சிறைவாசிகளை விடுதலை செய்யவும் தண்டனைக் குறைப்பு செய்யவும் மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அரியானா மாநில அரசு தொடர்பான ஒரு வழக்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிறைவாசிகள் தண்டனைக் குறைப்பை மாநில அமைச்சரவை எடுப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்று அரியானா அரசு 2008இல் முடிவு எடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மாநில அரசின் உரிமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ‘433ஏ’ பிரிவு ஆயுள் தண்டனை சிறைவாசி 14 ஆண்டுகள் தண்டனையை அனுபவிப்பதை உறுதி செய்கிறது. 14 ஆண்டு தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. 14 ஆண்டுகள் தண்டனை முடிவதற்கு முன்பு விடுதலை மாநில அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்மானித்திருக்கிறது. ஆளுநரின் ஒப்புதல் என்பது ஆளுநர் தன்னிச்சையாக எடுப்பது அல்ல. அது மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆளுநரின் ‘அதிகார வரம்பை’யும் தெளிவுபடுத்தியிருக்கிறது. தீர்ப்பில் இது குறித்து இடம்பெற்றுள்ள வாசகம்:

“Recommendation of the appropritate government is binding on the head of the state” மாநில அரசு எடுக்கும் தண்டனைக் குறைப்பு முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது. அதற்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்று தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி இது தொடர்பாக மாநில அரசு ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே உத்தரவு பிறப்பிக்க முடியும் (State Government can issue an order in this regard ‘even without the governor’s approval’) எனும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள ‘மரபு’க்காகவே ஆளுநர்கள் ஒப்புதல் பெறப்படுகிறதே தவிர, ஆளுநருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை; எனவே இந்த ‘மரபு’ நீடிக்கலாம்; அதை நீக்க வேண்டும் என்பதை முடிவுக்கு உச்சநீதிமன்றம் வந்திருக்கிறது. இந்த நிலையில் பேரறிவாளன், நளினி, இரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலையில் தமிழக அரசு இத்தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வருகிறது.

கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு

மனைவியின் விருப்பமின்றி பாலுறவுக்கு கட்டாயப்படுத்தும் கணவனிடமிருந்து மனைவி விவாகரத்து கேட்கலாம் என்ற புரட்சிகரமான தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. சட்டத்தில் கணவனைத் தண்டிக்க இடமில்லை என்றாலும் மனைவி விவகாரத்து கேட்கலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்