அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)

நில உரிமையாளர் தனது நிலத்தை திரும்பக் கேட்டால் குத்தகைதாரர் மிகக் குறைவாக கேட்பது மூன்றில் ஒரு பகுதி நிலமோ அல்லது அதற்கு ஈடான பணமோ. நில உரிமையாளர் அதிகாரம் மிக்கவராக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வழங்கிவிட்டு மீதி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நில உரிமையாளரின் அதிகார பலம் குறையக் குறைய குத்தகைதாரரின் பங்கு கூடும். நில உரிமையாளர் உள்ளூர்க்காரராக இல்லாமலும் சாதி மற்றும் இதர பலம் இல்லாதவராக இருந்தால் ஒரு சென்ட் நிலம் கூட பெற முடியாது. ஆக, இந்தப் பேரத்தை தீர்மானிப்பது இவர்கள் இருவரது பலங்கள்தான். பதிவுபெற்ற குத்தகைதாரர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பது ஒருபுறம். பதிவு பெறாத குத்தகைதாரர்களும் இத்தகைய சமுதாய பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். சட்டம் அளிக்கும் பாதுகாப்பு என்பது குத்தகைதாரர்களின் வெளியேற்றத்தைத் தடுப்பது மட்டுமே. ஆனால், உழவடை பாத்தியமோ அவர்களுக்கு இழப்பீட்டை உறுதி செய்கிறது.

குத்தகைதாரர்கள் புதிதாகப் பெற்ற இந்த அதிகாரத்தை நிலை நிறுத்துவதில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெற்ற அரசியல் அதிகாரமும், தலித் மக்களின் எதிர்ப்பு அரசியலும் பெரிதும் உதவின. இதன் விளைவாகக் குத்தகையின் அளவு காலப் போக்கில் வெகுவாகக் குறைந்தது. இந்தக் குறைவான குத்தகையைக்கூட அளிக்காவிட்டாலும் குத்தகை தாரரை ‘ஏன்’ என்று கேள்வி எழுப்ப முடியாத சூழல் பிறந்தது. நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்குவது என்பது மிகவும் காலம் பிடிக்கும் ஒன்று. அப்படியே நில உடைமையாளர் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெற்றாலும் அதனை நடைமுறைப் படுத்துவது என்பது இயலாத ஒன்று. இதனால் குத்தகைதாரர்கள் கூடுதல் தைரியம் பெற்றார்கள். இச்சூழலைக் கணக்கில்கொண்டுதான் CPI(M) முன்னணித் தலைவர் ஒருவரிடம் இதுகுறித்து எனது களப்பணியின்போது விவாதித்தபோது ‘குத்தகை’ என்பது இப்போது ஒரு பிரச்சினையே அல்ல என்று தெரிவித்தார்.

இப்படியாக அரசியல், வரலாறு மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றிணைந்து நிலப்பிரபுத்துவத்தைக் காவிரி டெல்டா பகுதிகளில் வீழ்த்தின. குத்தகை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்றானது. இதனை ஒரு சிறிய அளவில் சரிபார்க்க எண்ணி மேலத்தஞ்சையிலுள்ள ஒரு கிராமத்தைத் தேர்ந் தெடுத்தேன். இந்தக் கிராமம் முன்காலத்தில் முழுவதும் பார்ப்பன நில உரிமையாளர்களைக் கொண்ட கிராமம். எல்லா நிலமும் அவர்களுக்கே சொந்தமாக இருந்தது. இக்கிராமத்தின் பெயரைப் பேட்டை என வைத்துக் கொள்வோம். பார்ப்பனர்கள் வழக்கம்போல் இரண்டு அக்ரஹாரத் தெருக்களில் தனியாக வசித்தனர். கள்ளர்கள் தனி வீதியில் வசித்தனர். கள்ளர்கள் பார்ப்பனர்களின் குத்தகைதாரர்களாகவோ, காரியக்காரர்களாகவோ இருந்து வந்தனர். பறையர் மற்றும் தேவேந்திர குல வெள்ளாளர்கள் வயல்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகள். இவர்களல்லாது இன்ன பிற சேவை சாதியினரும் வசித்தனர்.

பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு முன்பே முறையான கல்வியைப் பெற்று நகர்ப்புற வேலை வாய்ப்புகளைத் தேடிப் புலம்பெயர்ந்தனர். இந்தியா முழுவதும் இவ்வாறு இவர்கள் வேலை தேடிச் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டனர். குத்தகையை அவர்களே நேரில் பெற்றனர். அல்லது அப் பொறுப்பை ஊரிலேயே இருந்த தங்கள் உறவினர் களிடம் ஒப்படைத்தனர். ஒரு சிலர் தங்கள் நிலங்களைத் தங்களது பண்ணையாட்களிடமே குத்தகைக்கு அடைத்தனர். இவ்வாறு புலம் பெயர்ந்த வர்களல்லாது உள்ளூரில் வசித்த பார்ப்பனர்கள் பலரும் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் தங்கள் நிலங்களைப் பண்ணையாட்கள் கொண்டு நேரடியாக விவசாயம் செய்தனர். தஞ்சை மாவட்டத்தின் பல பார்ப்பன கிராமங்களில் நிகழ்ந்ததுபோல் பேட்டையிலிருந்து அனைத்துப் பார்ப்பனர்களும் புலம்பெயரவில்லை. ஒரு சில பெரிய நிலச் சுவான்தார் குடும்பங்களின் உறுப்பினர்கள் பேட்டையிலேயே தங்கிவிட்டனர்.

பேட்டையில் நிலவியது குத்தகை முறை. அதாவது குறிப்பிட்ட அளவு நெல்லோ அல்லது அதற்குண்டான பணமோ வருடா வருடம் நில உடைமையாளருக்குக் குத்தகைதாரர் அளிக்கும் முறை. ஏனெனில், பேட்டை நீர்வளம் குன்றாத பகுதி. இதனால் உற்பத்தியில் ஒரு நிச்சயத்தன்மை இருந்தது. இப்படிப்பட்ட பகுதிகளில் (குறிப்பாகப் பேட்டை போன்ற கிராமங்களில்) நெல் விளைச்சல் கூடுதலாக வும் நிச்சயமாகவும் இருந்து வந்தது. குத்தகைதாரர்கள் அறுவடை முடிந்ததும் குத்தகையைத் தவறாமல் அளந்து வந்தனர் (பார்ப்பனர்களை சாமி என்று அழைத்த காலம் அது). கீழத்தஞ்சையில் வலுப்பெற்ற இடதுசாரி இயக்கம் ஒருபுறம், திராவிடக் கட்சிகளின் பெருகும் பலம் ஆகிய இரண்டும் குத்தகைதாரர் களுக்கு புதிய வலுவைச் சேர்த்தன.

1967இல் திமுக ஆட்சியைப் பிடித்ததும் கள்ளர்கள் மற்றும் தலித்துகளின் மீதான பார்ப்பனர்களின் பிடி தளர்ந்து போனது. குத்தகைதாரர்கள் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க இழப்பீடு கேட்கத் தொடங்கினார்கள். பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை இழக்கத் தொடங்கியதும் அவர்கள் குத்தகைக்கு விட்ட நிலங்களை மீட்பது பெரும் சவாலாக மாறியது. குறிப்பாக வெளியூர் சென்ற பார்ப்பனர்களால் நிலத்தை மீட்பது இயலாமல் போனது. பலரும் தங்கள் நிலங்களைக் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு குத்தகைதாரர்களிடமே விற்றுவிட்டனர். குத்தகைதாரரால் வாங்க முடிய வில்லை என்றால் அவர் யாரைக் காட்டுகிறாரோ அவரிடம் அவர் சொன்ன விலைக்கு விற்றுவிட்டு வெளியேறினர். விற்பனைத் தொகையில் பெரும்பகுதி குத்தகைதாரருக்குத்தான் சென்று சேர்ந்தது. பலரும் அக்ரஹாரத்திலிருந்த வீடுகளையும் பிறருக்கு (கள்ளர்கள்) விற்றுவிட்டு பேட்டையை விட்டே சென்றுவிட்டனர். இவ்வாறாகத்தான் முன்னாள் குத்தகைதாரர்களான கள்ளர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் பேட்டையின் நில உடைமைய hளர்களாயினர்.

