நியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது.

பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், 'டிவி' ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, 'நியூஸ் 18 தமிழ்நாடு' முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். டில்லியில் நடந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கினார்.

விருதுக்காக 650 பேரின் ஊடகப் பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் முதல் முதலாக தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றுக்காக மு. குணசேகரன் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு கடும் பரிசீலனைக்குப் பிறகு விருது வழங்கி இருக்கிறது. அரசியல், பொருளாதாரம் போன்ற அழுத்தங்களையும் மீறி சுதந்திரமாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

News18 Guanasekar 600பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து மு. குணசேகரன் விடுத்துள்ள செய்தி:

“பாராட்டு, வாழ்த்துகள் வழியே நண்பர்கள் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். ராம்நாத் கோயங்கா விருது பெற்றது பெருமிதம் தந்த தருணம்.

இந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.

12 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, தமிழ் அச்சு, ஊடகத்துறை சார்பில் முதல்முறையாக நான் பெற்றிருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் திறமையான எனது இளைய தலைமுறை இன்னும் அதிகம் பெற்று சாதிக்கும்; தமிழ்க்கொடியை டெல்லியில் உயரப் பறக்கவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகம். தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் காத்திரமான பங்களிப்பை, அற்புதமான களப்பணியை இதழியலில் மேற்கொள்ளும் பலர் வெளிச்சம் பெறாமலே போய்விடுகின்றனர். அந்த நிலை நிச்சயம் மாறும்; மாற வேண்டும்!

எனது கரங்கள் ஏந்தி இருக்கும் இந்த விருதை தங்கள் கரங்களுக்கானது என நினைத்து பெருமிதம் கொள்ளும் நண்பர்களே எனது பெரும்பேறு! ஆம், எல்லா உயர்வும் வெற்றிகளும் சமூகம் தருபவை; நம் சமூகத்திற்கானவை.

நன்றி நண்பர்களே!” - என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.