தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சிறைவாசிகளின் உரிமைகளை வலியுறுத்தும் கருத்தரங்கம் கடந்த 20ஆம் தேதி சென்னை இக்ஷா அரங்கில் நடைபெற்றது.

இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்பாதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ. சவுந்தர்ராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பேசினர். இது குறித்து இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை :

•             அண்ணா பிறந்த நாளின்போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயலாகும்.

•             ஆனால், வழக்குக் காரணத்தைக் காட்டி தமிழக அரசு இந்த பழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 161இன்படி தண்டனையை இரத்து செய்யவும், குறைக்கவும், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில் ஒரு குற்றவாளி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின் நீதிமன்ற நடைமுறைகள் முடிவு அடைகின்றன. அதன் பின்னர் குற்றத்தின் தன்மை, குற்றம் நடந்த சூழல், சிறையில் அவரது நடத்தை, அவரின் வயது, குடும்பச் சூழல் ஆகிய இவைகளை கணக்கில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம். இது மாநில அரசின் உரிமையாகும். வழக்கு என்ற காரணம் காட்டி சிறைவாசிகளின் முன் விடுதலை குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் அது தன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.

•             தமிழகம் முழுவதும் 6700க்கு மேற்பட்ட வாழ்நாள் சிறைவாசிகள் 14 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக் கிறார்கள். இதில் முருகன், நளினி உள்ளிட்ட ஏழு சிறைவாசிகளும் அடக்கம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பொதுக் கருத்து ஆதரவாக உள்ளது. ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் சாதகமான நிலை எடுத்துப் பேசு கின்றன. இதை நாமும் ஆதரிக்கிறோம்!

•             ஆனால், இசுலாமிய சிறைவாசிகள் நிலையோ அந்தோ பரிதாபம். (இவர்களில் பலருக்கு உண்மையிலே  குற்றத்தோடு தொடர்பு இல்லை என்பது வேறு கதை) சிறை விதிகளின்படி கிடைக்க வேண்டிய பல உரிமைகள் இசுலாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படுகின்றன.

•             தமிழக சிறைகளில் 25 பேர், இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் (கொலைக் குற்றம்) தண்டிக்கப் பட்டவர்கள்; இவர்கள் குண்டு வெடிப்புக்கு முன்னரே கைது செய்யப் பட்டவர்கள். 9 வருடம் முதல் 21 வருடம் சிறையில் இருந்தாலும், இவர்களுக்கு முன் விடுதலை மறுக்கப்படுகிறது. அரசு 2008ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 1400 பேருக்கு வழங்கிய பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவில்லை. 7 ஆண்டு ஆயுள் சிறை தண்டனை பெற்றவர்கள் அப்போது விடுதலை செய்யப்பட்டார் கள். 7 ஆண்டுக்கு மேலாக சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது.

•             14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்தவர்களை அரசு ஆலோசனைக் குழு மூலம் விடுவிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், இச்சலுகை இவர் களுக்கு மறுக்கப்படுகிறது; நன்னடத்தை அலுவலர் பரிந்துரை செய்தும் குழுவில் விவாதிக்கப்பட வில்லை.

•             3 ஆண்டுகளுக்குமேல் சிறையில் தண்டனை அடைந்தவர்களுக்கு வருடத்திற்கு 15 நாள் வழிக் காவல் இன்றி காப்பு விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும் என்ற சிறை விதியை அமலாக்க மறுத்து விட்டார்கள். நீண்டகால காப்பு விடுப்பு வழங்க சட்டத்தில் இடமிருக்கிறது. இவையும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படுகிறது.

•             1997ஆம் ஆண்டு 19 முஸ்லிம் இளைஞர்  கொல்லப்பட்டனர். (கோவை அரசு மருத்துவமனையிலேயே 4 முசுலீம் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்) இக் கொலைகளைச் செய்தவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. 60க்கும் மேற்பட்ட இசுலாமிய இளைஞர்கள் பத்தாண்டு சிறைவாசத் திற்குப்பின் தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்த பிறகு குற்ற மற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் -

- என்று அந்த அறிக்கை கூறுகிறது.