“வைக்கம் போராட்ட வெற்றி விழா நடக்கிறது. பெரியார் 23.11.1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார். 27ஆம் தேதி வெற்றி விழா நடைபெறுகிறது. அதில் பெரியார் தான் தலைமை தாங்குகிறார். அந்த மாநாட்டிற்கு வெளியில் இருந்து வந்து கலந்து கொண்டது பெரியார் ஒருவர்தான். வைக்கத்திற்காக இரண்டு முறை சிறை சென்றவரும் பெரியார் தான். கிரிமினல் வழக்கில் கைதானவரும் பெரியார் தான். மற்றவர்களெல்லாம் சிவில் வழக்கில் தான் கைதானார்கள். பெரியாரை விலங்கு போட்டு வைத்திருந்தார்கள். இதை பற்றி பழ.அதியமான் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நடந்த பரப்புரை தான் மதமாற்றத்தில் கொண்டு வந்து விட்டது பெரியாரை.

இஸ்லாமிற்கு மாறலாம் என்று இரண்டு நிகழ்வுகளில் கூறுகிறார். ஒன்று கண்ணனூரில் நடைபெற்ற கூட்டம். மற்றொரு மாநாட்டிலும் குறிப்பிடுகிறார். அந்த செய்திகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. கண்ணனூருக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்களையும் அழைக்கிறார்கள். சீக்கியர், பௌத்த பிக்கு, இஸ்லாமியர், கிருத்துவ பாதிரியார் என அனைவரும் உரையாற்றுகிறார்கள். இவர்கள் உரையாற்றிய பின் ‘எந்த மதத்திற்கு செல்லலாம் என்று பெரியார் பேசுகிறார்’. அப்போது இஸ்லாமை பரிந்துரைக் கிறார். அன்றே 400 பேர் இஸ்லாமிற்கு மதம் மாறியதாக பின்னாட்களில் எழுதுகிறார். “எங்கள் ஊரில் குறிப்பிட்ட சிலர் தான் மதம் மாறுவார்கள். ஆனால் இங்கு தான் ஒரு சமூகமே (ஜாதியே) மதம் மாறியிருக்கிறது. மகிழ்ச்சி” என்று பேசுவார். அதே பேச்சில், “பாலக்காடு, கல்பாத்தி என்ற ஊரில் ஒரு சிக்கல் நிலவுகிறது. அரசு உத்தரவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்று வைத்திருந்தார்கள். அப்போது அந்த பகுதி சென்னை மாகாணத்துடன் இருந்தது. அதில், தாழ்த்தப்பட்டவராக இருந்து, இஸ்லாமியராக மதம் மாறி ஒருவர் நடந்து போகிறார். எந்த சிக்கலும் ஏற்படவில்லை. வைக்கத்தில் யாரை நடக்கவிட வில்லை? இஸ்லாமியரையா? கிருத்துவர்களையா? இந்துக்களைத் தான் நடக்கவிடவில்லை” என்று இந்து மதக் கொடுமைகளை விளக்கி பேசுகிறார். அந்த மதம் நமக்கு வேண்டாம் என்கிறார்.

“இந்து மதத்தை ஒழிப்பது என்பது, இந்து மதத்தின் அதிகாரங்களை, சாஸ்திரங்களை நிராகரிப்பது தான்” என்று அம்பேத்கர் கூறினார். வேலூர் கூட்டத்தில், “அம்பேத்கர் பேச முடியாத (கருத்துகளடங்கிய) அந்த நூலை வெளியிட்டார். அந்த கமிட்டியில் நானும் சிறிது நாள் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். இங்கிருக்கும் பார்ப்பனர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அவன் நாஸ்திகன் அவனை ஏன் அழைக்கிறீர்கள் என்று கடிதம் எழுதினார்கள். அதன் பின் என்னை அழைப்பதில்லை. நானும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அம்பேத்கரை அழைத்தார்கள். ஆனால் அங்கு அந்த உரையை பேச விடவில்லை. அதை புத்தகமாக வெளியிட்டார். அதை பார்த்து நான் இதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாமா என்று கேட்டேன், மகிழ்ச்சியாக வெளியிடுங்கள் என்று கூறினார்” என்று அந்த உரையில் குறிப்பிடுவார். அந்த புத்தகத்தை தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் பெரியாருக்கு இருந்தது. “ஜாதியை ஒழிக்கும் வழி” என்று மொழி பெயர்த்து வெளியிட்டார். அது தற்போது பல பதிப்புகளை கண்டு விட்டது. என்னைப் பொருத்தவரை இந்த நூலைத் தான் சிறந்த நூலாக கருதுகிறேன். பல ஆய்வுகளை செய்து அம்பேத்கர் அதை எழுதியிருக்கிறார். “காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதாருக்கு செய்தது என்ன? " என்பதைப் பற்றி எழுதியிருப்பார். பிற்காலத்தில் விரிவாக எழுதியிருப்பார் இதில் சுருக்கமாக குறிப்பிட் டிருப்பார். “நெய் ஊற்றி சாப்பிட்டதற்கு, ஊர்வலம் சென்றதற்கு” இப்படி என்னென்ன சிக்கல்கள் தலித் மக்களுக்கு நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் பற்றி யெல்லாம் அதில் எழுதியிருப்பார். இவற்றை யெல்லாம் குறிப்பிட்டு “நான் இந்துவாக உரையாற்றுகிற கடைசி உரை இது தான்” என்றும் எழுதியிருப்பார். எனவே இந்து மத நிராகரிப்பு என்பது, அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது அல்லது அதை சரியாகப் புரிந்து கொள்வது தான்.

