மதுரை உச்சம்பட்டி அகதிகள் முகாமில் தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரன் குடும்பத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் ஆறுதல் கூறியதோடு, தகுந்த இழப்பீடு வழங்கவும், சம்பவத்திற்கு காரணமான வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத் தினார்.

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 6.03.2016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிட வந்த வருவாய் அதிகாரி ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, “வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவீந்திரனை தகாத வார்த்தை களால் திட்டியதால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவீந்திரன் உயிரிழந்தார். “இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்” அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவளித்தும், ரவீந்திரன் குடும்பத் தினருக்கு ஆறுதலும் கூறினார்.