மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் - ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: (சென்ற இதழ் தொடர்ச்சி)

தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமலேயே தேர்வாணைய தேர்வுகளை எழுத அனுமதித்தார், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கச் செய்தார். தமிழ் தெரியாத பலர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பிடித்து விட்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக அவர் பதவியேற்றக் காலத்தில் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் அவருக்கு எதனால் ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியவில்லை.

இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த் தேர்வு - தேர்ச்சி - தமிழ்நாட்டில் அரசுத் தேர்வாணையத்தின் வழியாக தேர்வு எழுதும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திராவிட ஆட்சி தமிழருக்கு என்ன செய்தது என்று குற்றம் சாட்டி வந்த பல தமிழ்த் தேசிய அமைப்புகள் நியாயமாக இந்த முடிவை வரவேற்று பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் பல அமைப்புகள் ‘கள்ள மவுனம்’ சாதித்தன. ‘திராவிடம்’ என்ற சொல்லே தமிழ்நாட்டில் பல தேசிய அமைப்புகளுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. இதில் மற்றொரு கருத்தையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். தமிழ் இலக்கியச் சிறப்புக்காகவும் இன அடையாளத்துக்காகவும் நாம் தமிழைப் பாராட்டி வந்திருந்தால் இப்போது சமூக நீதிக்கு தமிழ் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதைத் தடுத்து நிறுத்த தமிழ் சமூக நீதிக் கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது.

பெரியார் இயக்கம் அரசியல் பதவிக்குப் போகாத இயக்கம். இந்த ஆட்சியை இன்றைய ஆபத்தான கட்டத்தில் உறுதியாக ஆதரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. தமிழ்நாட்டிலிருந்து தான் ஒன்றிய பா.ஜ.க.வின், பார்ப்பனியத் திணிப்பு, மாநில அடையாள அழிப்புக்கான குரல் கேட்கிறது. எனவே இந்த ஆட்சியை உறுதியாக ஆதரிக்க வேண்டியது கொள்கை ரீதியான கடமை. பெரியார், எப்படி காமராசர் ஆட்சியை தலையில் சுமந்தாரோ, அதே நிலையைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். காமராசர் ஆட்சியில் அரசியல் சட்டத்தின் ஜாதி காக்கும் பிரிவுகளை எரித்த போராட்டத்தில் கிரிமினல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பெரியார் இயக்கத் தொண்டர்கள் சிறையில் சொல்ல முடியாத அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். மோசமான உணவுகளால் ஏராளமானோர் உடல் நலிவுற்றனர். சிறைத் தண்டனையின்போதே இரு தோழர்கள் பட்டுக்கோட்டை இராசாமி, மணல் மேடு வெள்ளைச்சாமி வீரமரணமடைந்தனர்.

6 மாதம், ஒரு வருட சிறைத் தண்டனை, விடுதலையான ஒரு மாதத்துக்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட தோழர்கள் உடல் நலிவுற்று மரணத்தைத் தழுவினர். பெரியார் அத்தனையும் பொறுத்துக் கொண்டு சமுதாய நலனுக்காக காமராசரையே ஆதரித்தார். பெரியாரின் அணுகுமுறைதான் எங்களை வழி நடத்துகிறது. அதே நேரத்தில் தைப்பூச பண்டிகையை அற நிலையத் துறை கோயில்களுக்கு வெளியே அரசு விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டபோது, இது அறநிலையத் துறையின் வேலை அல்ல என்று நாங்கள் தான் முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பினோம். அதன் காரணமாக அறநிலையத் துறை அமைச்சரின் அந்த நடவடிக்கை சென்னையோடு நிறுத்தப்பட்டது. ஏனைய ஊர்களில் நடக்கவில்லை. ஒன்றிய பா.ஜ.க., தமிழ்நாட்டை குறி வைத்து எதைச் செய்தாவது பெரியார் மண்ணை காவிமயமாக்க பார்ப்பன மயமாக்க துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப் போகிறோம்? என்ன திட்டங்களை வகுக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன் எழுந்து நிற்கும் கேள்வி.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் தமிழ்நாட்டில் களமிறங்கியிருக் கிறார்கள். இந்து வர்ணாஸ்ரமம் கட்டமைத்த ஜாதியை தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டு ஒவ்வொரு ஜாதிக் குழுவுக்கும் வலைவீசி தங்கள் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். சில ஜாதித் தலைவர்களுக்குப் பணத்தை அள்ளி வீசுகிறார்கள். இது ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் கட்சிகளைப் பிளக்கிறார்கள். அ.இ.அ.தி.மு.க.வைப் பல கூறுகளாக உடைத்து விட்டார்கள். அவர்கள் செய்த ஊழல்களை ஆட்சியில் இருந்த காலத்தில் செய்த முறைகேடுகளைக் காட்டி மிரட்டுகிறார்கள். பா.ஜ.க.வை எதிர்த்தால் மாட்டிக் கொள்வோம் என்று அஞ்சி நடுங்கி அ.தி.மு.க.வின் அத்தனைப் பிரிவுகளும் வாய் மூடிக் கொண்டு தி.மு.க.வை மட்டும் குறி வைத்து தாக்குகின்றன. அல்லது தங்கள் அணிகளுக்குள் மாறி மாறி சவால் விட்டுக் கொண்டிருக் கிறார்கள். பா.ஜ.க.வினர் தயவைப் பெறுவதற்கு போட்டிப் போடுகிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் சமூக விரோத சக்திகளைத் தேடிப் பிடித்து பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். கிரிமினல் குற்றச் சாட்டுகளின் கீழ் பல பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவது அன்றாட செய்தியாகிவிட்டது.

