சே உருவான கதை-கார்லோஸ் கலிகா பெரர்

தமிழில் : ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை - 18, பக்: 176 | ரூ. 90

இருபதாம் நூற்றாண்டுக்கு எத்தனையோ தனிச்சிறப்புகள் உண்டு. மனித வரலாறு அதனுடைய நெருக்கடியான ஒரு காலச் சூழலைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. மனித வாழ்க்கை குறித்த முரண்பட்ட தத்துவங்களின் ஊடாக உலகம் இயங்கி முன்னேற வேண்டியிருந்தது. ஒவ்வொரு தத்துவத்தையும் நிலை நிறுத்தி முழுமைப்படுத்த அதனதன் வடிவமைப்பாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். தொடர்ந்து எங்கெங்கும் நிலவி வந்த அதிகாரத்திற்கும், ஆக்கிரமிப்புக்கும், அநீதிக்கும், சுரண்டலுக்கும், ஏற்றத்தாழ்வு களுக்கும் எதிரான போராட்டங்கள் பல வகையான வடிவங்களில் நிகழ்ந்தன. மக்களிடையே உலகளாவிய பார்வை விரிந்தது. தனிமனிதன் என்ற பார்வை தகர்ந்து சமூக மனிதன் என்ற அளவில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகள் உலக மக்களிடையே மேலோங்கி வளர்ந்தன. அவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தின் பயணம் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த விதத்தில், மக்களை முன் நடத்திச் சென்ற மாமனிதர்களில் ஒருவர்தான் சே. அவர் சமூக மனிதனாக வளர்ந்து பரிமாணம் கொண்ட எதார்த்தமான வாழ்க்கை சாகசங்கள் நிறைந்த ஒரு நெடுங்கதையைப் போல இந்த வரலாற்று ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இரு நண்பர்களின் தோழமை நிறைந்த வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வரலாறு துல்லியமான, தெளிவான அம்சங்களுடன் முழுக்க முழுக்க காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் அபூர்வமாகவே அறியப்பட்டுள்ள இலத்தீன் அமெரிக்காவின் விரிவான தளங்கள் சித்திரிக்கப்பட்டு உள்ளன. சாராம்சத்தில் இது ஒரு பயணக்கதையாக இருந்தாலும் வரலாற்றின் நெகிழ்ச்சி மிகுந்த ஒரு கால கட்டத்தை வெளிப்படுத்துகிறது.

காலம், இடம், பின்னணி என்ற ஒருங்கிணைந்த ஒரு முப்பரிமாண இயக்கத்தின் சூழலில் பிறந்து வளர்ந்த இருவரின் இளம்பருவ வாழ்க்கை எப்படிப் பரிணாமம் கொள்ளுகிறது என்பதை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. “சூழலின் வெப்பம் ஒருவனைப் புரட்சி யாளனாக மாற்றும் ரசாயனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற செய்தி இதில் உள்ளது.’’ இதுதான், இந்த வரலாற்று ஆவணத்தில் அழுத்தம் பெறுகிறது. ‘சே’வுடன் பயணத்தை மேற்கொண்ட கலிகாவின் வாழ்க்கை அதனுடைய எதிர்த்திசையில் செல்லுவதையும் அடையாளம் காட்டுகிறது இது. அதைக் குறித்து கலிகாவே மனம் திறந்து பேசுகிறார். ஒரு நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்திருந்தால் தமது பயணமும் ‘சே’வுடன் இணைந்த ஒன்றாகவே இருந்திருக்கும் என்று கலிகா தன்னைப் பற்றித் தெளிவுபடுத்துகிறார்.

“சே’’ உருவான கதைக்கு முன்னுரை எழுதியுள்ள இலத்தீன் அமெரிக்க கம்யூனிச முன்னோடியான ஆல்பர்ட்டோ கிரானடோ குறிப்பிடுவது இதைத்தான்: “நம் நண்பனை அவன் அன்றும் என்றும் இருந்தது போல் ரத்தமும் சதையுமாகக் காட்டி இந்தப் பூங்காற்றை வீசச் செய்ததற்கு நன்றி, கலிகா.’’

ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தத் திட்டமிடும் நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த வரலாறு, அலைகளின் இயக்கம் போல இடைவிடாமல் அடுக்கடுக்காக விரிந்து கொண்டே செல்கிறது. சவால் விடுவதும் அதைச் சாதித்துக் காட்டுவதும் சே வின் இயல்பு என்பதைத் தொடக்கத்திலேயே கலிகா நிலைப்படுத்துகிறார். குழந்தைப்பருவ நினைவுகளை முன்வைத்து நிகழ்வுகளை அடுக்கடுக்காகப் பின்னிக் கொண்டே செல்லுகிறார்.

தன்னுடைய உடல் அளவில் ஆஸ்துமா நோயின் அவ்வப் போதைய தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு எல்லாவிதமான குழந்தைகளையும் போலவே ‘சே’ இளம்பருவத்தைக் கழித்த அனுபவங்களை நேரிடையாகக் கண்டிருந்த கலிகா அவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார்.

