பூமியில் இருந்த கடவுள்களை விண்ணுலக கடவுள்களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில்  எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்?

• சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக  காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் - சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக் கொண்டுவிட்ட சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.)

• ஆரண்யகங்களைத் தொடர்ந்து பகுத்தறிவு சிந்தனை வளர்ச்சியால் உருவானதே ‘உப நிடதங்கள்’. உபநிடதங்களை உருவாக்கி யவர்கள் யாகங்களை எதிர்த்து காட்டுக்கு ‘தவம்’ செய்யச் சென்றவர்கள். இவர் களிலேயே பவுத்தர்களும் இருந்தார்கள்.

• வேத புரோகித பார்ப்பனர்களுக்கும் ஆட்சி செய்த மன்னர்களான சத்திரியர்களுக்கு மிடையே முரண்பாடுகள் தலைதூக்கின. பார்ப்பனர்களின் புரோகித சடங்குகளை நேரடியாக எதிர்த்த சத்திரிய மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக ஜனமே ஜெயன் - என்ற சத்திரிய மன்னன், பார்ப்பனர்களை புறக்கணித்து, யாகம் நடத்தியதாலும் அவன் பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியதாலும் தான் அவனது யாகமே சக்தி இழந்தது என்று கவுடில்யன் எனும் பார்ப்பனன் ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் எழுதி யிருக்கிறான்.

• 200க்கும் மேற்பட்ட உபநிடதங்கள் இருக்கின்றன. வேதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுவது 108 உபநிடதங்கள்தான். ஏனையவை புரோகித வேத பார்ப்பனர்களுக்கு எதிராக சத்திரியர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்.

•  உபநிடதங்களின் தொடர்ச்சி யாக 6 சிந்தனை மரபுகள் உரு வாயின. இதில் வைசேஷிகம், நியாயம், சாங்கியம், யோகியம் ஆகிய நான்கு மரபுகள், வேத புரோகித சடங்குகளை கேள்வி கேட்டன. பின்னர் காலப் போக்கில் பார்ப்பனியம் அவற்றை உள்ளிழுத்துக் கொண்டது.

•   கி.மு. 6ஆம் நூற்றாண்டில் ‘பரிவிராஜகர்’ (நாடோடிகள்) என்ற கலக அமைப்பு ஒன்று வேத புரோகித மரபுக்கு எதிராக உரு வானது. வேத பார்ப்பனக் கொடுமை களை எதிர்த்த இவர்கள் தங்கள் குடும்பங்களைத் துறந்து வெளியேறி ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து வேத பார்ப்பன மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். வைதீகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பை சந்தித்து, அறிவுப் புரட்சிக்கு களம் அமைத்த வரலாற்றுப் பெருமை இவர்களுக்கு உண்டு. பரிவிராஜகர்களில் எவரும் பார்ப்பனர்கள் இல்லை.

• வேதங்களை மறுத்தவர்களை பார்ப் பனர்கள் ‘நாத்திகர்கள்’ என்றார்கள். அக்காலத்தில் உருவானது ‘லோகாயதா’ சிந்தனை. லோகாயதா என்றால் மக்களிடையே பரவி இருப்பது என்பது பொருள். லோகாயதவாதிகள் வேதங்களை மறுத்து எழுதிய இலக்கியங்களை முழுமையாக பார்ப் பனர்கள் அழித்தார்கள். ‘லோகாயத் துக்கு’ மறுப்பு எழுதியவர்கள் மேற் கோளாகக் காட்டிய எழுத்துகள் மட்டுமே இப்போது காணக் கிடக்கின்றன.

• லோகாயதக் கருத்துகளை எளிய நடையில் எழுதியவர் சார்வாகர். அதனாலே பார்ப்பனர்கள் ஏச்சுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானார். சார்வாகம் என்ற சொல்லுக்கு ‘இனிமையான பேச்சு’ என்று பெயர். வேத மறுப்பு மதங்களான சமணம், பவுத்தம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்தது ‘சார்வாகம்’தான்.

• புத்த மார்க்கம், பார்ப்பன வேதச் சடங்கு களை கேள்வி கேட்டது. அதனால், புத்தர் இயக்கத்தை பார்ப்பனியம் ஊடுருவி அழித்தது. புத்தருக்குப் பிறகு வேத மரபு மறுப்பாளர்கள் பலரும் தோன்றினர். வைகுண்டசாமி வடலூர் வள்ளலாரும் அதில் அடங்குவர். அத்தனையையும் பார்ப்பனியம் செரிமானம் செய்தது. அல்லது மக்களிடையே செல்வாக்குப் பெற விடாமல் தடுத்தது.

வேத காலம் தொடங்கி, பார்ப்பன வேத மறுப்பு சிந்தனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாலும் மாபெரும் இயக்கமாகக் கட்டி எழுப்பியது பவுத்தம் தான். பவுத்தக் கொள்கையை மன்னர்கள் பலரும் அரசு கொள்கையாக ஏற்றனர். பார்ப்பனர்கள் அதை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, ஜோதி பாபுலோ, பெரியார், அம்பேத்கர் போன்ற பார்ப்பன எதிர்ப்பாளர்கள் வந்தார்கள்.

தமிழ்நாட்டில் பெரியார் வந்தார்; பார்ப்பன வேத மரபு செரிமானம் செய்ய முடியாத ஒரே தலைவராக பெரியார் மட்டுமே இருக்கிறார். பெரியாரியம் தான் இப்போதும் வேத மரபுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

பார்ப்பனிய வேத மரபை எதிர்த்த அம்பேத்கரையும் இப்போது பார்ப்பனியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

‘சங்பரிவாரங்கள்’ இப்போது பெரியாரை மட்டும் தனிமைப் படுத்தி எதிர்ப்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்.

வேத மரபு எதிர்ப்பின் தொடர்ச்சிதான் திராவிடர் விடுதலைக் ழகம், டிசம்பர் 24 - பெரியார் பிறந்த நாளில் சேலத்தில் நடத்த இருக்கும் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’.

நாம், பெரியார் பரம்பரையைச் சார்ந்தவர்கள். நமக்கு நீண்ட மரபு உண்டு. பரிவிராஜகர்கள், லோகாயதவாதிகள், சார்வாகர், சித்தர், புத்தர், சமணர், இராமலிங்கனார், பூலே, அம்பேத்கர் என்று வேத பார்ப்பன மரபை எதிர்ப்பதில் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாநாட்டில்பார்ப்பனிய வேத மறுப்புக் கொள்கையைக் கொண்ட சிந்தனையாளர்கள் பலரும் கருத்துரை வழங்க வருகிறார்கள்.

புதிய திருப்பத்தை உருவாக்கிட -

துள்ளிக் குதிக்கும் பார்ப்பன இறுமாப்புக்கு எச்சரிக்கை செய்திட -

வேத பார்ப்பன மறுப்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றியிருக்கிறது - திராவிடர் விடுதலைக் கழகம்!

தோழர்களே! வாருங்கள்!

குடும்பத்துடன் வாருங்கள்!

கொள்கை முழக்கமிட்டு வாருங்கள்!

சேலம் அழைக்கிறது!