சட்டமன்றம் என்கிற போது, ஜெயக்குமார் ‘Legislative assembly’ என்கிற சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு வாதம் புரிவதாக நான் நினைக்கிறேன். சட்டமன்றம் என்றால் Assembly என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றம் என்றால் இந்தியாவில் அதிலும் குறிப்பாக சென்னை இராஜதானியில் சட்டமன்றம் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. முதலில் அதற்குப் பெயர் Legislative Council. அந்த Legislative Council என்பது காலனி ஆதிக்க காலத்தில் கவர்னருடைய Executive, நிர்வாகக் குழுவாகத்தான் இருந்தது. அந்த நிர்வாகக் குழுவில் சட்ட விசயங்களைப் பற்றி பரிசோதிப்பதற்காக ஒரு சட்ட உறுப்பினர் நியமிக்கப்படுவார். அனைவருமே நியமன உறுப்பினர்கள், அதிகாரிகள்; அங்கே மக்கள் பிரதிநிதிகள் கிடையாது. ஜெயக்குமார் யாருடைய குரலாக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. 1930க்கு மேல் இந்த சட்டமன்ற வரலாற்றைத் துவக்க விரும்பினால் அதற்கு முன்னால் இருக்கக்கூடிய வரலாறுகள் என்பது நமக்கு பெருமைப்படக்கூடிய வரலாறாக இல்லை என்று கூற வருகிறாரா என்று தெரியவில்லை.

1939ற்கு முற்பட்ட சட்டமன்றத்தில் தான், Legislative Assembly என்று சொல் லப்படுகிற சட்டமன்றத்தில் தான் ‘இந்து அறநிலையத்துறை’ உருவாக்கப்பட்டது. இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. பஞ்சமி நிலம் பகிர்ந்தளிக்கப் பட்டது. பல்கலைக் கழகங்கள் மாநில அரசின் கட்டுப் பாட்டில் வந்தன. புதிய பல்கலைக் கழகங்களாக அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள், ஆந்திர பல்கலைக்கழகங்கள் வந்தன. தமிழுக்கு பல்கலைக் கழகங்களில் படிப்புக்கு இடம் கொடுக்கப் பட்டது. மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருதம் என்ற தடை நீக்கப்பட் டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட் டது. தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்காக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்ததெல்லாம் அந்த காலகட்டத்தில் தான்.

சட்டமன்றத்தின் தோற்றம் என்பது நிர்வாக குழுவில் இருந்து வருகிறது. 1862ஆம் ஆண்டுதான் முதன் முதலாக இந்த நிர்வாக குழுவிலிருந்து இந்த சட்ட குழு ஒன்றினை உருவாக்குகிறார்கள். அதில் நியமன உறுப்பினர்களாக இந்தியர்களை நியமனம் செய்கிறார்கள். அதற்கு பட்ஜெட்டை கட்டுப்படுத்துகிற அதிகாரம் கிடையாது. அரசை விமர்சனம் செய்கின்ற அதிகாரம் கிடையாது. ஆலோசனைக் குழுவாக மட்டுமே செயல்பட்ட ஒன்று. 1892இல் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. 1909இல் வந்த சட்டத்தின் பெயரே ‘Indian council act’ என்பது தான். அந்த சட்டத்திலும் விரிவாக்கம் நடைபெற்றது. அது இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது. நாம் இங்கு சட்டமன்றம் என்று கூறுகிறபோது 1862இல் இருந்த சட்டமன்றத்தையோ 1892இல் இருந்த சட்டமன்றத்தையோ 1909ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட சட்டமன்றத்தையோ நாம் ஒரு பெரிய நிகழ்வுக்கான அல்லது விழாவுக்கான நிகழ்வாக எடுத்துக் கொள்வதில்லை.

தேசிய இயக்கம் என்பது அதிகாரிகளாக இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றுதான் துவங்கியது. தமிழ் நாட்டில் மகாசபைகளையெல்லாம் கூறுகிறார்கள். மகா சபைகள் என்பது பிராமணர்கள் அரசாங்கத்தின் பிடியில் இருந்து தங்களை தனித்து வைத்துக் கொள்வதற்காக தங்களுக்குள் அமைக்கப் பெற்ற ஒரு மன்றம் அது. அதில் வாக்காளர்களும் பிராமணர்கள், தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் பிராமணர்கள். ஏனென்றால் பிராமணர்களை பிறர் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காக. அந்த தன்னாட்சி உரிமைகள் பிராமணர் அல்லாதவர்களுக்கு எந்த பேரரசு காலத்திலும் தரப்பட்டதாக பதிவுகள் இல்லை. தன்னாட்சி என்றால் செல்வாக்குப் பெற்ற ஒரு சிறு பிரிவிற்கு மட்டுமே வாய்ப்பு என்பதாக நடைமுறையில் இருந்தது. ஆனால் உண்மையில் தன்னாட்சி என்பது அந்த தேசத்தின் சமூகப் பிரிவுகளில் அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்தும் தருவது தான்.