குழந்தைகளின் அறியாமை மிகுந்த நடவடிக்கைகளை அவற்றிற்கே உரிய வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்துகிறார். அதே சமயத்தில் சே-வின் வளர்ந்து வரும் மனப்போக்கையும் தனித்துக் காட்டுகிறார். குழந்தைப் பருவத்திலும் வளர்ந்த நிலையிலும் சே-வின் நடவடிக்கைகளைக் குறித்து மொழிபெயர்ப்பாளர் ச. சுப்புராவ் சரியாகவே எச்சரிக்கிறார். “சே குவேரா மற்றும் இந்நூலாசிரியரின் வாலிபக் குறும்புகளை தமிழ் வாசகர்கள் லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்தின் பின்னணியில் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் எல்லாவிதமான குணாம்சங்களையும் வெளிப்படுத்திக் காட்டுவது இந்தப் படைப்புக்கே உரிய நேர்மையையும், உண்மையையும் புலப்படுத்துவதாக உள்ளது. இது மிகச் சிறந்த ஒரு நாவலின் செறிவான வடிவமாகவே தோன்றுகிறது. விறுவிறுப்புடனும் மிகுந்த சுவையுடனும் ஒவ்வொரு நிகழ்வும் சொல்லப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. மனதை நெருடக்கூடிய விதத்தில் அங்கங்கே நிகழ்ச்சிகளைக் குறித்து கலிகா பேசுகிறார். அவற்றில் ஒன்று:

“நாங்கள் பொலிவியாவை விட்டு 1953 ஆகஸ்ட் 17ஆம் தேதி கிளம்பினோம். பல வருடங்கள் கழித்து சே -ஆக (ரமோன் என்ற பெயரில்) அங்கு வந்து தன் 39-ஆது வயதில் 1967 அக்டோபர் ஒன்பதாம் தேதி சுடப்பட்டு இறக்கப் போகிறான். ஆனால், அதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. பொலிவியாவில் ஒரு வாரம் எனத் திட்டமிட்டு ஒரு மாதத்திற்கும்மேல் நீடித்த அந்த முதல் தங்கல் மிகவும் மகிழ்ச்சிகரமாக நட்புரீதியாக இருந்தது. புரட்சியில் ஆர்வம் உள்ள ஏழ்மையான, பழங்குடியினரின் அமெரிக்கா பற்றி நிறையக் கற்றுத் தந்தது.’’ சவால்களையும், சாகசங்களையும், சாதனைகளையும் வாழ்க்கை முழுவதுமாக நிகழ்த்தி வந்த சே தன்னுடைய மன எழுச்சிகளை அவருடைய பயணங்களின் போது தன்னுடைய டைரியில் குறித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்றைத் தனிப்பட்ட விதத்தில் கலிகா குறிப்பிடுகிறார்.

“.....நான் இப்போது அறிவேன். மாபெரும் சக்தியன்று மனித குலத்தை ஒன்றிற்கொன்று எதிரான இரு பகுதிகளாகப் பிரிக்குமானால், நான் சாதாரண மக்களோடுதான் இருப்பேன். இது எனக்கு விதிக்கப்பட்டது. கோட்பாடுகளை, கொள்கைகளைப் பகுத்தறியும் திறனுடையவனாகிய நான், பல கோட்பாடுகளைப் பகுத்தாராய்ந்து தேர்ந்து ஏற்றுக் கொள்பவனும் வறட்டுத் தனமான கோட்பாடுகளை உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்துபவனுமாகிய நான், பதுங்கு குழிகளைக் கடந்து, வெறி பிடித்தவனாக முன்வரும் எதிரியைக் கொல்வேன். என் ஆயுதத்தில் இரத்தக்கறை படியும்.

இவை எல்லாவற்றிற்கும் பிறகு, எனது கிளர்ச்சியடைந்த மன நிலையை ஒரு மிகப்பெரிய சோர்வு ஆழ்த்திவிடும். நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்வதையும், தனிநபர்களை வேரறுக்கும் ஒரு புரட்சியால் நான் பலியாக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது....” தகுந்த ஆவணங்களையும், புகைப்படங்களையும் முன் வைத்துப் பேசும் கலிகா அவற்றை நூலிலும் ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்.

‘சே’ என்பது தொழு நோயாளிகள் எர்னஸ்டோ கிரானடோவின் அன்பிற்கும் கருணைக்கும் நெகிழ்ந்து அளித்த பட்டப்பெயர் என்பதையும் அடையாளப்படுத்துகிறார் கலிகா. இலத்தீன் அமெரிக்கா முழுவதுமாகக் காணப்படும் தொழு நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் “சே’’ குவேரா தன்னுடைய ஆத்ம நண்பர் கலிகாவுடன் நிகழ்த்திய இரண்டாவது இலத்தீன் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை விளக்கும் இந்த வரலாறு பொலிவியா, பெரு, ஈகுவடார் நாடுகளை முதன்மைப் படுத்துகிறது. ‘சே’ குவேராவின் மனத்திண்மையையும், விடாமுயற்சியையும் அளவற்ற துணிச்சலையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்துக் காட்டுகிறது இந்த வரலாறு.

1952-ல் தன் நண்பர் ஆல்பெர்டோ கிரானடோவுடன் தென் அமெரிக்காவை (லத்தீன் அமெரிக்கா) வலம் வந்தார் சே. அப்பயணக் கதை “மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்” எனும் புகழ் பெற்ற நூலில் இடம் பெற்றது. இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, சுற்றுச் சூழலைச் சீர்குலைத்து மனித வாழ்க்கையை அளவு கடந்த நெருக்கடிக்கு உள்ளாக்கிவரும் உலகமயமாதல், உலகச் சந்தை பொருளாதாரம் நிறுவப்படும் இன்றைய சூழலில் “சே’’ எர்னஸ்டோ குவேரா டிலா செர்னாவின் இந்த வரலாற்று ஆவணம் நவீன உலகின் போக்கை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும்.

Pin It