viduthalai rajendran kolathoor

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு  பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர் மே.பொ. ஆறுமுகம், பொது மக்களுக்கு பயன்படும் நோக்கத்தோடு இந்த நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எழுதித் தந்திருக்கிறார். கழகத்தின் தலைவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை கழகத்துக்கு பெருமை சேர்க்கிறது. ஊர் ஊராக படிப்பகங்களை அமைத்து மக்களை அறிவார்ந்தவர்களாக மாற்ற வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி படிப்பகங்களை அமைக்கும் வழக்கத்தையே பார்க்க முடியாது. திராவிடர் இயக்கம் இப்படி படிப்பகங்கள் வழியாகவும் முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலவைக் கடைகள், தேனீர்க் கடைகளில் மக்கள் கூடி பத்திரிகைகளைப் படித்து விவாதிப்பதன் வழியாகவும் அடித்தள மக்கள் இயக்கமாக வளர்ந்தது.

இடையில் இப்படி படிப்பகங்கள் அமைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன. திராவிடர் இயக்கங்கள் அரசியல் கட்சிகளாகி கொள்கை அடையாளங் களை இழந்ததால் நிகழ்ந்த சமூக விபத்துகளில் இதுவும் ஒன்று. மதவாத சக்திகள் ஊர்தோறும் நடைபாதைகளை பொது இடங்களை ஆக்கிரமித்து கோயில் களைகட்டத் தொடங்கின. இந்தக் கோயில் களை வைத்து வசூல் வேட்டை நடக்கிறது. ஜாதி மோதல்களும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இப்போது ‘குத்தாட்டம்’, ‘ஆபாச நடனங்கள்’  போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. உயர்நீதிமன்றமே தலையிட்டு இந்த ஆபாசக் கூத்துகளை கோயில் விழாக்களில் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடும் நிலை வந்திருக்கிறது. ‘குடிஅரசு’ பத்திரிகையில் பெரியார் பல ஊர்களில் ‘வாசக சாலைகளை’ திறந்த வைத்துப் பேசிய கருத்தாழமிக்க உரைகளைப் படிக்க முடியும்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் இப்பகுதி தோழர்களும் திராவிடர் கழகத்தில் இருந்தபோதே இப்பகுதிகளில் பெரியார் சிலைகளை அமைப்பதை விட படிப்பகங்களை திறப்பதுதான் பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கான சிறந்த வழி என்று முடிவெடுத்து பல படிப்பகங்களை உருவாக்கினார்கள். அந்தப் படிப்பகங்கள் இப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைத்த நிறுவனங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படிப்பகத்தை திராவிடர் விடுதாலைக் கழகம் உருவாக்கியிருந்தாலும் இது இப்பகுதி மக்களின் பயன்படுத்தும் படிப்பகமாகவே செயல்படும். கட்சி அடையாளங்களைக் கடந்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏடுகளை நூல்களை படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம். பொது நலனுக்கு சொந்த சொத்துக்களை வழங்குவோர் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருப்பார்கள். இந்தப் படிப்பகத்தில்கூட இடத்தை வழங்கிய மருத்துவரின் படத்தை - நன்றி உணர்வோடு கழகத் தோழர்கள் சுவரில் ஓவியமாக தீட்டி வைத்திருக்கிறார்கள். அவரது மகன் மருத்துவர் துரைசாமி அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு நாங்கள் கூறுவ தெல்லாம் “நீங்கள் நம்பிக்கையோடு பொதுநலனுக்குப் பயன்படும் நோக்கத்தில் இந்த இடத்தை வழங்கியிருக் கிறீர்கள். அந்த நம்பிக்கையில் இம்மியளவுப் பிறழாமல் திராவிடர் விடுதலைக் கழகம், இந்த படிப்பகத்தையும் இடத்தையும் சமுதாய நலனுக்காகவே பயன்படுத்தும் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

சேலம் மேற்கு மாவட்டக் கழகத் தலைவர் கு. சூர்யகுமார், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஒன்றியத் தலைவர் செ.தர்மலிங்கம் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தனர். சி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் மற்றும் மேட்டூர், கொளத்தூர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னையிலிருந்து மாவட்ட செயலாளர் உமாபதியுடன் பத்து கழகத் தோழர்கள், கொளத்தூர், நங்கவள்ளியில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் படிப்பகத் திறப்பு விழாக்களில் இரு நாட்களும் பங்கேற்றனர்.

படிப்பகத் திறப்பைத் தொடர்ந்து கொளத்தூரில் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பிறந்த நாள், தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்க தோழர்களும் தோழியர்களும் பறை இசை முழங்க ஊர்வலமாக சென்றனர். விழாவில் விரட்டு கலை பண்பாட்டு மய்யம் சார்பில் மாபெரும் கலைவிழா, கழகப் பரப்புரை விழாவாக 3 மணி நேரம் நடந்தது. ஜாதி ஒழிப்பு - பெண்ணுரிமை - பகுத்தறிவு கொள்கைகளை விளக்கும் நாடகங்கள், பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் நடந்தன. மாநாடுகளைப்போல பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இடை யிடையே மழை பெய்த போதும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கொளத்தூர் நகர செயலாளர் சி. இராம மூர்த்தி நன்றி கூற இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி முடிவடைந்தது.