தமிழ்நாடு அரசு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிப் பாடத் திட்டத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இப்போதைய கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் - இதில் முழு ஆர்வம் காட்டி, பாடத் திட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்து ஒப்புதல் வழங்கினார். தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளரான அனந்தகிருட்டிணன் தலைமையில் 30 கல்வியாளர்கள் குழு இந்தப் பாடத் திட்டங்களை தயாரித்தது.

முதற்கட்டமான 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பாட நூல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்று நிற்கிறது.

இந்த நிலையில், புதிய பாடத் திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் ‘இறை வாழ்த்து’ நீக்கப்பட்டுள்ளது என்றும், மொழி வாழ்த்து மட்டுமே இடம் பெற்றுள்ளது என்றும் ‘இறை பக்தர்கள்’ சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இரா. சீனிவாசன் என்பவரும் அவர்களில் ஒருவர். ‘தமிழ் இந்து’ நாளேடு, இதை ஒரு பெரிய செய்தியாக்கி விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பாடத் திட்ட தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள் இதற்கு தெளிவான பதிலை முன் வைத்துள்ளனர்.

“மாணவர்களிடம் கடவுள் நம்பிக்கையைத் திட்டமிட்டு திணிக்கக் கூடாது என்ற நோக்கத்துடனே பாட நூல்கள் தயாரிக்கப்பட்டன. இறை வாழ்த்தோ, எந்த மதத்தின் கடவுளையும் நேரடியாகக் குறிக்கும் சொற்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மற்றபடி இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதே நேரம் தேவாரம், திருவாசகம் உள்பட தமிழில் சிறந்த பக்தி இலக்கியங்களின் கருத்துகள், வரலாறுகள், மொழிச் சிறப்பு, அறிவியல் கூற்றுகள் பற்றி விரிவான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது தவிர அனைத்து மதங்களையும் சார்ந்த புலவர்களின் பாடங்கள், புது கவிதைகள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பழங்காலத்திலும் இப்போதைய காலகட்டத்தில் இருக்கும் சூழல் வேறுபாடுகளை ஒப்பிட்டு விளக்கும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான் மாணவர்களை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும்” என்று பாடத் திட்டக் குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள் தெளிவாக விளக்கமளித்திருக்கிறார்கள்.

இப்போது எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகளை நாம் முன் வைக்கிறோம்:

1) மொழி வாழ்த்து இருக்கிறது; ஆனால் இறை வாழ்த்து இல்லை என்று எதிர்ப்பதில் ஏதேனும் அறிவுடைமை இருக்கிறதா? மொழி என்பது இருக்கிறது; இது அறிவியல் உண்மை. ‘இறை’ என்ற ‘கடவுள்’ என்ற ஒன்று இருக்கிறது என்று இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை!

2) மொழியையே கடவுள் தந்த ‘வரம்’ என்று நம்பிய காலம் ஒன்று இருந்தது. மொழியியலாளர்கள் மொழியின் தோற்றம், வளர்ச்சியை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து விளக்கிய பிறகு மொழியை கடவுள் உருவாக்கினார் என்ற நம்பிக்கை தகர்ந்தது.

3) மனிதர்களின் பரிணாம வளர்ச்சி உயிர்களின் தோற்றம் குறித்து அறிவியல் ஆய்வுகள் வெளி வந்துவிட்டன. இதற்கும் ‘கடவுளுக்கும்’ எந்த ஒட்டும் உறவும் இல்லை என்பதை அறிவியல் நிரூபித்து உலகம் அதை ஏற்றுக் கொண்டுவிட்டது. எனவே ‘கடவுள்’ என்பது அறிவியலால் நிரூபிக்கப்படாத ஒரு நம்பிக்கை.

4) பாட நூல்களில் ‘இறை வாழ்த்து’ கட்டாயம் இடம் பெற வேண்டும். அப்போதுதான் இறை நம்பிக்கை வளரும் என்று கூறுவதே கடவுள் சக்தியை கேள்விக்குள்ளாக்குவதுதான். உண்மையிலேயே கடவுள் சக்தி என்று ஒன்று இருந்தால் அது இயல்பாக குழந்தை பிறக்கும்போதே அந்த நம்பிக்கையுடன் பிறந்திருக்க வேண்டும். கடவுள் “தரும்” குழந்தையோடு தன்னுடைய சக்தியையும் அந்தக் குழந்தைக்கு ஊட்டியிருக்க மாட்டாரா? பசிக்கு அழும் குழந்தை, உடல் உபாதைக்கு பேசத் தெரியாத வயதிலேயே அழுது தனது உணர்வை வெளிப்படுத்தும் குழந்தை, கடவுளுக்காக பக்திக்காக அழுதிருக்கிறதா? பசியும் வலியும் இயற்கை உணர்வு. கடவுள் நம்பிக்கை என்பது செயற்கை உணர்வு என்பதற்கு இந்த ஓர் உதாரணமே போதும்.

5) கடவுள் தனது சக்தியால் தன் மீதான நம்பிக்கையை உருவாக்க மாட்டார்; காரணம், அப்படி ஒரு கடவுள் இல்லை என்று உணர்கிறவர்கள்தான் ‘கடவுள் வாழ்த்து’, ‘கடவுள் தரிசனம்’, கடவுள் தொடர்பான சடங்குகளை நடத்தி, கடவுள் நம்பிக்கையை செயற்கையாகத் திணிக்க விரும்புகிறார்கள் என்று நாம் கூறினால், அதை நம்பிக்கையாளர்களால் மறுக்க முடியுமா?

6) கடைசியாக ஒரு கேள்வி. தமிழ் பாட நூலில் தமிழில் இறை வாழ்த்து இடம் பெறவில்லை என்று கவலைப்பட்டு கண்ணீர் விடும்

‘இறை உணர்வாளர்கள்’ கோயிலுக்குள் தமிழ் வாழ்த்து மட்டுமே பாட வேண்டும்; சமஸ்கிருத அர்ச்சனைக் கூடாது என்று கேட்பார்களா?

பதில் தேவை!