பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் - பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார்.

kolathoor mani 228இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் (18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான கொள்கை என்று பாருங்கள்.

தமிழ்நாட்டில் 2016 - 2017இல் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கணக்கெடுப்பின்படி 46.9% உயர்கல்விக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தற்போது கணக்கெடுத்தால் 49% ஆக கூட இருக்கலாம். நம்மை 2035 இல் 50%ற்கு கொண்டு வருவதாக கூறுகிறார்கள். நாங்கள் இப்போதே கிட்டத்தட்ட 50% இருக்கிறோம். நீங்கள் உங்கள் வடநாட்டிற்கு வேண்டுமானால் இந்தக் கல்விக் கொள்கையை வைத்துக் கொள்ளுங்கள்; எங்களுக்கு எதற்கு இந்தக் கல்விக் கொள்கை? ஆனாலும் நமக்கும் இந்த கல்விக் கொள்கை உண்டு என்கிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது பெரு முதலாளிகளுக்கான கல்விக் கொள்கை. மாநில உரிமைப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனது; இப்போது மத்தியப் பட்டியலுக்கே முழுமையாகப் போக இருக்கிறது. அரசுக் கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையாகவும் உள்ளது. மொத்தத்தில் அதிகாரத்தை மத்தியில் குவிப்பது; வணிக மயமாக்குவது, காவி மயமாக்குவதாகவும் உள்ளது. Centralisation, Commercialisation, Communalisation என்ற அடிப்படையிலேயே இந்த தேசியக் கல்விக் கொள்கை உள்ளது.

பெரும் முதலாளிகள் இங்கே தொழிலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால் எல்லாரும் படித்து விடுகிறார்கள். அதனால் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதைத்தான் இந்தக் கொள்கை பூர்த்தி செய்யப் போகிறது. 3, 5, 8, 10, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வை மாணவர்கள் இடைநிற்றலை அதிகமாக்கி கூலிக்கு ஆட்களை அதிகமாக்கிக் கொடுக்கப் போகிறார்கள். 3ஆவது மாணவர்களுக்கே மண்பாண்டம் செய்தல், தச்சு வேலை சொல்லித் தரப் போகிறார்கள்.

பல பள்ளிக்கூடங்களை மூடி, தூரமான இடத்துப் பள்ளியோடு இணைத்தால் பெண் குழந்தைகள் எப்படி படிக்கப் போவார்கள்? அதற்கு தீர்வாக Group walking போகச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல பாதுகாவலரையும் அனுப்புவதாக குறிப்பிடப்படுகிறது. இவையெல்லாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகள். இதனால் பெண்கள் கல்வி மறுக்கப்படும். கிராமப்புறத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது. தற்போதுதான் முதல் தலைமுறையாக, இரண்டாம் தலைமுறையாக கல்வி பெற்று வருகிறோம். அதை மறுப்பதற்கான கல்விக் கொள்கையைத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரியில், திறந்த போட்டிக்கு OC-200, BC-199.75, SC-199.50 மதிப்பெண்கள் தான் உள்ளது. என்ன குறைந்து போய் விட்டார்கள்? இது தகுதி இல்லையா? ஆனால் உயர்ஜாதி ஏழைகள் 10% ஒதுக்கீட்டுக்கு 28% மதிப்பெண் வாங்கியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் எதிர்த்தாக வேண்டும், தமிழ்நாட்டிற்காவது விலக்களிக்க வேண்டும் என்று எதிர்த்தாக வேண்டும் என்று தான் அய்ந்தாவது தீர்மானமாக 'ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே - பெரும்பான்மையாக இருக்கும் மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கல்வி அவர்களுக்கு தடையின்றி கிடைக்கவும், உயர்கல்வி நோக்கி செல்ல இலகுவான சூழலை உருவாக்கித் தரும் நோக்கத்தோடு சமூகநீதிக்கான கல்விக் கொள்கையை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து, வெகு மக்களுக்கு கல்வி சென்றடைந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு தடைகளை எழுப்பும் இந்த புதிய, தேசியக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த நடுவண் அரசு துடிக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் வழங்கப்பட்ட காலத்திலிருந்தே, எல்லோருக்குமான கல்வி, சமமான கல்வி என்று முயற்சித்தோமே தவிர, அதைவிட முக்கியமான தரமான கல்வியைப் பற்றி கவலைப் படவே இல்லை' என்று அறிக்கையின் நோக்க உரை கவலைப்படுகிறது. வெளிப்படையாகவே, பார்ப்பனிய மனுசாஸ்திரத்தை வெளிப்படுத்தி யிருக்கிறது. 14 வயதுள்ள அனைவருக்குமான கல்வி உரிமைச் சட்டம் மனுசாஸ்திரத்திற்கு எதிராக வந்துவிட்ட நிலையில் அதன் நோக்கத்தை சிதைக்க புதிய கல்விக் கொள்கை பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதன் வழியாக வடிகட்டுதல், உயர்கல்விக்கான வழிகளை தடுத்து நிறுத்துதல், வேதப் பெருமைகளை கல்வித் திட்டத்தில் இணைத்தல் போன்ற பார்ப்பன நச்சுக் கருத்துக்களை செயல்படுத்த வலியுறுத்துகிறது. மீண்டும் வேதகாலத்துக்கு இழுத்துச் செல்லும் இந்த கல்விக் கொள்கையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வழிவகுத்த காமராசரின் நினைவு நாளான அக்டோபர் 2ஆம் நாள் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விலக்கி, புதியக் கல்விக் கொள்கையின் நகல்களை கிழித்தெறியும் ஆர்ப்பாட்டத்தை இளைஞர்கள், மாணவர்களைத் திரட்டி நடத்துவது என்பதையும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்று நாம் கேட்கிறோம். நமது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 7.11.2016 அன்று ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இப்படி சொல்வதை விட ‘ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நேரத்தில்’ ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த திருத்தம் என்னவென்றால்? யார் யாரெல்லாம் TNPSCஇல் விண்ணப்பிக்கலாம் என்பதே அந்த திருத்தம். அதில் ‘இந்திய குடிமக்கள், அது யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். நேபாளம் அல்லது பூடான் குடிமக்களும் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் நிரந்தரமாகக் குடியமரும் நோக்கத்துடன் திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்’.

இந்தியாவில், ‘பாகிஸ்தான், இலங்கை, பர்மா, வியட்நாம், கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா, உகாண்டா, அய்க்கிய குடியரசு, ஜாம்பியா, மாளவியா, சையர், எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றிலிருந்து இந்தியாவில் நிரந்தரமாகக் குடியமரும் நோக்குடன் வந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களெல்லாம் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். போதுமான தமிழ் அறிவு இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வு பெற்றால், பணியில் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும்.

இப்படி வரும் வடநாட்டவர்கள், வி.ஏ.ஓ, தாசில்தார்களாக நியமிக்கப்பட்டால் என்ன ஆகும்? தற்போது மே மாதத்தில் கூட தமிழ்நாடு மின் வாரியத்தில் 39 பிற மாநிலத்தவர்களைப் உதவிப் பொறியாளர்களாக நியமித்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டு அரசிடம் இந்த திருத்தங்களை நீக்கம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

குஜராத்தில் 2017இல் பாரத் பெட்ரோலியத்தில் 116 இடங்களில் வெறும் 16 இடங்கள் தான் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் மாணவர்கள் வழக்கு தொடுத்தார்கள் அந்த வழக்கில் குஜராத் அரசும் தன்னை இணைத்துக் கொண்டது. 1994லேயே 85 விழுக்காடு அரசு வேலைகளை குஜராத் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது அதன்படி 99 வேலைகள் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் 16 இடங்கள் மட்டும்தான் கொடுக்கப் பட்டுள்ளது தவறு என்று குஜராத் அரசு தானாக முன்வந்து மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். குஜராத்தே இதை செய்திருக்கிறது. எனவே நீங்களும் இந்த விதிகளை மாற்றுவதோடு மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இதை நிறைவேற்றச் செய்வது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கல்வி பெற்று வந்து தங்களை இறுதி நாட்களில் தங்களை நல்லவண்ணம் வைத்திருப்பார்கள் என்று ஏங்கி நிற்கும் பெற்றோர்கள், தங்களுடைய பெரும் கனவாக அரசு வேலைக்குச் செல்லலாம் என்றிருக்கிற மாணவர்கள் ஆகிய அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய போராட்டமாக இருக்கப் போகிறது. அப்படிப்பட்ட போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு வலுவான போராட்டமாக ஆக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து விடை பெறுகிறேன்.

- கொளத்தூர் மணி