இந்துக்கள் அல்லாதவர்கள் - இந்து மதத்துக்கு திரும்புவது, மதமாற்றம் அல்லவாம்! அதற்குப் பெயர் ‘தாய் மதம் திரும்புதல்’ என்கிறது சங்பார்ப்பன பரிவாரம்! வழமைபோல் இதுவும் அவர்கள் முன் வைக்கும் ஒரு புரட்டுவாதம் தான்!

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் தாய் மதம் ‘இந்து’ என்றால், ‘இந்து’ என்ற சொல் - வேதம், புராணம், சமஸ்கிருதம் உள்ளிட்ட - எந்த நூலிலும் இடம் பெறாதது ஏன்? இது 1927 ஆண்டிலேயே பெரியார் எழுப்பிய கேள்வி; இதுவரை விடை கிடைக்காத கேள்வி.

பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகனாக’ கொண்டாடும் இராஜகோபாலாச்சாரி எனும் இராஜாஜி, “இந்து மதம் என்பது அண்மைக் காலத்திய புதிய பெயர்” என்கிறார்.

“இந்துமதம் தெளி வற்றது; வரையறை ஏதும் இல்லாதது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி இராசமன்னார் ஒரு தீர்ப்பில் கூறினார். (மைக்கேல் எதிர் வெங்கடேசன் வழக்கு -1952) “இந்து என்ற சொல் வேதத்தில் சொல்லப்படவில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியா மீது படை எடுத்தபோது சிந்துவுக்கு கிழக்கே உள்ள மக்களை இந்துக்கள் என்று குறிப்பிட்டனர்” என்கிறார் காந்தியார் (‘அரிஜன்’ பத்திரிகை, 30.11.1947).

“இந்து சமூகம் என்பது ஒரு புனைவு” என்று கூறும் அம்பேத்கர், இந்து மதத்துக்கு ஒரு பொதுப் பெயர் இல்லாமல் போனதற்குக் காரணம், “இது ஒரு சமூகமாகவே உருவாகியது இல்லை; ஒரு சமூகமாக உணரப்படவும் இல்லை; எனவே அதற்கு பெயரே உருவாகாமல் போனது” - என்று தெளிவாக விளக்குகிறார்:

பவுத்தம், சமணம், சீக்கியம், சைவம் என்று பல்வேறு பெயர்களில் மதக் குழுக்கள் இருந்தன. இந்த மதக் குழுக்களுக்கிடையே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்தன. வழிபட்ட கடவுள்களும் வழிபடும் முறைகளும் வெவ்வேறாக இருந்தன.

தமிழ்நாட்டில் சைவமும் வைணவமும் மோதிக் கொண்டு ஒரு பிரிவை மற்றொரு பிரிவு அழித்துக் கொண்டது. அது வைணவர்களை கழுவேற்றிக் கொலை செய்யப்படும் நிலைக்குச் சென்றது. இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19ஆம் நூற்றாண்டில் அதிகாரத்தில் பங்கு கேட்கும் போட்டியில் கிறிஸ்தவர், முஸ்லிம்களைவிட தங்களின் எண்ணிக்கை அதிகம் என்று காட்டத் துடித்த பார்ப்பனர்களுக்கு தங்களுடைய பார்ப்பன மதத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்தது. எனவே கிறிஸ்து, முஸ்லிம் அல்லாத ஏனைய பல்வேறு பிரிவினரை ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் திணிக்க முயன்றதன் விளைவே ‘இந்து’ மத உருவாக்கம்.

அதே போன்று, ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த பிரிட்டிஷ் ஆட்சி, இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, ஒரு சட்டத்தை உருவாக்க முயன்றபோது, அந்த சட்டத்துக்கான அடிப்படை நீதி நூலாக பார்ப்பனர்கள் பிரிட்டிஷாரிடம் ‘மனுதர்மத்தை’க் கொடுத்தனர். பிரிட்டிஷாரும் பார்ப்பனர்களும் சேர்ந்து உருவாக்கிய விதிகள்தான், இந்து மதத்தின் அடிப்படை கூறுகளானது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை நீதிமன்றமாக இலண்டனில் இருந்த ‘பிரிவி கவுன்சில்’,

