கருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு

தமிழ்நாட்டு அமைச்சர்கள் கடவுளுக்கு மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல் என்று மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கும்போது கருநாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா?

அம்மாநில முதல்வர் சித்தராமய்யாகூட ஒரு பகுத்தறிவாளர்தான். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கலால்வரித் துறை அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி இன்னும் ஒரு படி மேலே போய் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் இயக்கம் நடத்தி வருகிறார்.

அம்மாநில அரசு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர திட்டமிட்டது. பாரதிய ஜனதா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்து வருகிறார், அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி.

இதற்காக, அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி இரவு சுடுகாட்டில் “பேய்” நடமாடுகிறது என்ற மூடநம்பிக்கையை அம்பலப் படுத்தத் திட்டமிட்டார். தனது ஆதரவாளர் களுடன் ‘பெலகாவி’ எனும் சுடுகாட்டுக்குச் சென்றார்.

சுடு காட்டிலேயே இரவு உணவு சாப்பிட்டு, அங்கேயே இரவு முழுதும் தனது ஆதரவாளர்களுடன் உறங்கினார். இது பற்றி கூறுகையில், “சுடுகாட்டில் பேய்கள் தங்கி நடமாடும் இடம் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். உண்மையில் சுடுகாடு ‘புனிதமான’ இடம். ‘இலட்சுமி’யை வணங்காத பில்கேட்°தான் உலகின் முதல் பணக்காரர்.

‘இலட்சுமி’யை வணங்காத, எனக்கு வணிகத்தில் ரூ.600 கோடி வரை பணம் புரள்கிறது. என்னுடைய பதவியே பறி போனாலும் சரி, மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் சதீஷ்! பகுத்தறிவு உலகம் உங்களை பாராட்டி வரவேற்கிறது, சதீஷ்!

சுஷ்மாவின் ‘கீதை’ பக்தி

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள பார்ப்பன அம்மையார் சுஷ்மா சுவராஜ், ‘கீதை’ இந்தியாவின் ‘தேசிய புனித நூலாக’ விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது என்றும், சில நடைமுறைகள் பூர்த்தியான பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றும் டிசம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ‘திருவாய் மலர்ந்தருளி’யுள்ளார்.

‘கீதா பிரேர்னா மகாத்சோவ்’ என்ற அமைப்பு டெல்லியில் கீதையின் ‘5151’ஆம் ஆண்டுக்கான விழாவை டெல்லி செங்கோட்டையில் நடத்தியுள்ளது. அதில் பேசிய விசுவ இந்து பரிஷத் தலைவரான பார்ப்பனர் தொகாடியா, கீதையை ‘தேசிய புனித நூலாக’ உடனடியாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய சுஷ்மா, அதற்கான உறுதியை மேடையிலே அறிவித்துள்ளார்.

“ஒவ்வொரு தனி மனிதரின் பிரச்சினைக்கும் கீதையில் தீர்வு இருக்கிறது. எனவேதான் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று நாடாளு மன்றத்திலேயே நான் வலியுறுத்தினேன். வெளிநாட்டுத் துறை அமைச்சர் என்கிற முறையில் நான் சந்திக்கும் சவால்களை கீதையின் கருத்துகள் வழியாகவே எதிர்கொண்டு வருகிறேன்.

700 சுலோகங்கள் கொண்ட கீதையை நாளொன்றுக்கு இரண்டு வீதம் ஓராண்டுக்குள் படித்து முடித்து விட்டால், வாழ்க்கையில் புதிய பாதை கிடைக்கும்; விரைவில் மோடி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்” என்று பேசி இருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சுஷ்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளார். “நமது அரசியல் சட்டம் - இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று கூறுகிறது. அனைத்து புனித நூல்களையும் நாம் சமமாக மதிக்க வேண்டும்; கீதையை மட்டுமல்ல” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது இரஷ்யாவில் ‘அரே கிருஷ்ணா-அரே ராமா’ இயக்கத்துக்கு அங்கே ஒருநீதிமன்றம் தடைவிதித்த போது காங்கிரஸ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கே.ஆர். கிருஷ்ணா, உடனே எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியிலுள்ள இரஷ்ய தூதரக அதிகாரியையும் அழைத்துக் கண்டித்தார்.

இதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒத்த கருத்துடையவை தான். அம்பேத்கர், ‘கீதையை முட்டாள்களின் உளறல்’ என்றார்.

விவேகானந்தரும் கீதையை கேள்விக்கு உட்படுத்தியவர்தான். ‘குருக்ஷத்திரப் போராட்டக் களத்தில் கிருஷ்ணன், இப்படி ‘உபதேசம்’ செய்து கொண்டிருந்தார் என்பதை நம்ப முடியாது’ என்றார் அவர். சமஸ்கிருத திணிப்பு முயற்சியைத் தொடர்ந்து வர்ண பேதத்தையும் பெண்கள் ‘பாவயோனி’யில் பிறந்தவர்கள் என்று பெண்களையும் அவமதிக்கும் கீதையை தேசிய நூலாக்கப் போகிறார்களாம்!

திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கூடங்குளம் கதை

கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி, திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த ‘மர்மக் கதை’களாகக் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தால் எழுதப்பட்டு வருகிறது. கூடங்குளம் மின் உற்பத்தி யின் முடிவு என்ன? அது எப்போது வணிக விற்பனைக்கு தயாராகப் போகிறது?

கடைசியாக தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சாரம் கிடைக்குமா? கிடைக்காதா என்ற முடிவை கதையைப் படிப்ப வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

81 நாள்களாக மூடப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் முதலாவது பிரிவு, கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி இந்தப் பிரிவு 1000 மெகாவாட் உற்பத்தியை எட்டிவிட்டதாக அறிவித்தார்கள். அடுத்த திருப்பமாக ஜூலை 16ஆம் தேதி திடீரென நிறுத்தப் பட்டது.

வணிகரீதியாக மின் இணைப்பை உருவாக்குவதற்காக இந்த நிறுத்தம் என்று காரணம் கூறப்பட்டது.

மீண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி ஒரு திருப்பம்; அன்றுதான் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் வணிகத்துக்காக உற்பத்தியைத் தொடங்கலாம் என்ற அனுமதியை வழங்கியது.

வணிக இணைப்புக்கான சோதனை முயற்சி களுக்காக ஜூலை 16இல் நிறுத்தப்பட்டு, ஆகஸ்டு 31இல் ஒழுங்குமுறை வாரியம் பச்சைக்கொடி காட்டியதால், “மீண்டும் தொடங்கிய வணிக உற்பத்தி” செப்டம்பர் 13இல் மீண்டும் நிறுத்தப் பட்டது.

“சில தொழில் நுட்ப குறைபாடுகள்” என்று காரணம் கூறினார்கள். எரி பொருளான அணுவை சுழற்றி மின்சாரத்தைத் தயாரிக்கும் ‘டர்பைன்’ பழுதடைந்து விட்டது என்றார்கள். இரஷ்யாவிலிருந்து பழுது பார்க்க நிபுணர்கள் வரப் போகிறார்கள் என்று கூறப்பட்டது.

பிறகு உள்நாட்டிலேயே பழுது பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள். அதுவும் முடியாத நிலையில் ஏற்கனவே இரண்டாவது அணுமின் உற்பத்திப் பிரிவில் உள்ள புதிய ‘டர்பைன்’ எந்திரத்தை கழற்றி, முதல் பிரிவில் பொருத்தியிருக்கிறார்கள்.

இதற்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 9.59க்கு முதல் பிரிவில் மின் உற்பத்தி வெற்றிகரமாக தொடங்கிவிட்டது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி 1000 மெகாவாட் உற்பத்தியை எட்டிவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த முதலாவது பிரிவு, இப்போது 69 மெகாவாட் உற்பத்தியை மட்டும் செய்து வருவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

