மோடிக்கு கோவையில் கருப்புக் கொடி காட்டி பல்வேறு இயக்கங்கள் காட்டிய எதிர்ப்பு களை ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடித்தன.

3 நாட்கள், நாளேடுகளுக்கு ஈஷாவின் ஜகத்குரு பல கோடி ரூபாயை வாரி இறைத்து தந்த விளம்பரங்களும், தொலைக் காட்சிகளுக்கு தந்த விளம்பரங் களுமே ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கிய காரணம்.

பெரும் முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் நடத்தும் அச்சு ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் வருமானத்தை முன் வைத்தே செயல்படுவதால் மக்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டனர்; மக்களைவிட விளம்பரங்களுக்கு பணத்தை வீசும் ‘ஆன்மிகக் குரு’க்களின் ‘ஆசீர்வாதங்களே’ அவர்களுக்கு முக்கியத் தேவை போலும்!

பணிந்தது அதிகாரம் - ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் மத விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்ததால் கழகம் அறிவித் திருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா என்ற பெயரில் 18.02.17 அன்று ஈரோடு, பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது.

இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு பதாகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இதுபோன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, நிகழ்வு நடைபெற உள்ள ஈரோடு பரிமளம் மகால் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் கழக நிர்வாகி களை தொடர்பு கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கழகம் அறிவித்தப் போராட்டம் இரத்து செய்யப்பட்டது.