உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது தொடர்பான கட்டுரை ஒன்றை ‘இந்து’ நாளேட்டில் (ஜூன் 5) வித்யா சுப்ரமணியம் என்பவர் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள்:

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் பிறந்த மாயாவதி, தனது சொந்த வலிமையால், உ.பி.யில் முதல்வர் பதவி வரை உயர்ந்தது உண்மையிலே முன் எப்போதும் நடந்திடாத ஒரு சாதனை தான். தலித் மக்களுக்கான கட்சி என்ற தளத்தை - அவர் விரிவுபடுத்தினார். இதனால் தலித் அல்லாதவர்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்தன. அதுதான் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால், மாயாவதிக்கு கூடுதலாக வாக்களிக்க வந்த தலித் அல்லாத ஓட்டர்கள் - சரித்திர காலம் தொட்டு, தலித் விரோதிகள். அதுவே மாயாவதிக்கு நெருக்கடியை உருவாக்கிவிட்டது. தலித் அல்லாதோரின் வாக்குகளையே தனது வெற்றிக்கு சார்ந்து நிற்க வேண்டியிருந்ததால் மாயாவதி மனுவாதிகளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியை கன்சிராம் தொடங்கியதே மனுவாதிகளுக்கு எதிராகத்தான். மனுவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய நிலை உருவானது. தமது தேர்தல் சின்னமான யானைக்குக்கூட மதச் சாயம் பூசினார். “இது சாதாரண யானை அல்ல; கணேசன், பிரம்மா, விஷ்ணு, மகேஷ் பகவான்களின் குறியீடு” என்று பேசத் தொடங்கினார். போர்க் குணமிக்கதாக முன் வைக்கப்பட்ட யானை குறியீடு - மதவாதக் குறியீடாக மாறிப் போனது.

பதவிக்கு வந்த மாயாவதி - தனது செல்வாக்கையும், புலமையையும் வளர்த்துக் கொண்டு இந்தியாவின் பிரதமர் பதவியில் அமருவதில் ஆர்வம் காட்டினார். அவரது இரண்டு வருட கால ஆட்சி மக்களிடையே அதிருப்தியைத்தான் பெற்றுத் தந்தது. 5 ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சி மீதான வெறுப்பைவிட இரண்டு ஆண்டு மாயாவதி ஆட்சி மீதான வெறுப்பு அதிகமாகவே இருந்தது. தனது கடந்த கால ஆட்சிக் காலங்களில் தலித் தலைவர்களுக்கு சிலை, நினைவிடங்கள் அமைத்த அவர்களின் தொண்டினை அங்கீகரித்த மாயாவதி - அதன் வழியாக தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தீண்டாமை தடுப்புச் சட்டங்களை உறுதியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். ஆனால், அடுத்து டெல்லியில் பிரதமர் பதவியை குறி வைத்து செயல் தொடங்கியபோது அவரது செயல் திட்டங்கள் மாறத் தொடங்கின. அவரது ஆலோசகர்களும் தவறான வழிகாட்டினர். மக்களுக்கு பயன் தராத திட்டங்களுக்கு அரசு பணம் விரயமாக்கப்பட்டன. உருப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை. தனக்கு வைக்கப்பட்ட சிலைகளைக்கூட - அதில் தனக்கு திருப்தி இல்லாததால் புதிய சிலைகளை வைப்பதற்கு உத்தரவிட்டார். தனது உறுதியான ஆதரவாளர்களான சமான்ய மக்களான தலித் மக்களை ஓரம் கட்டி விட்டு, பார்ப்பன முன்னேறிய சாதியினரை பதவிகளில் அமரவைத்தார்.

தலித் மக்கள் தங்கள் மீது உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை மாயாவதியிடம் எடுத்துக் கூறியும் அவர் காது கொடுக்கவில்லை. உயர்பதவிகளில் பார்ப்பனர்களை அமர வைத்த மாயாவதி 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 பார்ப்பன வேட்பாளர்களை நிறுத்தினார். மாநிலத்தில் 9 சதவீத எண்ணிக்கையுள்ள பார்ப்பனர்களுக்கு 20 இடங்களை வழங்கி, 21 சதவீதமுள்ள தலித் மக்களுக்கு 17 இடங்களை மட்டுமே ஒதுக்கினார். ‘குண்டர்களின் ராஜ்யம்’ நடத்தியதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் கட்சியிலிருந்து ஏராளமான குண்டர்கள் மாயாவதி கட்சிக்குத் தாவினர். பார்ப்பன உயர்சாதியினரும், முலாயம் கட்சி குண்டர்களும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தியதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத மாயாவதி, தன்னுடைய புகழைப் பரப்பும் முயற்சிகளிலே ஆர்வம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் தனது மாநிலத்தைவிட பிற மாநிலங்களில் பிரச்சாரம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். பிரதமரின் கனவு தகர்ந்தது மட்டுமல்ல; ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு அதிகரித்துக் கொண்டே வந்த ஓட்டு சதவீதம் - நடந்து முடிந்த தேர்தலில் 27.42 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று ‘இந்து’ ஏடு கட்டுரை கூறுகிறது.

தோல்விக்குப் பிறகு - தலித் மக்கள் மீது மீண்டும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியிருப்பதாகவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அத்துடன் உ.பி.யில் சிறப்புத் திட்டத்தின் கீழ் கன்னோஜ் மற்றும் ஜலான் மாவட்டங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீத இடங்கள் தலித் மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும் 3 சதவீத இடங்கள் திறந்த போட்டிக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

97 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ள அவரது அறிவிப்பு பார்ப்பனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.