அரசே சமர்ப்பித்த அறிக்கை தரும் அதிர்ச்சித் தகவல்கள்

மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன.

modi 432பொதுப் போட்டியில் முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை நடுவண் ஆட்சி அறிவித் திருக்கிறது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு அவசர அவசரமாக இந்த சட்டத் திருத்தம் வந்துள்ளது. ஆனால் மத்திய பல்கலைக் கழகங்கள், தொடர்வண்டித் துறை, காவல்துறை, அஞ்சலகத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் நீதித் துறைகளில் நீண்டகாலமாக ஏராளமானப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. இது குறித்து புள்ளி விவரங்களை ‘பிசினஸ் லைன்’ ஜன.10ஆம் தேதி ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டத் துறைகளில் 28 இலட்சம் பணி இடங்கள் காலியிடமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை அந்த ஏடு தந்துள்ளது.

மருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (All India Institute of Medical Science), உயர் கல்வி நிறுவனங்களில் 4089 புதிய பதவிகள் உருவாக்க அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், போபால், புவனே சுவர், ஜோக்பூர், பாட்னா, ரெய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கழகங்களில் 20,221 பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பணி இடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சுகாதார நலத் துறை அறிக்கை கூறுகிறது.

மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் விரிவுரையாளர்கள் உள்பட 17,092 பதவிகளை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நிரப்பப்பட்ட இடங்கள் 5606 மட்டும்தான். 2018 ஏப்ரலில் மனித வளத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை இத் தகவல்களைக் கூறுகிறது.

அதே மனித வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் மத்திய அரசு­­ நடத்தும் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10 இலட்சம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 4,17,057 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப அனுமதி கொடுத்திருந்தும் இன்னும் நிரப்பப்படவில்லை.

இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 388 நீதிபதிகள் பதவிகளும், கீழமை நீதிமன்றங்களில் 5135 மாஜிஸ்திரேட் பதவிகளும் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 22,746 பணி இடங்களும் எல்லை பாதுகாப்புப் படையில் 19,320 பணி இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவில் 5,165 இடங்களும், சீமா பால் என்ற படைப் பிரிவில் 19,175 இடங்களும், இந்தோ-திபேத்தியர்கள் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் 6,398 இடங்களும், ‘அசாம் ரைஃபில்’ என்ற பாதுகாப்புப் படைப் பிரிவில் 3774 இடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்ற தகவலை உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது.

இரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பிரிவில் 1,51,348 பதவிகள் காலியாக உள்ளன. ஏப்.2018 நிலவரப்படி, இரயில்வேயில் கெசட்டட் நிலை பெறாத 2,50,410 பதவிகள் நிரப்பப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் மத்திய வேலை வாய்ப்புத் துறை சார்பில் மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மார்ச் 1, 2016 வரை மத்திய அரசு நிர்வாகப் பதவிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் காலி இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப் பட்டுள்ள. குரூப் ‘ஏ’ பிரிவில் 15,284 இடங்களும், ‘பி’ பிரிவில் (கெசட்டட் நிலை பதவிகள்) 26,310 இடங்களும் கெசட்டட் நிலை இல்லாத பதவிகள் 49,740 இடங்களிலும் குரூப் ‘சி’ பிரிவில் கெசட்டட் நிலை இல்லாத பிரிவுகளில் 3,21,418 பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் காவல் துறைகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பதவிகள் 4,43,524. காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் தந்துள்ள தகவல் இவை. மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சக அறிக்கை 4000 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஏராளமான அஞ்சலகங்களில் 57,574 பதவிகள் காலியாக உள்ளன.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி யோடு மோடி பதவிக்கு வந்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பிரதமர் வேலை உருவாக்கத் திட்டம், தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா, தீனதயாள் அந்தோதயா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார மய்யம் என்ற அமைப்புகள் உருவாக்கப் பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த அமைப்புகள் உருவாக்கிய வேலை வாய்ப்புகள் 27 இலட்சம் மட்டுமே. மோடியின் உறுதிமொழிப்படி சுமார் 8 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி யிருக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, ஏற்கனவே காலியாக உள்ள 28 இலட்சம் வேலை வாய்ப்புக்கான இடங் களையும் நிரப்பாமல் கிடப்பில் போட்டுள்ளது, மோடி ஆட்சி!

இந்த நிலையில் உயர்ஜாதியில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு அவசர அவசரமாக கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் கண் துடைப்பு நடவடிக்கை என்பதோடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்கும் ஆபத்தான திட்டமாகும்.