2016ஆம் ஆண்டு நிலவரப்படி பேட்டையிலிருந்த வேளாண் நிலப்பரப்பில் 62 விழுக்காடு கள்ளர்களிட மும் 22% நிலப்பரப்பு தேவேந்திரர்களிடமும் இருந்தது. மொத்த பரப்பையும் வைத்திருந்த பார்ப்பனர்கள் 2016இல் வெறும் 10% பரப்பையே வைத்திருந்தனர். 1967க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் பேட்டை கிராமத்தில் 786 பதிவுகள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளன. ஏறத்தாழ 571 ஏக்கர் நிலம் விற்று வாங்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்கள் இக்கால கட்டத்தில் வாங்கிய நிலங்களை விட 197 ஏக்கர் நிலம் கூடுதலாக விற்றுள்ளனர். இதற்கு நேர் மாறாக, கள்ளர்கள் தாங்கள் விற்ற நிலத்தைவிட 140 ஏக்கர் நிலம் கூடுதலாக வாங்கியுள்ளனர். தேவேந்திரர்கள் கூடுதலாக வாங்கியது 53 ஏக்கர் நிலமாகும். விற்று வாங்கிய மொத்த எண்ணிக்கையில் 70% எண்ணிக்கைகள் சந்தை முறைப்படி விற்று வாங்கப்பட்டவையாகும். 30% எண்ணிக்கைகள் (விற்று வாங்கியவை) நில உடைமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே நடைபெற்றவை யாகும். பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்ட விற்பனையில் 45% விற்பனைகள் குத்தகைதாரர்களுக்கும் அவர்களுக்குமிடையே நிகழ்ந்தவை. சந்தை சார்ந்த விற்று வாங்குதலில் அவர்களால் 55% பரிவர்த்தனைகளையே மேற்கொள்ள முடிந்தது. கள்ளர்கள் மற்றும் தேவேந்திரர்களைப் பொறுத்தவரை முறையே 91%, 83% பரிவர்த்தனைகள் சந்தை சார்ந்த பரிவர்த்தனைகள்.

நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் தாங்கள் விற்ற நிலப்பரப்பில் ஒரு பாதி அளவிற்கே சந்தை விலையில் விற்க முடிந்திருக்கிறது. மற்ற பாதியை தங்கள் குத்தகைதாரர்களுக்கு விற்றிருக் கிறார்கள். ஆனால், கள்ளர்களும் தேவேந்திரர்களும் தாங்கள் விற்ற நிலத்தில் பெரும் பகுதியைச் சந்தை விலைக்கே விற்றிருக்கிறார்கள். அனைத்து விற்று வாங்கிய பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டால், நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி குத்தகை சார்ந்து விற்று வாங்கியதாகும். இந்த நில உடைமை மாற்றம் 1975க்கும் 1995க்கும் இடையே பெரும் எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளது.

பேட்டை கிராமத்திற்கான குத்தகைதாரர் பதிவேடு 131 குத்தகைதாரர்களைக் கொண்டுள்ளது. குத்தகை நிலப்பரப்பு (பதிவு பெற்றது) 157.41 ஏக்கர்களாகும் (1971இல்). குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பரப்பில் முக்கால் பகுதி பரப்பு பார்ப்பனர் களுக்குச் சொந்தமானது. மீதமுள்ள கால் பகுதி கோயில் நிலங்களாகும். குத்தகைதாரர்களில் 60 விழுக்காட்டினர் கள்ளர்கள். தேவேந்திரர்கள் 30 விழுக்காடு. நிலப்பரப்பில் 57% குத்தகை நிலம் கள்ளர்கள் வசமிருந்தது. தேவேந்திரர்கள் குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒன்றை வைத்திருந்தனர். பார்ப்பனர்கள் 10% நிலத்தை (குத்தகைக்கு விடப்பட்டிருந்த மொத்த பரப்பில்) குத்தகைக்கு வைத்திருந்தனர்.

