இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கைப் படைகளின் இறுதித் தாக்குதலின்போது 20 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி ஒரு வாரத்துக்கு முன்பே ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும், அவரின் செயலர் விஜய் நம்பியாருடன் ஐ.நா. உயர் அதிகாரிகள் கலந்தாய்வு நடத்தியபோது, கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்துக்குமேல் இருக்கும் என்று அந்த அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற இரு ஐ.நா. அதிகாரிகள் இதை தி டைம்ஸ் ஏட்டிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஆனால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி மக்களையும் பார்வையிடச் சென்ற ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன், தனது பணிக்காலத்தில் நெஞ்சத்தை மிகவும் பதை பதைக்க வைத்த காட்சி என்று வருணித்தபோதிலும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பற்றி எதையும் தெரிவிக்கவே இல்லை.

ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூனின் செயலரான விஜய் நம்பியாரின் பங்கு குறித்து ஐயங்களும் வினாக்களும் எழுந்துள்ளதாக விடுதலைப் புலிகளுக்காகக் கடைசி நேர அமைதி முயற்சியில் ஈடுபட்ட சண்டே டைம்ஸ் ஏட்டின் உலகப் புகழ்பெற்ற செய்தியாளர் மேரி கால்வின் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

சரண் அடையும் நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தால் போதும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அதிபர் இராசபக்சே தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக விஜய் நம்பியார் கூறியதாகவும், சரண் அடைவதைக் கண்காணிக்க தான் அங்கு போகத் தேவையில்லை, அதிபர் இராசபக்சேவின் உறுதி மொழிகளே போதும் என்று விஜய் நம்பியார் தெரிவித்தார். விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார் ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருந்து வருகிறார் என்பதையும் மேரி கால்வின் சுட்டிக் காட்டியிருந்தார்.

20 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இரு நாட்களுக்கு முன்பு தி டைம்ஸ் ஏடு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இலங்கை அரசு இதை மறுத்துள்ளபோதிலும், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமைக் குழுக்கள் குரல் எழுப்பி வருகின்றன.