1919 வரையில் தன்னாட்சி என்பதன் அமைப்பிற்குள் நுழைந்தவர்கள் சில ஆதிக்கப் பிரிவுகளைச் சேர்ந்த சமூகத்தவர்கள் மட்டுமே. இஸ்லாமியர்கள் கூட படித்தவர்கள், நிலவுடமையாளர்கள் தான் ஆரம்பகட்டத்தில் இவர்களுடன் போட்டியிட்டார்கள். மற்றவர்களுக்கு அதில் இடமில்லை. அதுவும் சட்டமன்றம் தான். அந்த சட்டமன்றத்தில் மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது கிடையாது. சிலர் நியமன உறுப்பினர்கள். சிலர் பணத்தின் அடிப்படையில், படிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். இதை எப்படி ஒரு ஜனநாயக அமைப்பாக நாம் கருத முடியும்.

ஆனால் முதல் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அரசியல் போராட்டங்கள் இவற்றை வைத்துக் கொண்டு வரலாற்றைப் பார்க்க வேண்டும். மாண்டேகு 1919 ஆகஸ்டு அறிக்கையில் இந்தியர்களுக்கு படிப்படியாக தன்னாட்சி அமைப்பை தரப் போகிறோம் என்று அறிவித்தார். இங்கிருந்த காங்கிரசார்கள் அதை உடனடியாக தாருங்கள் என்று கேட்டார்கள். இந்த அறிக்கைக்குப் பின் இந்திய அரசுச் சட்டம் என்பதாக ஒன்றினை இங்கிலாந்து பாராளுமன்றம் 1919 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி சட்டமன்றத்தில் இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த அமைச்சர்களுக்கு அரசை விமர்சிக்கவும் உரிமை வழங்கப்பட்டது. இந்த சட்டமன்றத்திற்கும் முன்பிருந்த சட்டமன்றத்திற்கும் இருந்த வேறுபாடு இது தான்.

1919 நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அனைவரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. ஆனால் இதை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அப்போது போட்டியிட்ட நீதிக்கட்சி இருந்தது. தன்னாட்சி என்பது சிறு பிரிவினர் மட்டும் கொண்டதாக இருக்கக்கூடாது சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக நீதிக் கட்சியினர் பரப்புரை செய்தார்கள். இந்த மாற்றத்திற்காக இங்கிலாந்து வரை சென்று அவர்களை மாற்றிய பெருமை நீதிக் கட்சியினருக்கு உண்டு. குறிப்பாக திராவிடத் தலைவர்களில் முன்னோடியான டி.எம். நாயர். அவர் தனது சொந்த பணத்தை செலவழித்துக் கொண்டு இங்கிலாந்து இரண்டு முறை பயணம் செய்து, தனது உடல் நலத்தையும் கவலை கொள்ளாமல் இங்கிலாந்திலேயே உயிரையும் விட்டவர் டி.எம்.நாயர். அவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் கோரிக்கைகளை இங்கிலாந்து நாடாளுமன்றம் குறித்து வைத்துக் கொண்டது. அதன் பிறகு பலர் சென்றனர். இத்தனை இழப்புகளுக்கு பின்புதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை பிராமணர் அல்லாதாருக்கு ஒதுக்குவது என்ற முடிவை எடுத்தார்கள். அதற்கு முன்பு வரை சட்டமன்றத்தில் 90% பார்ப்பனர்கள் இருந்த நிலை மாறி அனைத்து சமூகத்தினருக்கும் பிரிதிநிதித்துவம் கிடைத்தது.

ஆங்கிலேயர்கள் கேட்டார்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறீர்கள், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பிராமணர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறீர்களே இது ஏன் என்று வியந்து கேட்டார்கள். இதற்கு டி.எம்.நாயர் விளக்கம் அளித்தார். ‘இந்திய சமூகத்தின் இழிவான நிலையை நீங்கள் அறிய மாட்டீர்கள். என்றுமே பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்பட்டும் உரிமை மறுக்கப்பட்டும் தான் இருக்கிறார்கள். இதை மாற்றுவதற்காகத்தான், ஜனநாயகப் படுத்துவதற்காகத்தான் நாங்கள் இட ஒதுக்கீடு கேட்கிறோம்’ என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார். அதன் பிறகு தேர்தல் நடந்தது அதில் அனைத்து அனைத்து பிரிவினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. நீதிக்கட்சி 65 இடங்களைப் பெற்று வெற்றியடைந்தது. பார்ப்பனர்கள் 22 இடங்களைப் பெற்று தோல்வியடைந்தனர். இந்திய வரலாற்றில் 1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அதன்மூலம் 1921 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட மன்றம் என்பது இந்திய வரலாற்றில் ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கான துவக்கம். இதுதான் தென்னிந்திய சட்டமன்றத்தின் துவக்கம் என்று கூற வேண்டியது. இந்த துவக்கத்தை மறுத்து விட்டால் ஜனநாயகத்தை மறுப்பதாக ஆகிவிடும்.

ஜெயக்குமார் ஜனநாயகத்தை மறுக்கிறாரா?

பேராசிரியர் கருணானந்தம்