1971இல் குத்தகைக்கு விடப்பட்டுப் பதியப்பட் டிருந்த நிலம் அனைத்தும், 2016இல் குத்தகை தாரர்கள் வசம் சென்று சேர்ந்திருந்தது. இதற்கு விதி விலக்கு குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்கள் மட்டுமே.

அரசு இயற்றிய சட்டங்கள், விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னெடுத்த போராட்டங்கள், பார்ப்பனரல்லாதோர் இயக்கம், பார்ப்பனர்களின் புலம்பெயர்வு, கிராமங்களில் அதிகார மாற்றம், திராவிடக் கட்சிகளின் ஆட்சி பலம் ஆகிய அனைத்தும் இணைந்தே இம்மாற்றத்தை உருவாக்கின. அரசின் சட்டங்களால் மட்டும் இம்மாற்றங்கள் நிகழாது போயிருக்கலாம். சட்டம் மட்டுமே மாற்றத்தை விதைத்துவிடும் என நம்புவது சரியான அணுகுமுறையல்ல. ஏனெனில், இத்தகைய அணுகுமுறை அடிமட்டத்திலிருந்து கிளர்ந்து எழும் சமுதாய அரசியல் இயக்கங்களின் பங்களிப்பை உள்வாங்கத் தவறுகிறது.

இத்தகைய எழுச்சிமிகு சமுதாய அரசியல் இயக்கங்களின் செயல்பாட்டோடு சட்டமும் இணையும்போது பலராலும் அங்கீகரிக்கப்படத் தக்க சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படி உண்மையான (de facto) ஒரு சமுதாயக் கட்டளைச் சட்டம் (norm) உருவாகிறது. அதுமட்டுமல்ல, இத்தகைய கட்டளைச் சட்டம் பரவலாக ஏற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகிறது. போட்டி அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவும் சூழலோடு இந்தக் கட்டளைச் சட்டம் இணையும்போது வியத்தகு முடிவுகள் பிறக்கின்றன. ஓர் அரசியல் அமைப்பு உரிமைகளுக்காகப் போராடும் அதே சமயத்தில் மற்றோர் அமைப்பு வலிமையான சட்டங்களை இயற்றுகிறது. இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக உரிமைக்குப் போராடும் அமைப்பின் உறுப்பினர்களை மற்ற அமைப்பு கவர்கிறது.

இந்த மாற்றம் பிற்படுத்தப்பட்டோருக்குப் பயனளித்த அளவிற்கு தலித்துகளுக்குப் பயனளிக்க வில்லைதான். அதிகார அமைப்பு மாறிய சூழலில் நடைபெறும் பேரங்களின்போது மேலாதிக்கத்தில் உள்ள சக்தி இந்தப் பேரத்தின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கின்றன. திராவிட இயக்கத்தின் விளைவாகத் தலித்துகளும், கள்ளர்களும் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்க்க முடிந்தது. தலித்துகள் தங்கள் உறுதியான செயல்பாடுகளால் கள்ளர்களின் அதிகாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். கள்ளர்கள் முன்பு பெருமளவில் குத்தகைதாரர்களாக இருந்ததால் இந்த மாற்றத்தில் அவர்கள் நிலத்தைக் கூடுதலாகப் பெற்றுள்ளனர். இப்படியாக, சட்டம் மட்டுமே செய்து முடிக்க முடியாத ஒன்றை, சமூக அரசியல் செயல்பாடுகளினால் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.