சேரிகள்- அடிமைகள்- விபச்சாரம் செழித்தது

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங்களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிட மிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம்  அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியைச் செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது.  மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்க மின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்றுப் பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

srirahevandra temple 600சோழர் ஆட்சிக் காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்  கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.  திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர்  தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத் திலுள்ள  கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோயிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக் கடனை அதிகரித்தும் இராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியோ’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோயிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோயில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர்.  கோயிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள்,  மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி இராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை இராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோயிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழு கூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோயிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத் துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதி லிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்:

இராஜராஜ சோழனின் சாதனை!

இராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோயிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப் பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக் கினான்.  கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப் புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோயில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காம வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்து களால் போற்றப்படும் இராஜராஜன், தமிழ் மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச் சிலைகளைச் செய்து அவர்களுக்குத்  தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்  ஊருக்கு வெளியே தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாய மானது. இராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோயிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.  பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை, உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

(தொடரும்)