இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழ் நாட்டில் தனித்தன்மை காப்போம்; பரப்புரைக்கு பொது மக்கள் பேராதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனிச் சிறப்பைக் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 நாள் பரப்பரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து புறப்படும் பரப்புரைக் குழு  மட்டும் 7 நாட்கள் பரப்புரை நடத்துகிறது.

சென்னை பரப்புரைக் குழுவின் தொடக்கப் பொதுக் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி மாலை சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோயில் அருகே சிறப்புடன் நடந்தது. ‘விரட்டு’ பண்பாட்டுக் கலைக் குழுவினர் கலை நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தன. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், இந்தித் திணிப்பு, கதிராமங்கலம், புதுக்கோட்டை மக்கள் பாசனப் பகுதியை மலடாக்கும் ஓ.என்.ஜி.க்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட பயணத்தின் நோக்கங்களை விளக்கும் நிகழ்வுகளை இசையாக வும் வீதிநாடகங்களாகவும் நடத்தினர். கூட்டத் தினரை கலை நிகழ்ச்சிகள் மிகவும் ஈர்த்தன.

தொடர்ந்து சைதை மனோகரன் தலைமையில் கழகத் தோழர் சிவா வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணத்தின் நோக்கங்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகிலிருந்து பரப்புரைப் பயணம், பறை இசை முழக்கத்துடன் புறப்பட்டது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் படிப்பகத்தில் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பரப்புரை வாகனத்தில் பயணத்தின் கோரிக்கை முழக்கங்கள் - பெரியார், அம்பேத்கர், காமராசர் படங்களோடும் கோரிக்கை விளக்கப் படங்களுட னும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ண ஒட்டுப் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. பயணத்தின் கோரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு ‘டி’ சட்டைகளைஅணிந்து கழகத்தின் இளைஞர் பட்டாளம் உற்சாகத் துடன் பயணத்தைத் தொடங்கி யது. இந்துத்துவ பா.ஜ.க. சக்திகளின் மக்கள் விரோத கொள்கைகளை யும் மத வெறி ஜாதி வெறி ஆபத்துகளையும் மக்களிடையே கொண்டு செல்லும் இலட்சியப் பணி யாற்றப் புறப்படுகிறோம் என்ற பெருமிதமும் பூரிப்பும் உணர்வும் தோழர் களிடையே நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

சுட்டெரிக்கும் வெய்யிலில் முதல் பரப்புரை நிகழ்வு ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணியளவில் பல்லாவரத்தில் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கியது.

பயணத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான விழுப்புரம் அய்யனார் முதல் நாள் பயணம் குறித்து தந்துள்ள செய்தி:

முதல் நிகழ்வாக பல்லாவரத்தில் விரட்டு கலைக் குழுவினரின் பயணத்தின் நோக்கத்தை விளக்கி கலை நிகழ்ச்சி, வீதி நாடகம் நடைபெற்றது. மக்கள் விடுதலை (மா.லெ.) அமைப்பைச் சார்ந்த கண்ணன் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

பிற்பகல் 12 மணியளவில் பொழிச்சலூர் பேருந்து நிலையம் அருகிலும், மாலை  3 மணியளவில் பம்மல் பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 5 மணியளவில் குன்றத்தூர் அண்ணா சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. மக்கள் விடுதலை (மா.லெ) கட்சி சார்பில் செந்தில், சென்னை மாவட்ட கழக செயலாளர் இரா. உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்  இரவி பாரதி, விழுப்புரம் அய்யனார் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பாவலர் கீர்த்தி, குன்றத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் சாதி ஒழிப்புப் பாடலை பாடினார்.

மக்கள் விடுதலை  (மா.லெ.) அமைப்பைச் சார்ந்த சிறிராம், பரிமளா, தமிழ்க் குமரன் ஆகியோரும் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், வேழவேந்தன், இரா. செந்தில் குமார், யேசு குமார், சா. ராஜ், இலட்சுமணன், தர்மா, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோரும் பம்மல் வரை பங்கேற்றனர். சிறு வியாபாரிகள், பொது மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இரவு உணவு தங்குவதற்கு  அம்பேத்கர் சமூக நீதி அமைப்பைச் சார்ந்த பாண்டியராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த கரு. அண்ணாமலை ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இளநீர் குமார் மதிய உணவுக்கு ரூ.1000/-, இரவி பாரதி ரூ.500/- வழங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கழகத் தோழர்கள் மக்களிடையே துண்டறிக்கை வழங்குதல், கடை வசூல் என்று தோழர்களின் களப்பணி மக்களின் பாராட்டைப் பெற்றது.

இரண்டாம் நாள் பயணம் 7ஆம் தேதி தாம்பரத்திலிருந்து தொடங்குகிறது.

மயிலாடுதுறை பயணக் குழு ஆகஸ்டு 7 ஆம் தேதியும் மேட்டூர், கோவை, மதுரை பயணக் குழு  8 ஆம் தேதியும் பயணத்தைத் தொடங்குகின்றன.