“இந்து மதம் பல்வேறு மதத்தின் கூறுகளை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் சக்தியும் நெகிழ்ச்சியும் கொண்டிருக்கிறது. பல மதப் பிரிவுகள், நூற்றுக்கணக்கான சாதியர், மிகப் பெரும் வேறுபாடுகள், வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டது இந்துமதம். ஆனால், இதன் சமுதாய விதிகள் கடுமையானவை” என்று கூறியது. இந்த உண்மையை ஒப்புக் கொண்ட காஞ்சி ஜெயேந்திர சரசுவதி,

“வெள்ளைக்காரன் நமக்கு ‘இந்து’ என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம்; அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது” (‘தெய்வத்தின் குரல்’ - பாகம் 1) என்று வெளிப்படையாகவே கூறி விட்டார்.

பார்ப்பனர்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகளையும், பார்ப்பன மதப் பிடிக்குள் கொண்டு வந்து, பார்ப்பனரல்லாதவர்கள் அனைவரையும் தங்களின் அடிமைகளாக்கி, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று பெயர் சூட்டி விட்டார்கள். இதை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கருத்தியலை வழங்கிய கோல்வாக்கர் தெளிவாகவே கூறுகிறார்:

“புருஷ சுக்தாவில் நம்மை உருவாக்கிய கடவுள் யார் என்பது கூறப்பட்டிருக்கிறது. அதுவே நமது இந்துக்களுக்கான அடையாளம்... பிராமணன் நமது கடவுளின் தலை; அரசர்கள் அவனது கைகள்; வைசியர்கள் அவனது தொடை; ‘சூத்திரர்’கள் அவனது கால்; இந்த நான்கு பிரிவுகளைக் கொண்ட அமைப்புதான் நமது இந்து சமூகம் என்று வர்ணாஸ்ரம ஏற்றத் தாழ்வே இந்து சமூகத்தின் அமைப்பு” என்கிறார்.

வர்ணாஸ்ரமத்தில் பல்வேறு பிரிவுகளில் கலப்பு ஏற்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை எந்த வர்ணத்திலும் திணிக்க முடியாத நிலையில்தான் ‘ஜாதிகள் உருவாயின என்பதை அம்பேத்கர் மனுதர்மத்திலிருந்தே ஆதாரங்கள் காட்டி நிறுவியிருக்கிறார். ஆக, ‘தாய் மதம்’ என்று சங் பரிவாரப் பார்ப்பனர்கள் கூறும் இந்து மதம் என்பது பார்ப்பன மதத்தின் தலைமையை கட்டாயமாக்கி, அதன் கீழ் ‘ஜாதி அடிமைகளாக’ உழல வேண்டும் என்பதுதான். எனவே ‘தாய் மதம் திரும்புதல்’ என்பதே வேத மதத்தைத் திணிக்கும் ‘கட்டாய மதமாற்றம்’ தான்.

இந்தக் கட்டாயத் திணிப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, பார்ப்பன சிறையிலிருந்து தப்பித்தவர்களே, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். அந்தப் பார்ப்பன சிறையை உடைக்கும் சமூகப் புரட்சியை நிகழ்த்திவரும் புரட்சியாளர்களே, பெரியாரிஸ்டுகள்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் மதம், ஜாதி அடையாளங்கள், அவர்கள் விருப்பமின்றியே திணிக்கும் பார்ப்பனியத்தின் ‘இரும்பு விலங்கை’ உடைத்தெறியும் சமூக நீதிப் போராட்டம் தான், பார்ப்பன எதிர்ப்புப் போர்.

தாய் மதத்துக்கு திரும்புவதாகக் கூறும் சங்பரிவாரங்களுக்கு இறுதியாக ஒரு கேள்வி!

தாய் மதம் திரும்புவோரை “பிராமணர்களாக” ஏற்று, அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆகமக் கோயிலுக்கு அர்ச்சகராக்கவோ, ‘குடமுழுக்கு’ நடத்தும் அதிகாரம் வழங்கவோ, சங்கராச்சாரிகளாகும் வாய்ப்புகளை வழங்கவோ தயாரா? தனது பிள்ளைகளுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வை நிலைநிறுத்தும் ஒரு மதத்தை ‘தாய்’ என்று கூறி கேவலப்படுத்த வேண்டாம்!

மதம் மாறவும் - மதத்தை தூக்கி எறியவும் அனைவருக்கும் உரிமை உண்டு.