உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் ராஜகோபால், ஜூலை 18ஆம் தேதி இறந்தார்.

ஏழு வயதிலிருந்து உழைத்து உயர்ந்தவர் ராஜகோபால். ஆரம்ப காலத்தில் மெஸ் நடத்தியவர். ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகு, அவர்கள் பயன்படுத்திய இலைகளைப் பிரித்துப் பார்ப்பாராம். எந்த உணவு அய்ட்டத்தைச் சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்கள், எதை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பாராம். அதை வைத்து அடுத்த வேளைக்கான சாப்பாடு மெனுவை மாற்றியமைப்பார். இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தித்தான் ஓட்டல் தொழிலில் உச்சத்தை அடைந்தார் ராஜகோபால்.

ஓட்டல் தொழிலில் பார்ப்பனர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்த அவர் தொடங்கிய ‘சரவண பவன்’ ஓட்டல்கள் சென்னையில் பார்ப்பனர்கள் ஓட்டலுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. ‘சரவண பவன்’ அதன் கிளைகளை உலகம் முழுதும் கொண்டு சென்றது. பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாடு களில் ‘நாடார் சமையலில் உணவு வழங்கப் படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்தப் புரட்சியின் தொடர்ச்சியாகவே ‘சரவண பவன்’ வெற்றிக் கொடியை பறக்கவிட்டது என்று சொல்லலாம். அத்தகைய வெற்றியாளர் சோதிட மூட நம்பிகையில் வீழ்ந்தார்.

26.10.2001 - இதுதான் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட நாள். ராஜகோபாலின் வெற்றி வாழ்க்கையை மாற்றிய நாளும்கூட.

‘ஆபரேஷன் கந்தாஸ்’ என்று பெயரிட்டு, இந்தக் கொலை வழக்கைத் துப்பறிய தனிப்படை அமைத்தார் அப்போதைய காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன். அதில் தியாகராயர் நகர் துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன், கிண்டி உதவி ஆணையர் ராமச்சந்திரன், வேளச்சேரி ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் சேகரித்த தடயங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். இதையடுத்தே கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபா லுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘ராஜகோபாலை திசை திருப்பியது யாரோ ஒரு ஜோசியக்காரர்தான். புதியதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால், பெரிய ஆளாகலாம் என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பி தவறான பாதையில் சென்று விட்டார். ஜீவஜோதியைத் திருமணம் முடிக்க நடந்த முயற்சியில்தான், அவரின் கணவர் சாந்தகுமார் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சமயத்தில் திடீரென்று ஒருநாள் துணை ஆணையர் சண்முகராஜேஸ்வரனைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று ராஜகோபால் தரப்பினர் கேட்டனர். முதலில் யோசித்த துணை ஆணையர், பிறகு ஒப்புக் கொண்டார். ‘இந்த வழக்கில் உங்கள் பெயர் எங்களை உறுத்துகிறது. அண்ணாச்சி அன்றாடம் வழிபடும் முருகனை நினைவு படுத்துகிறது. நீங்கள் விலகிக் கொண்டால்...’ என்று பேச்சை ஆரம்பித்தார்கள். இடைமறித்த துணை ஆணையர், ‘இதை வேறு கோணத்தில் பாருங்கள். ராஜகோபால் வழிபடும் அதே முருகன்தான் என்னை விசாரிக்கவே சிறப்பாக நியமித்திருக்கிறார்’ என்று பதிலடி தந்தாராம் அந்த அதிகாரி. ஜூனியர் விகடன் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது