பா.ஜ.க. - சங் பரிவாரங்கள் சில மாயைகளை பொது மக்கள் சிந்தனையில் திணித்து வைத்துள்ளனர். அந்த மாயைகளைத் தகர்த்து மக்களிடம் உண்மையான விளக்கங்களை நாம் புரிய வைக்க வேண்டும்.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அப்படியானால் நமது நாடு இந்துக்கள் நாடு தானே என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. இது நேர்மையற்ற வாதம்.

ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்தியாவில் இருப்பது அத்தகைய ஜனநாயகத் தேர்தல் முறை. இது தேர்தலுக்கான ஒரு வழிமுறையே தவிர, ஜனநாயகத்துக்கான அடையாளம் அல்ல.

ஜனநாயகம் என்பது நாட்டில் எது பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதற்கான ஆட்சி நடத்த வேண்டும் என்பது அல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றபோது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான் பெரும்பான்மை. எனவே எல்லோரையும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக வைத்திருப்பதே சுதந்திர இந்தியாவின் இலட்சியம் என்று கூற முடியுமா? மருத்துவ வசதியற்றவர்களும், வேலை இல்லாதவர்களுமே அப்போது பெரும்பான்மை. அதற்காக மருத்துவ வசதிகள் உருவாகி விடாமல் பெரும்பான்மையைக் காப்பாற்ற வேண்டும்; வேலை வாய்ப்பு இல்லாதவர்களே பெரும்பான்மையாக இருப்பதால் வேலை வாய்ப்புகளை உருவாக்கி பெரும்பான்மை மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என்று கூற முடியுமா? ஜனநாயகத்துக்கு பெரும்பான்மைவாதத்தை கொள்கையாக்குகிறவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்!

ஜனநாயகத்தின் அடிப்படை சமத்துவம்; ஒவ்வொரு மத, இன, மொழிப் பிரிவினருக்கான உரிமைகளைப் பாதுகாப்பதே ஜனநாயகம். ஆனால் மைனாரிட்டி பார்ப்பனர்கள் இதே இந்து சமூகத்தில் ஒரு பெரும் பிரிவினரை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’, தீண்டப்படாதவர் என்று கூறி, அதை மதத்தின் பெயரால் ஏற்றுத் தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும்போது பார்ப்பனியம் என்ற சிறுபான்மைக் கூட்டத்தின் பாசிச சிந்தனை பெரும்பான்மை மக்களை அடிமைப் படுத்துகிறது. இங்கே பாதுகாக்கப்பட வேண்டிய சிறுபான்மைப் பிரிவில் பார்ப்பனர்கள் வரவில்லை. மாறாக எதிர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது உண்மையில் சிறுபான்மை கொடுங்கோன்மை!

ஒரு ஜனநாயகம் அதன் மக்களுக்கான சமத்துவப் பார்வையில் (equality), பெரும்பான்மை (majority), சிறுபான்மை (minority)க்கான பெரும்பான்மை கொள்கையை உருவாக்க வேண்டுமே தவிர, மதத்தின் அடிப்படையில் அல்ல!

இந்த சிறுபான்மை பார்ப்பனியம் தனது வர்ணாஸ்ரமத்தை, ஜாதியை, பெரும்பான்மை மக்களுக்கான கல்வி உரிமை மறுப்பை, கடவுள் மீதான தனது அதிகாரத்தை, பெரும்பான்மை மக்கள் மீது திணித்துக் கொண்டு மக்களை ஏமாற்ற ‘பெரும்பான்மை இந்துக்கள்’ என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறது.

அரசியலையே எடுத்துக் கொள்வோம்; பா.ஜ.க. தவிர, இந்தியாவிலுள்ள பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள் யார்? அவர்கள் மொழியில் கூற வேண்டுமானால் ‘இந்துக்கள்தான்’ பெரும்பான்மை. ‘அரசியல் கட்சி இந்துக்களின் கொள்கை’ இந்தியாவை இந்து நாடாக மாற்றிவிடக் கூடாது. இது மதச்சார்பற்ற நாடு என்பதுதான். அதற்காக பா.ஜ.க.வையும் எதிர்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதி என்று மார்தட்ட பா.ஜ.கவுக்கோ, பார்ப்பனர்களுக்கோ எந்த உரிமையோ, தகுதியோ எப்படி இருக்க முடியும்?

சமூகத்தின் அதிகாரத்தை அவர்களே அபகரிப்பதை ஒரு போதும் வெகுமக்கள் ஏற்க மாட்டார்கள். இதுதான் ‘பார்ப்பன பாசிசம்’!