மின் சக்தியை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு தொடர்ந்து ஓராண்டு காலம் மின் உற்பத்தி நடக்க வேண்டும். அப்போதுதான் வணிக நிறுவனங்கள் நம்பிக்கையோடு வாங்குவதற்கு முன்வரும் என்று கூறப்படும் நிலையில் ஒவ்வொரு மாதமும் திடுக்கிடும் திகில் திருப்பங்களோடு கூடங்குளம் அணுமின் நிர்வாகம் மக்களின் காதில் பூசுற்றிக் கொண்டிருக்கிறது. அணுசக்தித் துறை ‘அவாளுக்கு’ மட்டுமே உரிமையுடையது. எனவே ‘பூதேவர்களை’ எதிர்த்து கேட்க முடியாது. கேள்வி கேட்டால் நாக்கை வெட்ட வேண்டும் என்று ‘மனுதர்மம்’ கூறுவதை எடுத்துக் காட்டுவார்கள்! நமக்கேன் வம்பு?

இடஒதுக்கீடு: சமூக ஆய்வாளர் தரும் பதிலடி

இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு சரியாக சாட்டையடி கொடுத்திருக் கிறார், ஒரு சமூக ஆய்வாளர். இவர் ஒரு பார்ப்பனப் பெண் என்பதுதான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெயர் வார்கா அய்யர்.

மும்பையில் செயல்படும் டாட்டா சமூக ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) கோவாவில் ‘சர்வதேச கலை இலக்கிய மய்யம்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், ‘அம்பேத்கரும் இடஒதுக்கீடும்’ என்ற தலைப்பில் பேசியுள்ளார்.

“நீண்டகாலமாக புறக்கணிப்புக்கு உள்ளான சமூகங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடுகள், அவர்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கை.

வரலாற்று அநீதிகளை சரிசெய்வதற்கான திட்டம், சமூகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மிக அதிக ஊதியம் பெறும் பதவிகளில் குவிந்து வருகிறார்கள். மற்ற பெரும்பகுதி பிரிவினர். உயர் பதவிகளில் இப்போதுதான் உள்ளே நுழைய கதவு திறந்திருக் கிறது. இந்த நிலையில், இடஒதுக்கீடு மட்டுமே இவர்களுக்கான பாதுகாப்பு” என்றார் வார்கா.

“அனைவருக்கும் நீதி; ஆனால் ஒருவருக்கும் திருப்தி இல்லை” - என்று இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைக்கப்படும் முழக்கத்தை ஏற்க முடியாது, அது ஆபத்தானது என்று எச்சரித்தார். சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தவும், பாகுபாடு காட்டி விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையை “தகுதி - திறமைக்கு” எதிரானதாக நிலைநிறுத்தும் முயற்சிகள் கண்டனத்துக்கும் வருத்தத்துக்கும் உரியது”என்று கூறிய அவர், “ஜாதி அமைப்பைப் பிரிட்டிஷ்காரர்கள்தான் உறுதிப் படுத்தினார்கள் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது” என்றார்.

“ஜாதியப் பிளவுகள் - ஜாதியப் பாகு பாடுகள் - அது சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு களை மிக விரிவாக ஆவணப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். உண்மையில் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார்.

“தொழில்நுட்பம் பயின்ற உயர் வர்க்கம் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது பற்றி அவரிடம் பார்வையாளர்கள் கேட்டதற்கு தனியார் துறை குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை இப்போதும் ஜாதியப் பாகுபாடுகளைப் பின்பற்றியே வருகிறது என்பது வெளிப்படையான உண்மை, தலித் இலக்கியவாதிகளின் செயல்பாடுகள் வளர்ந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதற்கு போதுமான முக்கியத்துவம் தராமல் புறக்கணிக் கின்றன. எனவே, தலித் இலக்கிய வாதிகள் சமூக வலை தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் முன்னணி ஊடகங்கள் தொடர்ந்து தலித் பிரச் சினைகளைப் புறக்கணித்து வருகின்றன.

இந்த ஊடகங்களில் தலித் பிரதிநிதித்துவம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது” என்றார் திருமதி வார்கா அய்யர் - சமூக ஆய்வாளர் என்ற முறையில் விருப்பு வெறுப்பின்றி சமூக நீதிக்கான குரலை ஒலித்திருக்கிறார். (செய்தி: 6.12.2014, ‘இந்து’ ஆங்கில ஏடு)