தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள்.

முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார்.

kolathoor mani and dvk

தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி - நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக் கல்வி மட்டுமே கல்வி ஆகி விட்டது. பள்ளி கல்வியைக் கற்றுத் தருகிறதா என்றால், அது கற்காமல் பார்த்துக் கொள்கிறது. வகுப்பறைக்கு வெளியே சமூகக் கல்வியை நாம் தேட வேண்டும். பள்ளிக்குள் சுருங்கிய கல்வி, இப்போது போட்டித் தேர்வுக்குள் மேலும் சுருக்கப்பட்டு விட்டது. வங்கி களில் பணத்தைப் போட்டு பிறகு தேவைப்படும் போது பணத்தை எடுப்பதுபோல் மூளையில் திணித்தல் வழியாக டெப்பாசிட் செய்யப்பட்ட கல்வியை பிறகு அதை வெளியில் எடுத்துப் பயன் படுத்தப்படும். ‘வங்கிக் கல்வி முறை’தான் இப்போது நடக்கிறது என்கிறார் ஆய்வாளர் பவுலிட் பிராய்ட். இந்த ‘டெபாசிட்’ கல்வியை விடுதலை கல்வியாக மாற்ற வேண்டும். அதுதான் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் கல்வியாக மாறும். ஆசிரியர் என்பவர் மாணவர் களுக்கு பாடங்களைத் திணிப்பவர் அல்ல; அவர் ஒரு அரசியல் சமூக செயற்பாட்டாளராக மாணவர் களிடம் தன்னம்பிக்கையை விதைப்பவராக இருத்தல் வேண்டும் என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இந்தப் பின்னணியில் ‘நீட்’ தேர்வு, பல்கலைக்கழக மான்ய குழுவுக்கு மாற்றாக நடுவண் அரசு கொண்டுவர இருக்கும் சட்டம், இந்திய மருத்துவக் குழுவுக்கு மாற்றாக நடுவண் அரசு கொண்டு வர இருக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ ஆகியவற்றின் வழியாக பறிக்கப்படும் மாநில உரிமைகள் மற்றும் ஒடுக்கப் பட்டோர் கல்வி பெறுவதற்கான தடைகளை விளக்கினார்.

கல்வியை அடிப்படை உரிமையிலிருந்து பிரிக்க முடியாது என்று முதலில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அடுத்தடுத்த தீர்ப்புகளில் 14 வயதுக்கு மேல் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு அரசிடம் நிதி கிடையாது என்றும் கல்வித் துறை சார்ந்த படிப்பு என்பதைவிட தொழில் சார்ந்தது என்பதால் அரசு தவிர தனியாரும் கல்வி நிறுவனங்களைத் தொடங்க லாம் என்றும் தீர்ப்பளித்ததை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி சந்திக்கும் நெருக்கடிகளை எடுத்துக் கூறினார். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

இடைவேளை உணவுக்குப் பிறகு ‘தோழமை’ அமைப்பின் இயக்குனர் தேவா - மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினார். புகார் தருவதற்கான விண்ணப்பங்களை எழுதப் பின்பற்ற வேண்டிய முறைகள் - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி; அதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்யும் முறை; எந்தெந்தப் பிரச்சினைகளில் தகவல்களைக் கேட்க முடியும்? மறுக்கும்போது மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு தகவல் உரிமைச் சட்டத்தைத்தான் பயன்படுத்திய தனது அனுபவங்களையும் அதற்குக் கிடைத்த வெற்றி களையும் விளக்கினார்.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு விடுதலை இராசேந்திரன் தனியார் துறையில் இடஒதுக் கீட்டின் அவசியம் குறித்துப் பேசினார். இந்தக் கோரிக்கைக்காக அன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ச்சியாக நடத்திய ‘சம்பூகன் சமூக நீதிப் பயணம்’, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது தனியார் துறையில் இடஒதுக்கீட் டுக்காக சட்டம் கொண்டு வருவதற்கு செய்த முயற்சிகள்; பெரும் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்ட வரலாறு களை சுட்டிக் காட்டினார். மண்டல் பரிந்துரை தனியார் துறை இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், 2000ஆம் ஆண்டு குடியரசு தின உரையில் தனியார் துறை இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார். 2002ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திக்விஜய்சிங் முதல்வராக இருந்தபோது 250 தலித் அறிஞர்கள் மற்றும் களப்பணியாளர்களை ஒன்று கூட்டி, விவாதித்து வெளியிட்ட ‘போபால்’ பிரகடனம், தனியார் துறையில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு; தலித் பிரிவினரை தொழில் முனைவ ராக்குதலுக்கான திட்டங்களை முன் வைத்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய மாநில உறவுகள் தொடர்பாக அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து நீதிபதி வெங்கடாசலய்யா குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் துறைகளிலும் நீதித் துறையிலும் இடஒதுக்கீடு செய்யும் பரிந்துரையை வழங்கியது. இதைச் சுட்டிக்காட்டிய விடுதலை இராசேந்திரன், அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் கறுப்பர்கள் ஹிஸ்பெனிக்ஸ் (தென் அமெரிக்க நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்), அல்கசா (பழங்குடியினர்) மற்றும் அமெரிக்க இந்தியர்கள் ஆகிய மைனாரிட்டிப் பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் சட்டபூர்வமாக ‘உறுதி யாக்கும் செயல்பாடு’ (ஞடிளவைiஎந ஹககசைஅயவiடிn) ஒதுக்கி வைத்தலுக்கு ஈடுகட்டுதல் (ஊடிஅயீரளடடிசல னுளைஉசiஅiயேவiடிn) என்ற பெயரில் செயல்படுத்தப்படுவதையும் அதைக் கண்காணிப்பதற்கு சம வேலை வாய்ப்பு வாரியம் (நுளூரயட நுஅயீடடிலஅநவே டீயீயீடிசவரnவைல ஊடிசயீடிசயவiடிn) செயல் படுவதையும் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவில் தனியார் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரி களாக பார்ப்பன பனியாக்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதை சந்தோஷ் கோயல் என்ற ஆய்வாளர் 2082 தலைமை அதிகாரிகளை பேட்டிக் கண்டு ‘எக்னாமிக் அண்ட் பொலிட் டிக்கல் வீக்லி’ பத்திரிகையில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்துள்ளதை யும் ‘சூத்திரர்கள்’ உயர் அதிகாரிகளாக இருப்பது 4.2 சதவீதம் மட்டுமே என்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழகத்தின் மிகப் பெரும் தொழில் நிறுவனமான ‘டி.வி.எஸ்.’ குழுமம் பார்ப்பன நிறுவனமாகவே செயல்படுவதையும் சுட்டிக் காட்டினார். இரவு 7.30 மணியளவில் முதல் நாள் பயிற்சிகள் முடிந்தன.

இரண்டாம் நாள் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, பாலின சமத்துவம் குறித்து விளக்கினார். விளையாட்டு, உரையாடல், விவாதங்களாக அவர் நடத்திய பயிற்சி, மாணவர்களை மிகவும் ஈர்த்தது.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு 11.30 மணியளவில் மருத்துவர் எழிலன், ‘மூடநம்பிக்கை’ குறித்து ஒளிப் படக் காட்சிகளுடன் வகுப்பு எடுத்தார். சோதிடம், வாஸ்து, பேய், பில்லி சூன்யம், ஜாதி, கடவுள் குறித்து அவர் தந்த விளக்கங்கள் மாணவர்களிடம் மிகுந்த தாக்கத்தை உருவாக்கியது. மாணவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப் பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இடஒதுக்கீடு’ வரலாறு குறித்து வகுப்பு எடுத்தார். நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ‘சுதந்திர’ இந்தியாவின் நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர் களால் முறியடிக்கப்பட்ட வரலாறு; பெரியார் போராட்டத்தால் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத்திருத்தம்; அந்த சட்டத் திருத்தம் வழியாக பட்டியல் இனப் பிரிவினருக்குக் கிடைத்த கல்வியில் இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைவதற்குக் காரணமாக இருந்த அம்பேத்கர் முயற்சியில் அரசியல் சட்டத்தில் இடம் பெற்ற 340ஆவது பிரிவு ஆகிய வரலாற்றையும் இப்போது ‘நீட்’ தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்பு; இதில் உச்சநீதிமன்றம் நடத்திய மோசடி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை விரிவாக விளக்கிப் பேசினார்.

பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பயிற்சியால் கிடைத்த பயன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இரண்டு நாள் பயிற்சிக்கும் இடம் வழங்கி, உணவு ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்று செயல்பட்ட மக்கள் மன்றத்துக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி நன்றி கூறினார். இரண்டு நாள் பயிற்சி களையும் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி. சிவக்குமார் ஒருங்கிணைத்தார். காஞ்சி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இரவி பாரதி, தினேஷ் மற்றும் தோழர்கள் இரண்டாம் நாள் பயிற்சியில் முழுதும் பங்கேற்றனர்.