‘இந்துப் பண்பாடு’, ‘இந்து மத பக்தி’, ‘மத ஒழுக்கம்’ என்ற நற்பண்புகளை வளர்ப்பதற் காகவே இந்துக்கள் ஆட்சி வரவேண்டும் என்று கூறுகிறோம் என்று ஒரு பா.ஜ.க.வினரால்கூட துணிவோடு பொதுவெளியில் பேச முடியாது. இந்து மதம் ஒரு மதமல்ல; அது ஒரு வாழ்க்கை நெறி என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது என்று பேசி வந்தவர்கள் இப்போது வாயை மூடிக் கொண்டார்கள்.

‘சனாதன தர்மம் - இந்து மதப் பண்பாடு’ என்ற அடிப்படையில் தான் கட்சி நடத்து கிறீர்களா என்று எந்த ஒரு வைதீக ஆச்சார சீலராவது பா.ஜ.க.வை கேட்டிருக்கிறார்களா? இல்லை; மாறாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்று வெறி பிடித்து நிற்கிறார்கள். இத்தகைய உணர்வு, தமிழர்களுக்கு இருக்கிறதா? ஏன், தமிழ்ப் பண்பாடு பேசும், வேத எதிர்ப்பு பேசும் தமிழ் தேசிய அமைப்புகளிடம் இருக்கிறதா? நான் அனைத்து அமைப்புகளையும் கூறவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் - தமிழ் நாட்டின் தனித்துவம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதையைக் காப்பாற்ற பரந்துபட்ட வரலாற்று அணி ஒன்றை உருவாக்குவது வரலாற்றுக் கடமையாகிறது. ஆர்.எஸ்.எஸ். பாசிச சிந்தனை - அதன் அமைப்புக்கு மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதற்கும் வெளியே அது பரவி நிற்கிறது. பல்வேறு உருமாற்றங் களோடு அந்த நச்சு சிந்தனை, சமூகத்தில் விதைக்கப்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாம் எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம் என்ற திட்டமிடுதல்களும் அதற்கான செயல் உத்திகளும் தேவைப்படுகிறது!

தமிழ்நாட்டு மக்களில் கடவுள் மத நம்பிக்கைக் கொண்டவர்கள் தான் அதிகம். ஆனால் வடமாநிலத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இதில் துல்லியமான ஒரு வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டு மக்கள் கடவுள் மத பக்தியை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. அதுவே தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றி விடும் என்று வடநாட்டுக்காரர்களைப் போல் கண்மூடித்தனமாக நம்பாதவர்கள்.

தங்களுக்காக கல்வி, சமூக நீதி, வாழ்வுரிமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கடவுள் மதத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் அல்ல; இது பெரியார் இயக்கம் இந்த மண்ணில் உருவாக்கிய மிக முக்கியமான மாற்றம்.

இந்த நிலையில் ஒன்றிய ஆட்சியின் மோசமான பொருளாதாரக் கொள்கை - அதனால் மக்கள் படும் துயரம், நீட் திணிப்பு, உயர்கல்வி உரிமையில் தலையீடு போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமைத் தந்து மக்களிடம் அதைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒற்றை இந்தியாவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வது வேதகால ஆட்சியை பார்ப்பனிய சர்வாதிகாரத்தை உருவாக்கி விடும் என்ற ஆபத்துகளையும் இழந்து வரும் மாநில உரிமைகளையும், சமஸ்கிருத, இந்தித் திணிப்புகளையும் எடுத்து விளக்கி, தன்னாட்சி - சுயாட்சிக் கொள்கையை மாற்றாக முன் வைத்து விளக்க வேண்டும்.

இந்து வெகு மக்கள் தான் ஒன்றிய ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படுகிறார்கள். இது எப்படி இந்து நலன் காக்கும் ஆட்சியாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் வரி உயர்வு, சிறு தொழில்கள் நசிவு, வேலை இல்லாத திண்டாட்டம், கொரனா காலத்தில் ஒன்றிய ஆட்சியின் மோசமான நிர்வாகம், இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான ‘இந்து’க்கள் தானே! என்று அவர்கள் பேசும் மொழியிலேயே பதிலடி தர வேண்டும்.

இந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் இந்துக்களுக்கு உதவிக் கரம் நீட்டியது யார் என்பதை எடுத்து விளக்க வேண்டும்.

வேத மதம் பெண்களை மதச்சடங்குகளில் ஒதுக்கி வைத்து அவமதிப்பதை பெண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பார்ப்பனர் அனைவரும் கண்மூடித்தனமாக பா.ஜ.க.வை ஆதரிப்பதையும் அனைத்து ஜாதி இந்துக்கள் அர்ச்சகராவதற்கு பார்ப்பனர்கள் தடையாக இருப்பதையும் எடுத்து விளக்க வேண்டும்.

இது குறித்து விரிவாக நாம் சிந்திக்க வேண்டிய அவசியத்தை முதலில் உணர வேண்டும் என்றார், விடுதலை இராசேந்திரன்.

(நிறைவு)