரவு 10 மணியளவில் அருணா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டனர்.