தமிழக பா.ஜ.க. தலைவராகியுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க புதிய புதிய திட்டங்களை அமுல்படுத்தப் போகிறாராம்.

அ.இ.அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள ‘முக்குலத்தோர்’ ஜாதியினரை, கட்சிக்குள் இழுப்பது; ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொண்டு கிராமங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது; ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ‘என்.ஜி.ஓ.’ அமைப்புகளை கிராமங்களில் இறக்கி பிரச்சாரம் செய்வது என்று திட்டம் வைத்திருப்பதாக ‘தினமலர்’ எழுதுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன், வல்வில் ஓரி, பூலித்தேவன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, இராணி மங்கம்மாள் போன்ற தலைவர்கள் வரலாறுகளை இளைஞர்களுக்கு அறியச் செய்யப் போகிறார்களாம்.

போகிற போக்கைப் பார்த்தால் ஒரு சில ‘தமிழ்த் தேசிய’ குழுக்கள் பயன்படுத்தும் ‘ஆயுதங்களை’ பா.ஜ.க.வினரும் கையில் எடுப்பார்கள் போலிருக்கிறது.

‘இந்துத்துவா’ கோட்பாட்டை தமிழ்மயமாக்கி விட்டால் தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.

மோடி ஆட்சியின் ‘சாதனை’களைப் பட்டியலிட்டால் தங்களின் முகத்திரை கிழிந்து தொங்கும் என்பது அண்ணாமலைகளுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. எனவே ‘மோடி’யை நம்புவதைவிட ஒரு நூற்றாண்டு முன்பு வாழ்ந்த குறுநில மன்னர்களை நம்பினால் ‘கரை ஏறி’ விடலாம் என்று கணக்குப் போடுகிறது - பா.ஜ.க.! அய்யோ பாவம்!

‘நீட்’ தேர்வுக்கு உயிர்ப்பலியான அனிதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் வரலாறுகளை சொல்ல மாட்டார்கள்.

மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை, கல்வி உரிமை, விவசாய உரிமை, மீனவர் உரிமை போன்ற உரிமை பறிப்புகளை பேசவே முடியாது.

கொரானா 2ஆவது அலையை மிக மோசமாகக் கையாண்டதைச் சொன்னால் மக்கள் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார்கள். தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதில் நடந்த தடுமாற்றம் குழப்பங்களைப் பேசவே முடியாது.

நாட்டின் பொருளாதார சீர்குலைவு குறித்து வாய் திறக்கவே முடியாது.

‘இந்து தர்ம ஆட்சியை நிறுவிட மீண்டும் ஜாதி - குல தர்மத்தைக் காப்பாற்றப் போகிறோம்’ என்று வெளிப்படையாகக் கூற முடியாது.

சமஸ்கிருதத்தை தேசியப் பண்பாடாக மாற்றி நாட்டை வேத காலத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறோம் என்று உழைக்கும் மக்களிடம் போய் சொன்னால், மக்கள் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

இந்துத்துவ அரசியலையோ மோடி சாதனைகளையோ பட்டியல் போட முடியாதவர்கள், குறுநில மன்னர்களை இழுத்து வந்து ஜாதியையையும் அ.தி.மு.க. அதிருப்தியாளர்களையும் அணி திரட்டி கட்சி வளர்க்கத் திட்டம் போடுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பாலியல் குற்றம், பண மோசடி, கிரிமினல் வழக்குகளில் சிக்குவோரில் பா.ஜ.க.வினர் பெயர்களே ஊடகங்களில் சந்தி சிரிக்கிறது. இந்த நிலையில் ‘அண்ணாமலைகள்’ இப்படி புதிய வேடங்களைப் போட்டு மக்கள் மேடைக்கு வருகிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்