1931இல் பல நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று வட்டமேசை மாநாடு, அதற்குப் பிறகு உப்பு சத்தியா கிரகம் என்று காந்தி நடத்துகிறார், கைது செய் கிறார்கள். அடுத்து என்ன? விடுதலை செய்யக் கூறி போராட்டம் தான். உண்மையைச் சொன்னால் காந்தி - இர்வின் ஒப்பந்தம் என்பது சரணாகதி ஒப்பந்தம் தான். சென்னையில் நடராசன்-தாளமுத்து மாளிகை உள்ள இடத்தில் இருக்கும் சாலைக்கு காந்தி இர்வின் சாலை என்று பெயரே வைத்துள்ளார்கள். ஆங்கிலேயர்கள் ஒரு சில நிபந்தனையுடன் காந்தியை விடுதலை செய்கிறார்கள். அதில் ஒன்று என்னவென்றால் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதன் பின் தான் வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொள்கிறார்.

winston churchillஅப்போது சர்ச்சில்க்கு அதிர்ச்சி ஒன்று ஏற்படுகிறது. அவரையெல்லாம் இந்திய விடுதலைக்கு எதிராக இருந்தார் என்று கூறுவார்கள். ஆனால் அவர் உண்மையை புரிந்தவராக இருந்தார். மார்ச் 5 இந்த ஒப்பந்தம் நடந்தவுடன், 18ஆம் தேதி இலண்டனில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. ‘ஆல்பர்ட் ஹால்’ என்ற புகழ்பெற்ற அரங்கில் அந்த கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் வின்ஸ்டன்ட் சர்ச்சில் உரையாற்றுகிறார். ‘Our Duty in India’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அப்போது இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் குடியேற்ற அனுமதி அளிப்பதாக இங்கிலாந்து முடிவு செய்திருக்கிறது. இந்தியாவும், முதலில் விடுதலை கேட்டு தீர்மானம் இயற்று கிறார்கள். பிறகு குடியேற்றம் தான் கேட்டார்கள். DOMINIAN அந்தஸ்து என்று கூறுவார்கள். அதைத்தான் கேட்டார்கள். முழு விடுதலையெல்லாம் கேட்கவில்லை. அப்போது கனடா, கென்யாவிற்கெல்லாம் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள்.

சர்ச்சில் அந்த உரையில், “அவர்களுக்கெல்லாம் விடுதலை கொடுக்கலாம் இந்தியாவிற்கு கொடுக்காதீர்கள்” இதை வைத்துத்தான் இந்திய விடுதலைக்கு எதிரானவர் என்று பேசுகிறார்கள். அதே உரையில் அதற்கான காரணமாக, “காந்தியின் அந்த போராட்டம் விடுதலை போராட்டமல்ல, நடக்கிற போராட்டம், பார்ப்பனர்களை பிரிட்டிஷார் இடத்தில் ஏற்றி வைக்கிற போராட்டமே தவிர விடுதலைக்கான போராட்டமல்ல. (Substitute Brahmins in the place of British)” என்று குறிப்பிடுகிறார். “அதை மட்டும் கொடுத்து விடுவீர்களேயானால், 65 மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு நாசமாகிவிடும். அவர்களின் நிலை தற்போது இருப்பதை விட மிகவும் மோசமாகவிடும். அதை செய்து விடாதீர்கள்” என்று பேசுகிறார். அதற்குப் பிறகு தான் வட்டமேசை மாநாடு நடக்கிறது. அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி கேட்கிறார். இந்த உண்மையைக் கூறியதால் சர்ச்சிலை இந்தியர் களுக்கு எதிரியாகக் காட்டினர். இதே போல தான் மெக்காலேவையும் எதிரியாக காட்டினர். பிரிட்டிஷ்காரர்கள் சுரண்டல்காரர்கள் தான். ஆனால், அதற்கு மேல் மக்கள் மீது ஒரு அபிமானம் இருந்தது. கருப்பர்கள் நாடான ஆப்பிரிக்காவிற்கு விடுதலை கொடுப்பதற்கு தடை யில்லை. கருப்பர்களுக்கு கொடுக்கலாம் தடை யில்லை. இந்தியாவில் 65 மில்லியன் தாழ்த்தப் பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அழித்து விடுவார்கள் என்பதே சர்ச்சிலின் நோக்கம். காந்தி, தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை முறையை வட்டமேஜை மாநாட்டில் எதிர்த்தார்.

இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி முறை என்ன மாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதைப் பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் தெரிந்திருக்கும். ஆனால், தற்போது இருக்கும் நிலையை விட ஓரளவிற்காவது, தலித் மக்களின் கோரிக்கையை முன் வைத்திருக்கிற பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். பெரியார் சிறையில் இருந்து வந்த பின் 1940இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், “இரட்டை வாக்குரிமை, தனித் தொகுதி முறை சென்னை மாகாணத்திற்காவது வேண்டும்” என்று தீர்மானம் போடப்பட்டது. இப்படி படிப்படியாகத்தான் நகர்கிறது. அதற்கு முன் இருவருமே கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஜே.எஸ் கண்ணப்பர், 1927இல் திருவண்ணாமலையில் நடத்துகிறார், இராமநாதன் திருச்சியில் நடத்துகிறார், கி.ஆ.பெ விஸ்வநாதம் மயிலாடுதுறையில் நடத்துகிறார். இப்படி ஆங்காங்கே சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மக்களை அழைத்துக் கொண்டு கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்துகிறார்கள். காலாராம் கோவில் நுழைவுப் போராட்டத்தை 1930இல் புரட்சியாளர் அம்பேத்கர் செய்தார். தனிக் கிணற்றில் நீர் எடுக்கும் போராட்டம். இப்படி பலவற்றை செய்தனர். ஒரு கட்டத்தில் கோவில் நுழைவு வேண்டாம், தனிக் கிணற்றில் நீர் எடுப்பதும் வேண்டாம், எங்களுக்கு இந்த மதமே வேண்டாம் என்பதை அழுத்தமாக பேசத் தொடங்கினார்கள்.

விரும்பியோ விரும்பாமலோ நம்மை இந்து மதத்தில் இணைத்து வைத்திருக்கிறான். இணைத்து வைத்திருப்பது மட்டுமல்ல அதன் காரணமாக நமது உரிமைகளை பறிக்கிறான். சூத்திரன் துறவி ஆக முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது. அதே போல சூத்திரனுக்கு, மனைவி, வைப்பாட்டி இரண்டும் ஒன்று தான். ஏனென்றால் சூத்திரனுக்கு திருமணம் செய்யும் உரிமை கிடையாது. திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய அய்யா வீரமணி அவர்களின் மாமனார் மாமியார் திருமண வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அதில் அப்படித்தான் தீர்ப்பு வழங்கினார்கள். இதை பெரியார் வேடிக்கையாகக் கூறுவார், “ஒரு கல்லில் இரண்டு குருவி என்று கூறுவார்கள், ஆனால் மூன்று குருவி அடித்து விட்டான்” என்று கூறுவார். ஏனென்றால், சுயமரியாதை திருமணம் செல்லாது, சூத்திரனுக்கு மனைவியும், வைப்பாட்டியும் ஒன்றுதான், அதனால் சொத்தில் மட்டும் உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்து விட்டுத்தான் இப்படிபட்ட மதம் எங்களுக்கு வேண்டாம் இதை விட்டு வெளியேறுவோம் என்ற சிந்தனைக்கு வந்தார்கள். அதற்குப் பின்னால் எடுத்த முயற்சிகளைத்தான் இந்த புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

காந்தியைப் பற்றி எப்போதும் பெரியாருக்கு ஒரு கருத்து இருந்துகொண்டே இருந்தது. காங்கிரசில் இருந்து வெளியேறினாலும் காந்தியை ஏற்றுக் கொண்டவராக இருந்தார். அந்த சமயத்தில்,

1926இல் மைசூரில் காந்தி உரையாற்றும்போது வர்ணாஸ்ரமத்தை ஆதரித்துப் பேசுகிறார். அதனால் காந்தியின் மீது பெரியாருக்கு கோபம் வந்துவிடுகிறது. அதன்பின் தான் “நண்பர் காந்தி”என்று எழுதுகிறார். அதனால் பிரச்சனை செய்கிறார்கள். மகாத்மா என்று எழுதச் சொல்லி. “சாதாரண ஆத்மாவே இல்லை என்கிறேன் இதில் எங்கே மகாத்மா வந்தது” என்று கேட்டார் பெரியார்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி